(Reading time: 39 - 77 minutes)

 

ரவு எப்பொழுது இல்லாமல் போனது? பகல் எப்பொழுது படியேறி பார்வைக்கு வந்தது? பகலவன் கிழக்கிலிருந்து கிரமமாய் கிளம்பினானா? மாலையில் மறக்காமல் மயங்கினானா? என எதையும் அவள் அறியாள்.

அறை கதவை எங்கோ யாரோ தட்டுவதுபோல் ஒரு உணர்வு. மெல்ல விழித்து தலை தூக்கினாள். கடிகாரம் காட்டும் மணி என்ன என புரியவில்லை. இப்பொழுது சத்தம் தெளிவாக கேட்டது. இவளது அறையைத்தான் தட்டுகிறார்கள். அவள் அறை கதவை தட்டும் உரிமையை தன் தந்தையை தவிர யாருக்கும் தந்ததில்லையே. பி.ஏவுக்கு இது இவளுக்கு பிடிக்காதென தெரியுமே! இன்டர்காம் இணைப்பை எடுத்துவிட்டிருந்தாள். மொபைலில் அழைக்கவேண்டியதுதானே? அருகிலிருந்த மொபைல் அணைந்திருந்தது அப்பொழுதுதான் தெரிந்தது.

என்னவாக இருக்கும்? மெல்ல எழுந்தபோதுதான் புரிந்தது எழமுடியாத அளவு இருக்கிறது உடல்நிலை என. எப்படியோ தடவி தடுமாறி கதவை திறந்தால் எதிரில் இரு உருவங்கள். யார் என புரியும் முன் மாயலோக பயணம். மயக்கம் என்பது அதன் மறுபெயர்.

மீண்டும் சுற்றுசூழல் புரிந்தபோது முதலில் தெரிந்தது ரக்க்ஷத். இவனுக்கு இவள் கதவை தட்டும் தைரியம் தாராளமாய் இருந்திருக்கும். அவன் மார்பில் கைகட்டி இவள் முகத்தை பார்த்திருந்த தோரணையிலேயே தெரிந்தது அவன் கோபமாக இருக்கிறானென.

‘போடா உன் கோபம் என்னை ஒன்னும் செய்யாது.’ மனதிற்குள் முனங்கிக்கொண்டாலும், முறைப்பதற்குகூட முடியவில்லை இப்பொழுது. அருகில் ஆரணி அமர்ந்து இவள் கைபிடித்திருந்தாள்.

“ஆ..........ரு” வேகமாக பேசவேண்டும் என நினைத்தாலும் உதடு ஒத்துழையாமை இயக்கம் நடத்தியது. “எ.......எனக்காகவா வ..வந்த நீ?”

“இல்லயே, இந்த ஹாஸ்பிட்டல்ல காஃபி நல்லாருக்கும்னு சொன்னாங்க. அதுவும் இன்பேஷண்ட் விசிட்டர்ஸுக்கு மட்டும்தான் தருவாங்களாம். அதான் வந்தேன்.”

சிரித்தபடி சொன்னாலும் எதிர்மறையாக ஆரணியின் கண்களில் கண்ணீர்.

‘தனக்காக அழக்கூட ஆட்கள் இருக்கிறார்களா?’

 தனிமையை கண்டு கதறிகொண்டிருந்தவளுக்கு வெட்டுகாயத்தில் பட்ட வலிநிவாரணியாய் இதம் தந்தது இந்த ஆரணியின் அன்பு. உணர்ச்சிவேகத்தில் நிரல்யாவின் நயனங்களிலும் நீர்வீழ்ச்சி வெளிநடப்பு.

ஃபாஸ்டிங்க் ப்ரேயர்பா ஆரு, இதுக்கு முன்னாடி இப்படி ஆனதில்ல, இந்த தடவதான் இப்படி மயக்கமெல்லாம்.....சரியாயிடும்..... தனியா இருக்கிறது கஷ்டமா இருக்குதுன்னுதான் ஃபாஸ்டிங்கே, பதில் மாதிரி நீயே வந்துட்ட...”

அரை மயக்க நினைவில் எதையும் மறைக்க தோன்றாமல் பேசினாள்.

“நீ கல்யாணமே வேண்டாம்னு முடிவு செய்திருக்கியா நிரு?” முகம் கசங்க, கண்கள் பொழிய, ஒருமையில், உருகிய குரலில் கேட்டாள் ஆரணி.இவள் கைகளை இறுக்கி பிடித்தாள்.

இவள் ஏதோ சொல்ல நினைக்க பின்னிருந்த ரக்க்ஷத்தின் கண் அசைவு கண்ணில் பட்டது, ஆரணியிடம் பேசாத படி ஜாடை காட்டினான்.

 பின்னாளில் அவன் மனைவியாகும்போது, ஆரணி இவளை மதிக்க, இவளது முன் காதல் அனுபவம் தடையாகிவிட கூடாது என எண்ணியிருப்பானாயிருக்கும்.

சிறு புன்னகை வந்தது இதழோரத்தில். விரக்தியான கேலிப் புன்னகை. இவளாவது ஜாஷ்வாவை மறப்பதாவது, அடுத்தவரிடம், அது ஆரணியே என்றாலும், அவன் பற்றி பேசுவதாவது.

க்க்ஷத்தை நோக்கி பார்த்தாள். அவன் உணர்ச்சி வசப்பட்டிருப்பது நன்றாக புரிந்தது. தெய்வமே! இவனும் இவளைப்போல ஒரு தலைக் காதலில் மாட்டிக்கொள்ள கூடாதே!

“உங்கட்ட பேசனும் ரக்க்ஷத்”

மௌன புன்னகையுடன் ஆரணி வெளியே போனாள்.

“என்னடா....?” உலகின் மொத்த காதலின் ஒற்றை வார்த்தை சுருக்கமாய் வெளிபட்டது அது. இவளருகில் வந்து அமர்ந்தான்.

“ப்ளீஸ்... ரக்க்ஷத் இது வேண்டாம்”

“எதுடாமா?”

“இந்த ஒன் சைட் லவ், ரொம்ப வலிக்குதுப்பா, தாங்க முடியலையே” அழுத்தி கண்களை மூடி சில நொடி கழித்து திறந்தாள். முகத்தில் மூச்சு காற்றுக்கு தவிக்கும் முகபாவம்.

அவனிடம் தன் உணர்வுகளை வெளிபடுத்த கூடாது என மூளைக்கு தெரிந்தாலும், தன் வேதனையின் ஞாபகத்திலும், எதிரில் இருப்பவனுக்கு மட்டுமே இவள் காதலுற்றிருக்கிறாள் என தெரியும் என்பதாலும், வெடிக்க விரும்பிய மனது அவனிடம் தன் அழுத்தங்களை அப்படியே காண்பித்தது.

“பகல் முழுவதும் நைட் வந்ததும் நல்லாயிருவேன்னும், நைட் வந்ததும் நாளைக்கு விடிஞ்சதும் சரியாயிடும்னும்..........தினமும் இப்படிதான்.....அடி தெரியாத ஆழ கிணத்துக்குள்ள அப்படியே காலூன தரை கிடைக்காதான்னு தவிச்சுகிட்டே மூழ்கிறமாதிரி இருக்குது.... என் கையாலையே நானே என்னை அணு அணுவா வெட்டி கொல்ற மாதிரி..........இருக்கும் ஒரே வாழ்கையில் தோத்துட்டமே, தோத்துட்டமேன்னு........”

அவளது முன்தலையில் கை வைத்தான். அதிலிருந்து ஒரு வெப்பம் ஆறுதலாக பரவியது அவளுள். “லயாமா நீ எதுலையும் தோக்கலைடா, இருபத்தஞ்சு வயதில் வாழ்க்கை முடிஞ்ச மாதிரி என்ன பேச்சு இது.........? அழகான அன்பான வாழ்க்கை இன்னும்........”

பேசவிடவில்லை அவனை.

“இல்ல ரக்க்ஷத், அவன் வர மாட்டான்...., அழுத்தகாரன்......வர்றதா இருந்தா இதுக்குள்ள...... அவன் வரமாட்டான்..........தனியா இப்படியே அவனில்லாமலே வாழனும்ங்கிறத நினச்சாலே..........” நெஞ்சில் கைவத்து அவள் நீவிக்கொள்வதை பார்த்தவனுக்கு இழுத்து தன் மார்போடு அவளை கட்டிக்கொள்ள வெறி வந்தது நிஜம்.

“ல..” இவனை பேச விடாது தொடர்ந்தாள். “பைத்தியம் பிடிச்சுட்டா கூட நல்லாயிருக்கும், அவனுக்காக ஏங்குற வலி, மனசுக்கு புரியாம போயிரும்தானே.....”

“தெய்வமே!” என அவன் வேதனையோடு கண் மூடி திறந்ததில்தான் அவள் புலம்பல் நின்றது.

சின்னு... நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா, உன்ன, உன் வலிய எனக்கு நல்லாவே புரியுது பட்டு....போதும்டாமா இது.......உன்னை புரிஞ்சுகிட்ட நான் உன் மனசு வலிக்காம, உனக்கு பிடிச்சமாதிரி உன்ன பார்த்துபேன்டா......நீ இன்னமும் தனியா இருக்கவேண்டாம், நம்ம வீட்டுக்கு வந்துரு, இந்த கல்யாணம் ஒரு நல்ல நட்பா ஆரம்பிக்கட்டும்.....உன் காயம் கண்டிப்பா ஆறும்.....அ..”

“தயவு செய்து இன்னொரு தடவை இந்த கல்யாணத்தை பத்தி பேசாதீங்க ரக்க்ஷத், இன்னைக்குதான் உங்கள முதல் தடவையா ஒரு ப்ரெண்டா பார்க்க முடியுது. அந்த ஃப்ரெண்ட்ஷிப்பை இங்கேயே கொன்னு குழி தோண்டி புதச்சுட்டு, என்ன திரும்பவும் தனியாளா விட்டுட்டு போகனும்னா...இப்படி பேசுங்க.....தயவு செய்து கேட்டுகிறேன் நீங்க எனக்கு ப்ரெண்டா வாங்க கடைசி வரைக்கும்” கை கூப்பினாள்.

அரை மயக்க நிலையா, அவன் பற்றி உள் மனதில் உண்டாயிருந்த நல்மதிப்பா, அவனிடம் மட்டுமே தன் வலியை வாக்கை மீறாமல் பகிர்ந்து கொள்ள இருந்த வழி வகையா, தனிமையிலிருந்து தப்பிக்க தவித்து கொண்டிருந்த தளிர் மனமா, இல்லை இவை அனைத்துமேவோ அவனிடம் நட்ப்பை யாசிக்க வைத்தது அவளை.

கெஞ்சுவது யாரோவாக இருந்தாலே உருகியிருப்பான், உயிர் காதலி நட்பிட சொல்லி மடியேந்தினால்?? கரைந்துபோனான் கேட்டிருந்தவன்.

 இவனை, ஒரு தலை காதல் எனும் புதை குழியில் விழுந்து அழியாமல், விலகி போக சொல்லத்தானே இவள் பேச தொடங்கியதே? தாமதாமக நினைவு வந்தது நிரல்யாவுக்கு.

“நான் படுற வலி உங்களுக்கும் வேண்டாம்னுதான் சொல்றேன் ரக்க்ஷத், வேற கல்யாணம் பண்ணிக்கோங்க”

“ரொம்ப நடு நிலமையான தீர்ப்புங்க....”  சிரித்தான் அவன்.

“ரக்க்ஷத்.....”

“எனக்கும் என் காதல் ரொம்பவும் முக்கியம் சின்னு...” அவன்  சிறு புன்னகையுடன் சொன்னாலும் ஆழ்ந்த உண்மை அது என்பது வெளிப்படையாக தெரிந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.