(Reading time: 26 - 51 minutes)

ன்று மாலை அவள் வீட்டை கடந்து, தலை நிமிர்த்தி அந்த பக்கம் பார்க்க கூட  தோன்றாமல் அவன் நடந்து சென்ற போது கலைத்து நிறுத்தியது அவள் குரல்...

'நீங்கதான் என்னை ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்தீங்கன்னு அம்மா சொன்னாங்க. தேங்க்ஸ்...'

எண்ணி வைத்து உச்சரித்தார் போல் சில வார்த்தைகளை உச்சரித்து விட்டு உள்ளே சென்று விட்டாள் அவள். அந்த நொடியில் மொத்தமாக அவளிடம் தோற்று போயிருந்தான் அவன். அறைக்கு வந்த பிறகும் அவனது அதட்டலையும் மீறி மனம் அவளிடம் கரைந்து ஓடியது.

அதனுடனே சேர்த்து 'அவளை மனைவியாக்கிகொள்ள வேண்டிய தகுதியை என்னால் சம்பாதிக்க முடியாதா???' கேள்வியும் அவனை புரட்டியது. சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு படிப்பை மறந்து உழைக்க முடிவெடுத்திருந்தது மனம்.

சில நாட்களில் ஒரு சின்ன ஹோடேலில் சர்வராக வேலைக்கு சேர்ந்திருந்தான் அவன். அப்போது அவனிடம் இருந்தது எப்படியாவது முன்னேறி விட வேண்டுமென்ற துடிப்பு மட்டுமே.

ஓரிரு முறை அவளை நேருக்கு நேராக பார்க்கும் சமயங்களில் புன்னகைப்பதோடு நாட்கள் நகர்ந்தன  சில மாதங்கள் கடந்திருக்க... நிகழ்ந்தது அவளது பாட்டியின் மரணம்!!! அவள் கோவையை விட்டு சென்னைக்கு அவள் அப்பாவிடம் செல்லும் நேரமும் வந்தது.

அவள் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்னால், இந்த கல்லூரியில் கடைசி நாளை முடித்துக்கொண்டு அவள் வெளியே வந்த நேரத்தில் அவள் முன்னால் சென்று நின்றான் பரத். நேரம் மாலை ஐந்தரையை தாண்டி இருந்தது. அன்றும் மழை மேகங்கள் சூழ்ந்து கிடந்தன. அவளை ஒரு நிமிடம் தனியாக அழைத்து வருவதே பெரிய வேலையாக இருந்தது அவனுக்கு.

'எனக்கு வீட்டுக்கு போகணும் ப்ளீஸ்..' அவள் சொல்லிக்கொண்டிருக்க வானத்தில் இடி சத்தம்.

'ஒரே ஒரு நிமிஷம் இதோ போயிடலாம். முதல்லே.... உனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்தேன்...' என ஒரு அட்டை பெட்டியை நீட்டினான்.

'என்னது இது???

'கண்ணாடி வளையல். அன்னைக்கு நீ கீழே விழுந்தப்போ எல்லாம் உடைஞ்சு போச்சு. அதான்..... இப்போதான் கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். நிறைய பணம் வந்ததும் தங்கத்திலேயே வாங்கி தருவேன்...' குரலில் ஆர்வம் பொங்க  அவன் சொல்ல... கேள்வியாக அவன் முகம் பார்த்தாள் அவள். 

'எனக்கு இதெல்லாம் வேண்டாம்...'

'ஏன்??? சரி நான் இதை பத்திரமா வெச்சிருப்பேன்... இன்னொரு நாள் நீ வாங்கிப்பே... எனக்கு நம்பிக்கை இருக்கு... நீ ரெண்டு நாளிலே ஊருக்கு போயிடுவே அதுக்குள்ளே என் மனசை உனக்கு சொல்லிடணும் தான் கூட்டிட்டு வந்தேன் கண்ணம்மா...'

அவள் முக பாவத்தில் இருந்தே அந்த 'கண்ணம்மா'வை அவள் ரசிக்கவில்லை என புரிந்தது அவனுக்கு.

'இங்கே பாரு... இப்போ நான் இருக்கிற நிலையிலே உன்னாலே என் காதலை ஏத்துக்க முடியாது அதுதான் யதார்த்தம். ஆனா உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.... அதை மட்டும் நீ புரிஞ்சுக்கோ...'

அவள் முகமெங்கும் பயம் பரவியது. 'ப்ளீஸ் என்னை விட்டுடுங்க ப்ளீஸ்....' குரல் உடைவது போல் இருந்தது. மழை ஆரம்பித்திருந்தது.

'இரு இரு நான் உன்னை ஒண்ணும் பண்ணிட மாட்டேன். வாழ்க்கையிலே முன்னேறணும்ங்கிற எண்ணமே எனக்கு உன்னாலேதான்..... உன்னை பார்த்ததும்தான் வந்திருக்கு. நீயே அசந்து போய் கை தட்டுற அளவுக்கு நான் மேலே வருவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நீ என்னை ஏத்துபியா???

'இப்போ நான் படிக்கணும். இந்த மாதிரி விஷயம் எல்லாம் யோசிக்கிற நிலைமையிலே நான் இல்லை. என்னை விடுங்க. நான் வீட்டுக்கு போகணும்...' குரல் உடைந்து அழ துவங்கினாள் அவள்.

'ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்..... ப்..........ளீ..........ஸ்ஸ்ஸ்..... தயவு செய்து அழாதே... என்னாலே உன் கண்ணிலே தண்ணியை பார்க்க முடியாது.... ப்ளீஸ்...' அவள் விரல்கள் கண்ணீரை துடைத்துக்கொண்டன. ஒரு நிம்மதியான சுவாசம் அவனிடம்.

'இப்போ இல்லை..... வாழ்கையிலே எப்பவுமே நான் உனக்கு என்ன செய்யறேனோ இல்லையோ.... உன் கண்ணிலே தண்ணி மட்டும் வர விட மாட்டேன் கண்ணம்மா..'

'ப்ச்....' என்றாள் அந்த கண்ணம்மா என்ற வார்த்தை பிடிக்காமல்

'சரி.... 'கண்ணம்மா...' சொல்லலை.... இப்போ சொல்லு..... சில வருஷம் கழிச்சு  ஒரு நாள் நான் சொன்ன மாதிரி ஒரு சூழ்நிலை உனக்கு வந்திட்டா நீ என்ன செய்வே???' கேட்டான் பரத்.

........................................

'பதில் சொல்லு. அப்படி ஒரு சூழ்நிலை உனக்கு வந்திட்டா???'

சில நொடிகள் யோசித்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்து தெளிவாக சொன்னாள் 'அப்படி ஒரு சூழ்நிலை வந்தா அப்போ என் மனசாட்சி என்ன சொல்லுதோ அதை கேட்டு நடந்துப்பேன். இப்போ இவ்வளவுதான் சொல்ல முடியும்...'

அழகாய் சிரித்தான் அவன். 'ஸோ... மேடம் எதுவும் கமிட் பண்ணிக்க மாட்டாங்க அப்படித்தானே??? சரி... அதையும் பார்ப்போம்... இப்போ நீ போகலாம்...' அவன் சொல்ல அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்தாள் அபர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.