(Reading time: 26 - 51 minutes)

ங்கே பெங்களூரில்....

காரை செலுத்திக்கொண்டிருந்த பரத்தின் மனமும் பழைய நினைவுகளுக்குள் விழத்துவங்கியது. அவளது வீட்டில் அவளை முதல் முறையாக சந்தித்துவிட்டு வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகி இருந்த நிலையில்.... ஒரு மாலை நேரத்தில்...

தனது வீட்டு வாசலில் ஒரு சின்ன பூச்செடியை நட்டுக்கொண்டிருந்தாள் அபர்ணா. அப்போது அவளது வீட்டை கடந்து நடந்த பரத் நின்று விட்டான். அப்போது அவள் பெயரை கூட அறிந்திருக்கவில்லை அவன்.

அவள் மீது நிறைய மரியாதை இருந்த போதிலும், அவள் மீது காதல் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. அவன் அப்போது இருந்த நிலையில் நிச்சயமாக எந்த பெண்ணும் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்ற யதார்த்தம் அவனுக்கு புரிந்து தான் இருந்தது.  

அவனுடன் மாடி அறையில் தங்கி இருந்த நண்பர்கள், அவர்கள் நடவடிக்கைகள் கொஞ்சம் சரி இல்லை என்பதும், அதனாலேயே இவனும் அந்த வகையை சேர்ந்தவன்தான் என்ற மனநிலைதான் அவளுக்கும் இருக்கும் என புரிந்துதான் இருந்தது அவனுக்கு.

வேறெதுவும் இல்லை. அவள் பெயர் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என சின்னதாக ஒரு ஆசை அவனுக்கு. இது வேண்டாத வேலை என அவன் உள்மனம் எச்சரித்துக்கொண்டிருந்த வேளையில்...

'இன்று மழை வந்தால் நன்றாக இருக்குமே....' என்ற ரீதியில்  அவள் நிமிர்ந்து வானம் பார்க்க, மழை மேகங்களின் சுவடுகள் கூட தெரியவில்லை.

அவளையே கவனித்துக்கொண்டிருந்தவன் 'கண்டிப்பா மழை வரும்...' என்றான் நிதானமாக

அவள் சட்டென திரும்ப.... நட்பாக அவன் புன்னகைக்க... பதிலுக்கு கஷ்டபட்டு புன்னகையை இதழ்களில் ஓட விட்டு பின்னர் அங்கிருந்து நகர எத்தனித்தாள் அவள்.  

'ஒரு நிமிஷம்... உங்க பேரென்ன....' என்றான் அவன். அவள் திரும்புவதற்குள் உள்ளிருந்து அவள் அம்மாவின் குரல் கேட்டது.

'அபர்ணா.... உள்ளே வா.. பொறுக்கி பசங்க கூட உனக்கு என்ன பேச்சு?'

கொஞ்சம் திடுக்கிட்டவளாக 'இதோ வரேன் மா... என்றபடி அவள் உள் நோக்கி நடக்க தடுத்து நிறுத்தியது அவன் குரல். அவளது அம்மா அவனை 'பொறுக்கி...' என்று சொன்ன விதத்தில் சுள்ளென்று பொங்கி விட்டிருந்தது அவன் கோபம்.

'ஒரு நிமிஷம் நில்லுங்க அபர்ணா...' சற்றே உயர்ந்து ஒலித்தது அவன் தொனி 'யாரிங்கே பொறுக்கி???' என்றான் உள் பக்கம் பார்வையை செலுத்தியபடியே....

'உன்னை தான் சொன்னேன் பொறுக்கின்னு.... வெயில் இப்படி அடிக்குது மழை வரும் அது வரும்ன்னு சும்மா வயசு பொண்ணுகிட்டே வம்பளந்துகிட்டு நிக்கறே??? பின்னே நீ என்ன உத்தமனா??? அவள் அம்மா வெளியே வந்து சொல்ல.... அவன் தன்மானம் பட்டென அடிப்பட்டது.

'ஆமாம்.... நான் உத்தமன்தான்...' என்றான் அழுத்தமாக. 'இதுவரைக்கும் பொய் சொன்னது இல்லை.... திருடினது இல்லை.....  என்னாலே யாருக்கும் எந்த பாதிப்பும் வந்தது இல்லை...'

'ஆமாமாம் நீ உத்தமன் தான் நீ சொன்னா அப்படியே மழையே வந்திடும்... நீ வா அபர்ணா உள்ளே...' அவர் கிண்டலாக சொல்ல... அவன் கண்கள் நிறைய கோபம். தன்மானம் அடிபட்ட வலி.

'கண்டிப்பா வரும்....' என்றான் அழுத்தமாக 'அப்படி இன்னைக்கு சாயந்திரம் ஆறு மணிக்குள்ளே மழை வந்திட்டா என்ன தருவீங்க? உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி தருவீங்களா???' எது செலுத்தியதோ கேட்டே விட்டான் அவன் கொதிக்கும் குரலில்.

அதிர்ந்து போயினர் அம்மாவும் மகளும்.

'மழை மட்டும் வரட்டும் அப்புறம் உங்க பொண்ணுதான் என் பொண்டாட்டி... அதை யாராலும் மாத்த முடியாது பார்த்துடுவோம்...' அவன் சொல்ல

'பொறுக்கி... பொறுக்கி...' உச்சரித்தன அம்மாவின் உதடுகள். அவள் பார்வையில் நிறையவே பயம்.

னது அறைக்கு வந்த பிறகும் அவன் கோபம் தணியவில்லைதான். தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டான். ஏனோ ஆற மறுத்தது மனம். சில நிமடங்கள் இப்படியே கரைய நிதானப்பட்டது மனம்.

'உடனிருக்கும் நண்பர்கள் சரி இல்லை என்றால் இப்படித்தான் பெயர் வரும். இதில் மற்றவர்கள் மீது கோபப்பட்டு என்ன பயன்.??? என்னை பார்த்தால் பெண்ணை பெற்றவர்களுக்கு பற்றிக்கொண்டு வருவது நியாயம்தானே?  இடம் மாறி சென்று விடலாம் என்றால் இது போன்ற குறைவான வாடகையில் அறை கிடைப்பது சிரமம்..' ஏதேதோ யோசித்தபடியே மொட்டை மாடிக்கு வந்தான் அவன்.

நேரம் 5.45...

எங்கிருந்து கூடினவோ??? மழை மேகங்கள் மெது மெதுவாக சேரத்துவங்கி இருந்தன. வியப்பில் உயர்ந்து இறங்கின அவன் புருவங்கள். சின்னதாக சிரித்தபடியே அவன் திரும்ப பக்கத்து மாடியில் நின்றிருந்தாள் அவள்.

அவள் அவனை கவனிக்கவில்லை. சற்றே பதற்றத்துடன் வானத்தையே பார்த்திருந்தாள் அபர்ணா. மனதில் இருந்த அழுத்தங்கள் கொஞ்சம் மறைந்து போக சுவாரஸ்யத்துடன் அவளை பார்க்க துவங்கினான் பரத். படு தீவிரமாக கைகூப்பி ஏதோ வேண்டிக்கொண்டிருந்தாள் அவள்.

'மழை வரக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள் போலும்...' சிரிப்புத்தான் வந்தது அவனுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.