பிசினஸ் பண்ண முடியாது..உனக்கென்னடா கேடு? பேசாமல் ஆபிஸ் கிளம்புறீயா? இல்லைன்னா, ஊரில் மாடு மேய்க்கிற வேலைக்கு அனுப்பி விடவா!" என்றதும் குபீரென்னு சிரிப்பு வந்தது சிவன்யாவிற்கு!
"என்ன அண்ணி?" என்றான் இளையவன்!
"ஒண்ணுமில்லை...மாடு மேய்க்கத் தான் போறேன்னா..உங்கண்ணன்கிட்ட ட்ரெயினிங் எடுத்துக்கோ!" பழைய சம்பவங்களை எல்லாம் அவள் கிளறிவிட, 'அவசியம் அதனை நினைவுப்படுத்த வேண்டுமா' என்பதாய் ஒரு பார்வைப் பார்த்தான் அசோக். கூட்டமாய் அனைவரும் சிரித்துவிட, எல்லாம் தலையெழுத்து என்பதாகிப் போனது அவனுக்கு!
"சரி...எனக்கு நேராமாயிடுச்சி! இந்தாப் பாருடா! மரியாதையா சித்தப்பாக்கூட கிளம்பி ஆபிஸ் போற வேலையைப் பாரு..ஊர் சுற்றுவதாக தெரிந்தால் விளாசிவிடுவேன் ஜாக்கிரதை!" என்று கூறிவிட்டு எங்கோ கிளம்பினார் சூர்ய நாராயணன். அவர் போகும் இடம் யாதென்பதனை உணர்ந்தவன் மௌனியாக நின்றிருந்தான்.
"என்னடா?"
"ஒண்ணுமில்லை.."
"ஒருநாள் இல்லை ஒருநாள் எல்லாம் சரியாகிவிடும்னு எனக்குத் தெரியும்! அவளைத் தனியா விட முடியாது அதர்வ். என்னிக்கு அவளும் மனசு மாறி, நீயும் அவளை ஏற்றுக்கிறீயோ அன்னிக்கு எல்லாம் ஒண்ணா இருக்கலாம்." என்று புதல்வர்களுக்கும், மருமகளுக்கும் விடை நல்கிவிட்டு கிளம்பினார் அவர். அவர் செல்வது மாபெரும் மாட மாளிகை அல்ல..! ஒரு சிறு இல்லம் மட்டுமே! ராஜபோக வாழ்வை வாழ்ந்தவர்கள் தாம், அதனைத் துறந்து அமைதியானத் தனிமை வாய்ந்த இடத்தினைத் தெரிவு செய்திருந்தனர். மாபெரும் தவறாகிவிடினும், மன்னிப்பு என்ற மாபெரும் தண்டனையை ஒரு சில பாவங்களுக்கு மட்டும வழங்கிட இயலும். அத்தகு தண்டனையை பெரும் தகுதி மதுமதிக்கு உண்டு என்பதனை அவர் நன்குணர்வார். தர்மாவுக்கு அளித்த வேதனையை மீண்டும் ஒருமுறை அவர் மறுசுழற்சி செய்ய தயாராக இல்லை. அதிலும், மீண்டும் அந்தக் கொடும் தனிமைப் பிடியில் அவர் சிக்கிட முயலவில்லை. அந்த அழகிய இல்லத்தின் முன் தனதுக் காரினை நிறுத்திவிட்டு கதவினைத் திறந்து உள்ளே நுழைந்தார் சூர்ய நாராயணன்.
"மது...!" என்று குரல் கொடுக்க, "ஆங்.." என்ற பதில் சமையலறையிலிருந்து வந்தது. அவ்விடத்திலும் தர்மாவினை அவர் துறக்கவில்லை. அந்த இதயத்தினை வென்றவள், என்றுமே அதன் சிம்மாசனத்திலே வீற்றிருப்பாள் என்பதிலும் ஐயமில்லை. சுவரிலிருந்து ஆத்மார்த்தமாய் அவரை வரவேற்றார் அவரது முதல் மனைவி! மனம் முழுதும் காதலோடு ஒருமுறை அவரது புகைப்படத்தினைத் தீண்டினார் சூர்ய நாராயணர். பின், சுயநினைவு பெற்றவராய், சமையலறைக்குள் அவர் நுழைய, சமையல் கலையில் பழகிக் கொண்டிருந்தவர், அறியாமல் சூடுக்கண்ட தனது