"அம்மா இதெல்லாம் எனக்கு பழக்கமே இல்லை. எனக்கு இந்த சுடிதார் போதும். இப்படியே வரேனே ப்ளீஸ்" அவளும் முடிந்தவரை லட்சுமியிடம் பிடிவாதம் பிடித்து கொண்டிருந்தாள்.
"சரி பவித்ரா வேணாம். எனக்கு ஆசையா இருந்துச்சுனு தான் கேட்டேன்...பரவால்லை " என லட்சுமி சோகமாக அந்த அறையை விட்டு வெளியே செல்ல திரும்ப, அவரின் முகம் வாடுவதை கண்ட பவித்ரா, "அம்மா..."என்று அழைத்தாள்.
அவளை திரும்பி பார்த்த லட்சுமியிடம் "எனக்கு சாரீ எல்லாம் கட்ட தெரியாது " என்றாள் தலை குனிந்தபடி.
அடுத்த அரை மணி நேரத்தில் அவளுக்கு புடவை கட்டி விட்டவர் அவளை தன முன்னே நிறுத்தி பார்த்தார்.
"எவ்ளோ அழகா இருக்கு பாரு. இதை விட்டுட்டு எப்போ பாரு அந்த வெளுத்து போன சுடிதார் போட்டா எப்படி...ஹ்ம்ம்...ப்ளௌஸ் தான் கொஞ்சம் லூசா இருக்கு. பரவால்லை. வா போலாம்" என லட்சுமி பவித்ராவை அழைத்து கொண்டு வெளியே வந்தார்.
வெளியே டைனிங் டேபிளில் அமர்ந்து உமாவும் சத்யாவும் ஏதோ கதை பேசி கொண்டிருந்தனர். அரவம் உணர்ந்து திரும்பிய சத்யாவுக்கு பவித்ராவை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை.
சாதாரண காட்டன் சாரி தான், முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை தான். ஆனாலும் அந்த புடவையில் அத்தனை நளினமாக அவள் வருவதை கண்டவனுக்கு புரிந்தது அவள் இத்தனை நாளும் அவளின் அழகை ஏன் மறைத்து வைத்தாள் என.
அவன் அருகே வந்த லட்சுமி "ஹம்ம்கூம்"என மெல்ல குரல் கொடுக்கவும் டக்கென தன பார்வையை லட்சுமியிடம் திரும்பியவன், "என்னம்மா எங்கயோ கிளம்பிட்டிங்க போல" என்றான் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் அவள் புறமாக சாயும் மனதையும் அதனை தொடர்ந்து செல்லும் பார்வையையும் கட்டுப்படுத்தியபடி.
"ஆமாம் சத்யா, கோயிலுக்கு போறோம்" என லட்சுமி சொல்லவும் "நீங்க வரலையா?" என்றாள் பவித்ரா சத்யாவிடம்.
"இல்லை பவித்ரா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க போயிட்டு வாங்க" என சத்யா சொல்ல, அவர்கள் மூவரும் புறப்பட்டு சென்றனர்.
அவள் கோயிலுக்குள் நுழைந்து பலவருடங்கள் ஆகி விட்டது. அவள் அம்மா இருந்த வரை ஒவ்வொரு நாளும் மாலை நேரம் அருகே இருக்கும் கோயிலுக்கு சென்று வருவார்கள். அப்போதெல்லாம் அவரின் கண்கள் கலங்கி இருக்கும். அது அவளுக்கு நினைவில் வந்தது.