(Reading time: 41 - 81 minutes)

 

" ரி பா .. நல்ல நேரம் முடியறதுக்குள்ள எல்லாரும் கிளம்பலாம் வாங்க " - தாத்தா

" நீங்களும் எங்க கூட வரலாமே தாத்தா "- அர்ஜுன்

" நம்ம மாணிக்கம் ஜோசியரை பார்த்துட்டு , கல்யாண வேலைக்கு எல்லாம் தயார் பண்ணிட்டு நான் போன் போடுறேன் பா .. நேரம் இருந்தா நாங்களும் வந்துடுறோம் .. அப்படி இல்லனாலும் பரவாயில்ல நாம சாயங்காலம் ஒண்ணா அருவிகரைக்கு போகலாம்" என்றார் ...

" ஹை அருவியா.. ? ஜாலி .. " என்று ஒரே நேரத்தை துள்ளினர் நித்யாவும் சுபத்ராவும் ..

" இவ எப்போத்தான் வளர போறாளோ தெரியல" என்றார் லக்ஷ்மி ...

" அதை சொல்லுங்க அக்கா ...எனக்கும் சுபாவை பார்த்தா இதுதான் தோணுது " -சிவகாமி

" அட இருக்கட்டும் அத்தை .. எத்தனை பேருக்கு குழந்தைத்தனம் மாறாமல் வாழ்கையை அணுகுற வைப்பு கிடைக்குது ? " - கார்த்தி ..

" ஆமா அத்தை கார்த்தி சொன்னது ரைட் தான் ... நாம வளர்ந்துட்டா நமக்கிருக்குற சின்ன சின்ன ஆசை எல்லாத்தையும் விட்டுத் தரணுமா என்ன ? வயசை ஆண்டுகள் பார்த்து கணக்கிட கூடாது நண்பர்களை பார்த்து கணக்கிடனும்னு ஒரு  பொன்மொழி கூட இருக்கு  " என்று தன் இளவரசிக்காகப் பேசினான் அர்ஜுனன் ..

" என்னம்மோ போங்கப்பா ... எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான் " என்றனர் தாயார் இருவரும் ..

" அடடே இருக்கட்டும்  சிவா... என் மருமகள் சமத்துதான்" என்றபடி சுபத்ராவை கொஞ்சினார் பானு ..

" ஓஹோ அத்தை இப்போ சுபிதான் உங்க செல்லமா ... அப்போ நான் எங்க சிவா அத்தை செல்லம் " என்றுவிட்டு சிவகாமியை கட்டிகொண்டாள் ஜானு..

மீராவோ அபிராமியை பார்க்க "அப்போ மீரா குட்டி என் செல்லம் " என்று அவளை அணைத்து கொண்டார் அபிராமி ..

ஆண்கள் அனைவரும் அந்த காட்சியை பார்த்து சிலாகித்துக் கொண்டனர் ..

உறவோ பிரிவோ அதை பிரதிபலிப்பதில் பெண்ணுக்கு நிகர் பெண்தான் .. அதனால்தானோ பெண்மைக்கு மட்டும் தாய்மை, கருணை, மென்மை என்று அனைத்து போற்றத்தக்க குணமும் இயல்பாய் பொருந்தி உள்ளது.. அதனால்தான் பெண்ணை கண்களாய் காக்க வேண்டும்  என்கிறோமோ ? ஒரு பெண் மனைவியாகவோ அல்லது மகளாகவோ, ஒரு குடும்பத்தில் கால் வைத்து அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியை விதிக்கிறாள்... மனைவியாய் வந்தவள் மருமகளாகி, தாயாகி, மாமியாராகி அந்த குடும்பத்தையே அடுத்தடுத்தக் கட்டத்திற்கு முன்னோக்கி எடுத்து செல்கிறாள்.. மகளோ, அவள் வளர்ந்து வளர்ந்தவர்களை மனதளவில் இளமையாக்க உதவுகிறாள் .. என்னத்தான் பெண்களினால் தொல்லை, பெண்களே பொய்யானவர்கள் என்று சமுதாயத்தால் சில கண்கட்டிய மானிடர்கள் பேசி வந்தாலும், பெண்ணில்லாமல் வாழ்வது சாத்தியாமா? என்று கேட்டால் நிச்சயம் பதில் இல்லை என்பதுதான் .. அதேபோல பெண்ணும் ஆணின் நிழல் படாமல் வாழ்ந்துவிட முடியுமா என்றாலும் சாத்தியமில்லைதான் .. நம்  ஜீவனின் பிறப்பே ஒரு ஆணின் பெண்ணின் பங்கில் இருந்தல்லவா தொடங்குகிறது ? இந்த எதிரெதிர் துரவங்களை உறவுகாளால் பிணைத்து வைப்பது அன்புதான் .. அது காதல், நட்பு, நேசம் , பாசம் இப்படி எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம் ..

ஒரு அழகான அமைதி சூழ்ந்தது அந்த வீட்டில் .. அந்த மௌனத்தை கலைத்தார் தாத்தா ...

" சரி வாங்க புறப்படுவோம் " என்றார் ..

அர்ஜுனன் மட்டும் யாருக்கும் தெரியாத வண்ணம் தாத்தாவிடம் " தாத்தா நான் சொன்ன விஷயம் " என்று ஆரம்பித்து நிறுத்தி அவரை பார்த்தான்.. அவரும்  பதிலுக்கு சரியென கனிவுடன் தலையாட்டி விட்டு சென்றார் ..

சஞ்சயின் காரில் முன் புறம் புவனா ஏறிக்கொள்ள பின் சீட்டில் கிருஷ்ணன், மீரா, வருண் மூவரும் அமர்ந்து வந்தனர் ..அறுவர் அமர்வதற்கு வசதியா  இருந்த ரகுராமின் காரில் ஜானகி அவனருகில் அமர, சூர்ய பிரகாஷ் - அபிராமி, சந்திரப்ரகாஷ் -சிவகாமி ஏறிக்கொண்டனர். கார்த்தியின் காரில் நித்யா, ஆகாஷ்- சுப்ரியா, பானு மற்றும் லக்ஷ்மி வந்தனர் .. இவர்கள் அனைவரும் காரில் ஏறி செல்வதற்கு உதவுகிறேன் பேர்வழி என்று தன்னுடன் சுபத்ரா மட்டும் வரும்படி திட்டமிட்டு சாதித்தான்  அர்ஜுனன்.... ( மாஸ்டர் பிளான் )

" வாருங்கள் இளவரசியாரே " என்று கார் கதைவை திறந்துவிட்டு இடைவரை குனிந்து வணக்கம் வைத்தான் அர்ஜுனன் .. அவனின் காதை செல்லமாய் திருகினாள் சுபத்ரா....

"ஸ்ஸ்ஸ்ஸ் ஆ ...சுபி.... செல்லம்...கண்மணி,..... ஹே பொண்டாட்டி வலிக்குதுடி "என்று அலறினான் அர்ஜுனன்.,...

"அஜ்ஜு .....நான் அழுத்தவே இல்ல,....இது உங்களுக்கு வலிக்கிறதா ? "

" ஹா ஹா இல்ல செல்லம்..நீ அழுத்தினால் எனக்கு எவ்வளவு வலிக்கும்னு டெமோ காட்டினேன்.... "

".... "

" ஆமா நான் போட்ட ப்ளானுக்கு இந்நேரம் நீ வெட்கப்படுவே, இல்ல அஜ்ஜுன்னு வந்து கட்டிப்பன்னு பார்த்தா இப்படி அடிக்க வர்றியே நியாயமா ?  நாம அப்படியா பழகி இருக்கோம் ? " என்றான் சோகமாய் .... 

" போங்கப்பா .... நீங்க வேணும்னே பண்ணுறிங்கன்னு எல்லாருக்கும் தெரியும் .. இந்நேரம் எல்லாரும் நம்ம பத்திதான் பேசிக்கிட்டு இருப்பாங்க .. அதுவும் இந்த நித்யா குரங்கு இருக்காளே .. என்னை எப்படி பார்த்து வெச்சா தெரியுமா ? இன்னைக்கு நைட் நான் தூங்கின மாதிரிதான் .. எல்லாரும் சுத்தி உட்கார்ந்து என்னை வெச்சு ஓட்ட போறாங்க " என்றாள் பாவமாய் ... அவளின் மூக்கை பிடித்து இழுத்து ரசித்தவன்

" ஹே இளவரசி என்னை பார்த்து சொல்லு அவங்க ஓட்டுறது உனக்கு கஷ்டமாவா இருக்கு ? " என்று கேட்டு கண்ணடித்தான் .. இல்லைத்தான் .. அவளின் அர்ஜுனன் இனி அவளுக்கு மட்டும்தான் என்று அனைவருமே சொல்லி அடிக்கடி வம்பிளுப்பதில் இன்ப அவஸ்தை இருந்ததே தவிர நிச்சயம் கோபம் இல்லைத்தான் .. இருந்தாலும் இவன் நம் மனதை இப்படி படித்து வைக்க கூடாது என்று பெருமூச்சு விட்டவள் பேச்சை மாற்றினாள்...

" அர்ஜுன் அவங்க எல்லாரும் முன்னாடி போயிட்டாங்க பாருங்க .. வாங்க போகலாம் " என்றாள்..திறந்து வைத்திருந்த கார் கதவை சாத்திவிட்டு அதன் மீது சாய்ந்து நின்றான் அர்ஜுனன் ..

" அர்ஜுன் "

" ம்ம்ம்ம் "

" போகலாம் "

" சரி போகலாம் "

" வழியை விடுங்க "

" நீ முதலில் பதிலை சொல்லு "

" என்ன சொல்லணும் இப்போ ?"

" உனக்கு தெரியாதா ?

" அதன் பதில் உங்களுக்கு தெரியாதா ?"

" கேள்வி கேட்ட பதில் சொல்லணும் இளவரசி திரும்பி கேள்வியே கேட்க கூடாது "

" ப்ச்ச்ச் .... சரி இல்லை "

" என்ன இல்லை "

" ஆண்டவா ... அவங்க என்னை ஓட்டுறதுல எனக்கு எந்த கோவமும் இல்ல .. போதுமா ?" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது ..

" இதெல்லாம் அநியாயம் சுபி  "

" என்ன அஜ்ஜு ? "

" நான் கிட்ட வரல , கைய புடிச்சு இழுக்கல, கட்டி" என்று அவன் தொடர்வதற்குள் அவனது வாயை பொத்தினாள்... அவளின் தளிர் கரத்தில் இதழ் பதித்தவன்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.