(Reading time: 13 - 26 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"என்னை மன்னித்துவிடுங்க!" என்று அவள் மன்னிப்பினை வேண்டினாள். பொங்கி எழுந்த தாய்மையினை கட்டுப்படுத்த இயலாதவராய் தன் மகளினை அணைத்துக் கொண்டார் அவர்.

"என்னை மன்னித்துவிடு சிவா! அம்மா நீங்க மறுபடியும் பழைய மாதிரி பேசுற நாளுக்காக எப்போதும் காத்துக்கிட்டு இருப்பேன்!" அவள் மனதோடு, கண்களில் கண்ணீர் பெருக, அசோக்கினை நோக்கினாள் அவள். அனைத்தும் சரியாகிவிடும் என்பதாய் ஒரு புன்னகைப் பூத்தான் அசோக்!

வெள்ளி நிற வெண்ணாடை உடுத்தியதாய் விண்ணில் வீற்றிருந்த நிலவானவள், தன் வெண்ணிற ஔியாடைகளால் விண்ணினை அலங்கரித்திருந்தாள். மெல்லிய காற்றானது இராகத்தோடு, தாளமிட, மன அலைகளில் உச்சம் அங்கு உச்சத்தினை அடைந்திருக்க, சாளரத்தின் வழி இயற்கையின் அழகினை இரசித்திருந்தான் அசோக். அத்தனை நாட்களாய் அவள் உடனிருந்தும் ஏலாத ஏதோ ஒரு தடுமாற்றம் இன்று மனம் முழுதிலும் வியாபித்திருக்க, சில நேரங்களில் தன் கண்ணியத்தினை  தானே சந்தேகித்தான் அசோக்!

"டேய் மாப்ள! இன்னும் ரூமுக்கு போகாமல் என்னடா பண்ணிட்டு இருக்க?" என்ற நண்பர்களின் குரல் அவனை உசுப்ப, திருதிருவென விழித்தான் அவன். சப்தம் கேட்டவராய் உள்ளே எட்டி நோக்கிய சூர்ய நாராயணனின் விழிகளும் ஏனோ குழப்பத்தில் விரிந்தது. என்ன நினைத்தானோ அவன், ஒருவித பாவமான பாவனையை அவரிடத்தில் செலுத்த, அதைக் கண்டவருக்கு உண்மையில் தாளாத சிரிப்பே வந்தது. ஏதும் பேசாமல் அறைக்குச் செல்லும்படி கண்களால் அவர் செய்கைக் காட்டி நகர, சில நொடிகள் தயங்கியவன், பின், அவள் தனித்திருக்கும் அறை நோக்கிச் சென்றான். ஏதோ ஓர் விசித்ர உணர்வு இதயம் முழுதிலும் ஆட்கொண்டிருக்க, செயல்படாதவனாய் அறைக்கதவினைத் தாழிட்டான் அசோக்! அவ்வோசை கேட்டதுமே நிலைத்தடுமாறியவளாய், நின்றாள் சாளரத்தின் அருகே நின்றிருந்தவள். அவனது காலடி ஓசை  அவளது இதயத்துடிப்பினைக் காரணமே இன்றி அதிகமாக்கியது. அவனது ஸ்பரிசத்தினை அவன் நெருங்காமலே உணர்ந்தாள் அவள். திடீரென என்ன நினைத்தாளோ!

"இருங்க..இருங்க...அங்கேயே நில்லுங்க!" சில அடிகள் முன்பாகவே தன்னைத் தடுத்து நிறுத்தியவளை விசித்ரமாகப் பார்த்தான் அசோக்! அவளது விழிகள் நிலையில்லாமல் தவித்திருக்க, பதற்றத்தில் வியர்த்துக் கொட்டியது அவளுக்கு! ஏனோ அந்நிலைக் கண்டு அவன் முகம் மலரவே செய்தது!

"நா...நான் அது வந்து...! அது எனக்கு..!" வார்த்தைகளை விழுங்கியும், விழுங்காமலும் அவள் உதிர்க்க, அவன் இதழ்கள் மலர்ந்தன!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.