”தாங்க்ஸ் தருண் இனிமேலயாவது நாம சந்தோஷமா வாழலாம்” என சொல்ல அதில் உற்சாகமானான் தருண்.
அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான். அவளுடன் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தான், தனித்தனியாக உறங்கினாலும் மீதி நேரங்களில் அவனைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் அவளின் அன்பில் உருகிப் போனான் தருண்
அவனை தனது அன்பில் கட்டிப்போட்டுவிட்டு ஆபிசுக்கு சென்றாள் ஹரிணி. அந்நேரம் வீட்டிற்கு வக்கீல் வரவும் அதிர்ந்தான் தருண்
”என்ன சார் நீங்க வந்திருக்கீங்க, என்ன விசயம் அதான் பவானியோட கேஸ் முடிஞ்சிடுச்சே அப்புறம் என்ன“
”நான் உங்களுக்காக வரலை ஹரிணி மேடம் இல்லையா“
”அவள் ஆபிசுக்கு போயிருக்கா, ஏன் என்ன விசயம் பீஸ் தரனுமா”
”அதெல்லாம் மேடம் கொடுத்துட்டாங்க”
”அப்புறம் எதுக்காக வந்தீங்க”
”இளங்கோ கேஸ் விசயமா வந்திருக்கேன்” என சொல்லவும் தருணின் முகம் கருத்துவிட்டது
”இளங்கோவா”
”ஆமாம் இளங்கோவோட கேஸ் விசயமா ஹரிணி கோர்ட்ல ஆஜர் ஆகனும்“
“ஏன் எதுக்கு இளங்கோவோட இறப்புதான் சாலை விபத்துன்னு முடிச்சிட்டாங்களே அப்புறம் என்ன“