(Reading time: 26 - 51 minutes)

டுத்த சில நிமிடங்களில் சுட சுட தோசையும் சட்னியும் தயாராக புன்னகையுடன் அவரிடம் நீட்டினான் அதை.

'சாப்பிடுங்க சார்...' அதை கையில் வாங்கிக்கொண்டவரின் உயிர் வரை சுட்டது குற்ற உணர்ச்சி.

எத்தனையோ நாட்கள்.... அவன் வீட்டுக்கு பணம் கேட்டு வரும் பொழுதுகளில்....  'இப்படி எல்லாம் என்றாவது அவனை சாப்பிட வைத்திருக்கிறாரா என்ன???

'என்ன யோசனை சாப்பிடுங்க. சாப்பிடுங்க...' என்றான் பரத். அவரை கட்டாய படுத்தி நிறையவே சாப்பிட வைத்தான் அவன். வயிறும், மனமும் நிறைந்து போயிருந்தது அவருக்கு.

'நீங்க நிம்மதியா படுத்து தூங்குங்க. நான் பக்கத்து ரூம்லே இருக்கேன்...' என்றபடியே படுக்கை அறையின் ஏசியை அவன் இயக்க...

கட்டிலில் அமர்ந்திருந்தவர் 'பரத்...' என்றார் மெதுவாக. 'எனக்கு இப்போ கண்டிப்பா தூக்கம் வராது. ஒரு போர்ட் செஸ் ஆடுவோமா???'

விளையாடினார்கள் இருவரும். ஏதேதோ கதைகள் பேசி.... சிரித்து.....மகிழ்ந்து.... இப்படியே நேரம் கடக்க... எப்போது பரத்தை தனது மடியில் சாய்த்துக்கொண்டார் அவர் என அவனே அறியவில்லை.

அவர் கரம் அவன் கேசம் வருடிக்கொண்டிருக்க அப்படியே உறங்கிப்போனான் அவன். உறக்கத்தின் நடுவே அவனது உதடுகள் உச்சரித்தன 'அப்பா...'

காலை ஏழு மணிக்கு அழைப்பு மணி ஒலிக்க திடுக்கிட்டு எழுந்தான் பரத். கட்டிலில் சற்றே சாய்ந்த நிலையில் அமர்ந்தபடியே உறங்கிக்கொண்டிருந்தார் அப்பா!!!!

'இத்தனை நேரம் அவர் மடியிலேயேவா உறங்கி இருக்கிறேன் நான்??? நம்பவே முடியாமல் அவரை பார்த்தான் பரத்.

அதற்குள் மறுபடியும் அழைப்பு மணி. இவன் சென்று கதவை திறக்க... வாசலில் நின்றிருந்தான் விஷ்வா.

'குட் மார்னிங் ப்ரதர்...' கண் சிமிட்டினான் விஷ்வா .'நல்ல தூக்கம் போலிருக்கே என்றபடி உள்ளே வந்தான் அவன். 'எருமை மாடு...'

'டேய்... அடப்பாவி... நான் உன்னை விட மூணு வயசு பெரியவன்டா...' இது பரத்

'ஸோ... வாட்... பெரிய எருமை மாடு... அது சரி... எப்படி? நீ சொன்னியே 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்ன்னு' அந்த லிஸ்ட்லே அப்பா மடியிலே படுத்து தூங்கறதும் வருமா???' கண் சிமிட்டினான் மருத்துவன்.

வியப்பின் எல்லைக்கு சென்றிருந்தான் பரத். 'இது எப்படி இவனுக்கு தெரியும்???'

'எல்லாம் எனக்கு தெரியும் ப்ரதர்... நிம்மதியா தூங்கினியா???' மனம் வருடும் குரலில் கேட்டான் விஷ்வா.

புன்னகையுடன் தலை அசைத்தான் பரத் 'தேங்க்ஸ் விஷ்வா...' என்றான் அவன்.

ன்று மாலை ஏழு மணி....

அந்த நட்சத்திர ஹோடேலின் ரெஸ்டாரெண்ட் பகுதியில் ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்தவளாக அமர்ந்திருந்தாள் அபர்ணா. அது பரத்துக்கு சொந்தமான ஹோட்டல் என்பதை அறிந்திருக்கவில்லை அவள்.

இன்று காலை மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஏதோ ஒரு கடையில் சென்று வாங்கிய உடைகள் இவை. உடலோடு ஒட்டி... இறுக்கி பிடித்து... கண்டிப்பாக இவை பிடிக்கவில்லை அவளுக்கு.

உடலெங்கும் ஒரு வித கூச்சம் பரவிகிடக்க.....  உடலை குறுக்கிக்கொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அவள். கைகள் அரை குறை துப்பட்டாவாகி இருந்தன.

அருண் சொன்னதற்காக தனியாக இங்கே வந்தாகி விட்டது. புது ஊர் என்ற போதிலும் எப்படியோ சமாளித்து இங்கே வந்து சேர்ந்திருந்தாள் அவள். வரவில்லை என்றால் கண்டிப்பாக கோபப்படுவானே???

அவன் தான் நினைச்சதுதான் எப்பவும் நடக்கணும்ன்னு நினைக்கிற டைப்' அன்று ரயிலில் ப்ரியா சொன்னது இவள் நினைவில் ஆடியது.

அந்த நட்சத்திர ஹோட்டலிலும் அந்த கலாசாரத்திலும் ஜீன்ஸும் டி ஷர்ட்டும் பெரிய விஷயமே இல்லை என்ற போதிலும் எல்லார் பார்வையும் இவளையே மொய்ப்பது போல் ஒரு உணர்வு அவளை வாட்டியது.

வந்தவுடன் ஒரு முறை அருணை அழைத்தாகி விட்டது. 'இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் வெயிட் பண்ணு' என்றான் அவன். நிமிடங்கள் கரைந்துக்கொண்டிருக்க அவன் வந்த பாடில்லை. 'மறுபடி அழைத்து யார் வாங்கிக்கட்டிக்கொள்வதாம்???'

முட்களையே நாற்காலி ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை போன்றதொரு பாவத்துடன் அமர்ந்திருந்தாள் அவள். அவள் அமர்ந்திருந்த கோலமே அங்கிருந்த ஆண்கள் சிலரை இவள் பக்கம் திரும்பி பார்க்க செய்தது. சற்று தூரத்தில் இருந்து அவர்கள் இவளை பற்றி கிண்டலாக பேச ஆரம்பிக்க... நா வறண்டு போனது... சுவாசமே எழவில்லை அவளுக்கு.

'இல்லை... இனிமேலும் இங்கிருப்பது சரி இல்லை...' எனும் எண்ணத்துடன் அவள் எழ, சட்டென அவர்கள் இவள் அருகில் வந்து நிற்க, மொத்தமாக வியர்த்திருந்தாள் அவள்.

சரியாக அந்த நொடியில் அங்கே வந்து நின்றான் பரத்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.