“தேவையில்லை விடுடா அவன் சொன்னதைக் கேட்டல்ல, பெரிய டாக்டர் மாப்பிள்ளை அவன் நான் கொடுத்த பணத்தில படிச்சான் இல்லைன்னா அவனும் இவனைப் போல விவசாயம்தான் செஞ்சிருப்பான். இவ்ளோ திமிர் வந்துடுச்சி. விடு நான் உனக்கு வேற இடத்தில பொண்ணு பார்க்கறேன்” என சொல்ல வைத்தி அதற்கு மறுக்க அவர் கேட்காமல் வேறு ஒரு இடத்தில் பொண்ணை தேடவும் வைத்தி சுந்தரத்தை தேடிச் சென்றான்
”டேய் சுந்தரம் உனக்கேன்டா இந்த வினை, நானும் அவளும் காதலிக்கிறோம்னு தெரிஞ்சும் இப்படி செய்யலாமா நான்தான் முதல்ல அவளுக்கு பரிசம் போட்டது” என கத்த சுந்தரமோ
”இதப்பாரு இப்ப நான் சாதாரண ஆள் இல்லை பெரிய டாக்டர் அதனாலதான் நீ பணக்காரனா இருந்தாலும் சரின்னு உன்னை தூக்கிப் போட்டு எனக்கு பொண்ணை தர ஒத்துக்கிட்டாங்க, உன்னை விட நான்தான்டா பெரியவன், எல்லாத்திலயும் நான்தான் பெரிய ஆள், நீ தோத்துட்ட, எனக்கு அவள் கிடைச்சிட்டா உன்னைப் போல நானும்தான் அவளை காதலிச்சேன் தெரியுமா”
“தெரியாது ஆனா அவள் உன்னை காதலிக்கலையே”
“கல்யாணம் ஆனதும் காதலிப்பா, நீ ஒதுங்கி போ உன் அப்பாதான் உனக்கு வேற பொண்ணை பார்க்கறாரே அப்புறம் என்ன”
“முடியாது இதை நான் ஒத்துக்க மாட்டேன்” என கத்த இருவருக்குள்ளும் வாய்சண்டைய கைசண்டையாகி அடிதடியில் முடிந்தது. அதில் ஊர்காரர்கள் ஊருக்கு நல்லது செய்ய வந்த டாக்டர் சுந்தரத்திற்கே பரிந்து பேச வைத்தி பஞ்சாயத்து வைத்தும் சுந்தரமே ஜெயித்தான்.
திருமணத்திற்கு 2 நாள் இருந்த நிலையில் வைத்தி தாமரையை கிணற்றுப்பக்கம் சந்தித்து அவளிடம் சுந்தரம் பேசியதைச் சொல்ல அவள் அதிர்ந்தாள்
”நீ பேசாம ஓடி வந்துடு, நான் இங்கயே இன்னிக்கு ராத்திரி காத்திருக்கேன் நடுஜாமம் வந்ததும் வந்துடு, நான் உன்னை கோயில்ல வைச்சி தாலி கட்டிட்டு என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன் என் வீட்டுக்குள்ள எவனாலயும் வராமுடியாது சரியா வர்றியா”