”அப்ப கதை பெரிசா இருக்கும் போல இருக்கே ப்ளீஸ் பாட்டி சொல்லுங்களேன்” என அவரை வற்புறுத்த அவரோ அவளிடம்
”யாருகிட்டயும் சொல்லக்கூடாது இது ரகசியம் சத்தியம் பண்ணு”
“சத்தியம் இப்ப சொல்லுங்க” என அவள் சுவாரஸ்யமாக கேட்டதுடன் தனது செல்போனில் அவர் பேசுவதை ரிக்கார்டு செய்யலானாள். ரிக்கார்டு ஆவது தெரியாமல் பாட்டி தன் கடந்த கால சிறு வயது காதலை சொல்லலானார்.
”அது அப்ப சின்னப்ப, அப்ப நான் ஒண்ணாம் க்ளாஸ் படிச்சிட்டு இருந்தேன். அப்ப இந்த ஊரு சின்ன கிராமம்தான் அப்ப இருந்த ஒரே பள்ளிக்கூடம் அரசாங்க பள்ளிக்கூடம்தான். ஊர்ல இருக்கற அம்புட்டு புள்ளைகளும் அந்த பள்ளிக்கூடத்திலதான் படிப்பாங்க. வாத்தியார்ங்க ரொம்ப கோவக்காரங்களா இருந்தாங்க, நாங்க எல்லாருமே பயப்படுவோம். அப்பல்லாம் இந்த ப்ரீ கேஜி, எல் கேஜி எல்லாம் கிடையாது, நேரா ஒண்ணாங்களாஸ்தான் இந்த கை இருக்குல்ல இதை அப்படியே தலை வழியாக அடுத்த பக்கம் காதை தொட்டா போதும் சேர்த்துக்குவாங்க. 6 வயசானாலும் சேர்த்துக்குவாங்க.
அப்படிதான் நான் முதல் முதல்ல காதை தொட்டு வகுப்புக்குப் போனேன். அப்பவே இந்த ஊர்லயே நான்தான் அம்புட்டு அழகாம், ஏழை விவசாயி பொண்ணு வைரம் போல ஜொலிக்கிறேன்னு என்னை சில பேரு வைரம்னுதான் கூப்பிடுவாங்க, அம்புட்டு அழகு நானு ஆனா பள்ளிக்கூடத்தில எனக்கு பயமா இருந்திச்சி .அப்ப சின்ன புள்ளையாச்சே ஒரே அழுகை அப்ப அதோ அவர் இருக்கார்ல”
“யாரு?”
“அதான்டி அவரு”
“தேவாவோட தாத்தாவா”