மின்னும் வண்ண காகிதங்கள் பவித்ராவின் தலை எல்லாம் மினுமினுக்க லட்சுமி, சத்யா, உமா மூவரும் முகமெல்லாம் சிரிப்பாக அவள் முன் நின்றிருந்தனர்.
பவித்ராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் ஏதேனும் கனவு காண்கிறோமா என புரியாமல் கண்கள் விரிய நின்றிருந்தாள் பவித்ரா.
"வா பவித்ரா கேக் கட் பண்ணு" சத்யா அழைக்கவும், "நா...நானா?...இன்னைக்கு...என் பர்த்டே...எப்படி...." இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருந்த பவித்ராவின் அருகே சென்ற சத்யா, "எஸ் இன்னைக்கு உன் பர்த்டே... வா கேக் கட் பண்ணு பவித்ரா" என்றான்.
பவித்ராவுக்கு கண்கள் கலங்கியது. அவளுக்கு பிறந்தநாள் என்று ஒன்று இருப்பதே மறைந்துபோனது. அவள் அம்மா இருந்த வரை அதெல்லாம் தவறாமல் கொண்டாடியவள் தான். அதன் பின் அவளே யாருக்கும் வேண்டாதவளாக இருந்த போது அவளுடைய பிறந்தநாள் மட்டும் யாருக்கு நினைவில் இருக்கும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் இருந்த பவித்ராவுக்கு அதெல்லாம் நினைவில் இல்லை. சொல்ல போனால் எல்லா நாளும் போராட்டத்துடன் கடக்கையில் எந்த நாளும் சிறப்பானதாக அவளுக்கு தோன்றவில்லை.
"வாம்மா " பவித்ராவின் கையை பிடித்து கேக் வைத்திருந்த டேபிளின் அருகே சென்று நிறுத்தியவர் அவள் கையில் கத்தியை கொடுத்து அதை கட் பண்ண சொன்னார்.
கலங்கிய கண்களை துடைத்து கொண்டவள் அந்த கேக்கை கட் செய்தாள். முதல் கேக் துண்டை லட்சுமிக்கும் உமாவுக்கு கொடுத்தவள் ஒரு துண்டை சத்யாவின் கைகளில் நீட்ட புன்னகையுடன் வாங்கி கொண்டான்.
"இந்தா பவிம்மா" என அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கிப்ட் பாக்ஸை எடுத்து பவித்ராவின் கைகளில் கொடுத்தார் லட்சுமி.
"அம்மா கிப்ட் எல்லாம்..." ஏதோ சொல்ல முயன்றவளை தடுத்தவர் "போதும் போதும்னு சொல்ற அளவுக்கு உனக்கு எல்லா சந்தோசமும் கிடைக்கணும் பவிம்மா" என அவள் தலையில் கையை வைத்து ஆசிர்வதிக்க அவரை அணைத்து கொண்டாள் பவித்ரா.
"அக்கா இந்தாக்கா" என உமா ஒரு சிறிய பாக்ஸை நீட்ட, "உமா நீ கூட கிப்ட் வாங்கிருக்கிய" என அவளின் நெற்றியில் இதழ் பதித்தவள் "தேங்க்ஸ் டா" என அவளை தோளோடு அணைத்து கொண்டாள்.
சத்யாவை பார்த்த லட்சுமி, உமாவின் புறம் திரும்பி "உமாக்குட்டி கொஞ்சம் என்கூட வாடா. ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரலாம்" என சொல்லி அவளை அழைத்து கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தார்.
சத்யாவை பார்த்தாள் பவித்ரா. அவளுக்கு தெரியும் இது எல்லாமே அவனின் ஏற்பாடு என.