(Reading time: 27 - 54 minutes)

பாலை  எடுத்து தூரமா எரிஞ்சா, அவன் திருப்பி எடுத்துட்டு வருவான்…. வாக்சினேட்டட் டாக் தான்…… இருந்தாலும் உனக்கு அது வாய் வச்சத தொட கஷ்டமா இருந்தா தொடாத… நோ நீட்…” யவ்வன் சொல்லிக் கொண்டிருக்க, இப்பொழுது இவர்களைப் பார்த்து வரும் பவிஷ்யாவும் ரெஜினாவும் கண்ணில் தெரிகின்றனர்…..

“உன் ஃப்ர்ண்ட்ஸ் வந்தாச்சு…..அப்போ ஹேண்ட் வாஷ் செய்தல்ல அங்க போய் ஹேண்ட் வாஷ் செய்துக்கோ வினிமா…..ரோவரை தொட்டிருக்கல்ல….”

“ம்…சரி” அவனுக்கு சம்மதமாக தலையாட்டிவிட்டு இவள் நடக்க தொடங்க இவளுடன் இணையாக அவனும்….

“இது  என் ஃப்ரெண்ட் பவி….இது ரெஜி….”  அருகில் வந்ததும் தன்  சகாக்களை பக்கத்தில் நிற்பவனிடன் நிலவினி அறிமுகம் செய்ய

“ஹலோ அண்ணா” என பவி ஆரம்பிக்க

“ஏய் இருடி…” என அவளை அடக்கிய ரெஜினா “ நிலு இது யாரு நிலு? “ என்றாள் இவளைப் பார்த்து..யவ்வனைக் காட்டி…

ஜிவ் என்கிறது நிலவினிக்குள். ‘அடப் பாவி…இப்டியா மானத்த வாங்குவ…..’ முனங்குகிறது பெண் மனம். அதுவாக அவனைப் பார்கிறது இவள் விழிகள் ஓரப் பார்வையில்….

எழுந்து நிற்கும் குறும்பை சிறிது முகத்தில் காட்டியும், சிறிது காட்டாமலுமாய்….சிறு புன்னகையுடன், இவள் பதிலை அவனுமே ஆவலாய் எதிர்பார்ப்பது, இவள் பார்வைக்கு படுகிறது…

‘அப்டில்லாம் நாங்க ஒன்னும் ஓபனா சொல்லி மாட்டிக்க மாட்டமாங்கும்…..எங்களுக்கும் பதில் சொல்ல தெரியும் ….’ மனதிற்குள் அவனுக்கு பதில் சொல்லியபடி முகத்தில் இருந்த வெட்கம் தயக்கம் எல்லாம் உள்ளுள் புதைத்து…வெகு இயல்பான பாவத்தில்…. “ம்…இவங்கள தெரியாதா…? இது யவ்வன்” என்றாள் ரெஜியைப் பார்த்து.

அப்படியே ‘ஏய்….ரெஜி புபுலஸ்…..இதுக்கு மேல எதாவது ஏடாகூடாமா பேசுன உனக்கு இருக்கு…’ மைன்ட் வாஸ்ஸில்…முறைக்கும் பார்வையில் ரெஜினாவை மிரட்டியும் வைத்தாள்.

இதற்கெல்லாம் அசந்தால் ரெஜி எப்படி நிலவினிக்கு ஃப்ரெண்டா இருக்றதாம்?

“எங்கள ஃப்ரெண்ட்ஸ்னு சொன்ன…. இது உனக்கு யாருன்னு சொல்லலையே ….? அத கேட்டேன்…” என்று மீண்டும் விளக்கமாக வம்பிழுத்தாள் ரெஜினா…

இப்பொழுது ஓரப் பார்வையில் கூட அருகில் நிற்பவனைப் பார்க்க உறுதியற்று போகிறது வினியின் மனம்…. 

அடக்க நினைத்தாலும் அடங்காமல் அவள் முகம் நோக்கி பாயும் வெட்கம் முழுக் காரணம்.

அதை முன்னால் நிக்கும் மூனு பேரில் யார் பார்த்தாலும் போகும் மானம்…. “நான் கை கழுவ வந்தேன்….” இவள் ஓடிப் போக பவிஷ்யாவுக்கு நிலவினி நாயை தொட்ட எதுவும் தெரியாததாகையால், அவள் தான் கல்யாணத்தை நிறுத்த வந்ததைத்தான் சொல்கிறாளோ என்ற புரிதலில் சுருக் என்கிறது மனம்.

வினியின் செயலை, முதலில் அவள் வெட்கத்தை மறைக்க ஓடுகிறாள் என சரியாக புரிந்து கொண்ட யவ்வன், ஏதேச்சையாய் பார்வையில் பட்ட பவிஷ்யாவின் முக கலக்கத்தில் “என்னாச்சு பவிஷ்யா?” என இயல்பாய்தான் கேட்டான்.

ஆனால் யவ்வனிடம் நிலவினியின் மனகலக்கத்தை பேசித் தீர்க்க வந்திருந்தாலும் பவிஷ்யாவிற்கு ரெஜினா முன்பாக இதைப் பேசலாமா வேண்டாமா என ஒரு குழப்பம்….ஏனெனில் நிலவினி இதுவரை இந்த திருமணத்தை நிறுத்த முயல்வதாக பவிஷ்யா தவிர யாரிடமும் பகிர்ந்திருக்கவில்லையே….

ஆக யவ்வனுக்கு எப்படி பதில் சொல்ல எனப் புரியாமல் மலங்க மலங்க விழித்தபடி நிலவினி செல்லும் திசையையும் யவ்வனையும் மாறி மாறி பார்த்தவள் “கல்யாணத்தைப் பத்தி கேட்டா கை கழுவப் போறேன்னு சொல்லிட்டுப் போறாளேளேன்னு….” என முனங்கினாள்….

என்ன இருந்தாலும் நிலவினி இந்த நிமிடம் வரை பவிஷ்யாவிற்குத்தான் யவ்வனைவிட அதிகம் பழக்கம்… அதுவும் இப்பொழுது பேசும் போதும் நிலவினிக்கு எதிரில் நின்று அவள் முகத்தைப் பார்த்திருந்தவள் பவிஷ்யா….வினிக்கு இணையாக அவள் முகத்தை பாராமல் கேள்வி வந்த திக்கைப் பார்த்திருந்தவன் யவ்வன்.

ரெஜியின் விளக்கமான கேள்வியில் தன்னருகில் நிற்பவள் முகம் சிவக்கும் அழகை காண விரும்பி ….ஆம் அப்போது அவன் அத்தனை உறுதியாய் புரிந்திருந்தான் நிலவினி அவனை விரும்புவதை…..அத்தோடு அவள் குழப்பமின்றி திருமணத்தை நாடுவதை…..

அவன் நிலவினியின்  முகத்தைப் பார்க்க விரும்பி திரும்பிய நேரம் அவள் கை கழுவ வந்தேன் என்று ஓடி இருந்தாள்….ஆக முகம் பார்த்த, வினியின் முழு அகம் அறிந்த பவிஷ்யாவின் புரிதல் ஒருவேளை…. ஆம் ஒருவேளை….. சரியாய் இருக்குமோ என்ற ஒரு சின்னஞ் சிறு எண்ணம் அவனில்.

அதோடு முன்பும் பெண் பார்க்க சென்ற அன்று, விடை பெறும் தருணம், அவள் கண்ணில் அவன் கண்டது இவன் மீதான காதலும், மணம் முடிக்க முழு விருப்பமும்……ஆனால் திடீரென ஏதோ மாயகயிறுலிருந்து விடுபட்டவள் போல, யாரோ ஒருவரின் குரல் சத்தத்தில், சட்டென அன்று அவள் பயத்திற்குள் நுழைந்ததும், முரட்டடியாக திருமணத்தை மறுத்ததும் இன்றும் இவனுக்கு ஞாபகம் இருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.