தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 13 - பிந்து வினோத்
13. எந்தன் உயிரே எந்தன் உயிரே... கண்கள் முழுதும் உந்தன் கனவே...
சட்டென்று சுயநினைவுக்கு வந்த பாரதி, தன் எண்ணம் போகும் போக்கை நினைத்து திகைத்தாள். அவளின் மூளை மீண்டும் அபாய மணி அடித்தது...
‘வேண்டாம் பாரதி... பாலாவும் ஒரு காலத்தில் இப்படி தானே இருந்தான்...’ என அவளுக்கு எச்சரிக்கை செய்தது...
விவேக்கை பாலாவுடன் ஒப்பிட ஏனோ பாரதிக்கு பிடிக்கவில்லை. விவேக்கிடம் ஒரு கண்ணியம் இருந்தது... தவறை ஒப்புக் கொள்ளும் மனப் பக்குவம் இருந்தது... மற்றவர்களை புரிந்துக் கொள்ளும் அறிவு இருந்தது... இது எதுவுமே பாலாவிடம் இருந்ததாக தெரியவில்லை. கல்லூரி நாட்களில், எதைப் பற்றியும் சிந்திக்காமல், பார்க்க வசீகரமாக இருக்கும் ஒருவன் விரும்புவதாக சொன்னதில் தலை சுற்றிப் போய், சரி என சொன்னது எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம்.... ஒரு விதத்தில் பார்க்கப் போனால் அவனுடன் அவளுக்குத் திருமணம் நடக்காததே நல்லது தான்...
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...”
விவேக் இதை சொன்னப் போது பாரதிக்கு ஏற்பட்ட கோபம் இப்போது தோன்றவில்லை. மாறாக, அவளின் மனதிற்கு இதமாக இருந்தது... ஆனால் விவேக் இப்போதெல்லாம் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே... பரிச்சயமானவனாகவாவது நடத்த சொன்னவன் அவளை திரும்பிக் கூடப் பார்ப்பதே இல்லையே...
மீண்டும் இந்த இடத்தில் பாரதியின் மூளை குறுக்கிட்டு எச்சரித்தது,
‘விவேக் பார்க்கவில்லை என்று ஏங்குவதுப் போல் என்ன இது? பாரதி வேண்டாம் இந்த விஷ பரீட்சை...’
இப்படி, எதை எதையோ எண்ணியப்படி புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டே தூங்கிப் போனாள் பாரதி.
***********