(Reading time: 40 - 79 minutes)

நாட்கள் நகர அன்று அவர்களது மரகலம் பாண்டியர்களின் துறைமுகம் குலசேகரபட்டிணத்தை அடைந்திருந்தது….

 கரை இறங்க இவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளை ருயம்மாவிடம் “இது எங்களது உடை….இதை அணிந்து கொண்டு கிளம்பி வாரும் ருயமரே” என்றபடி ஒரு வஸ்திர கத்தையை  கொடுத்தான் பாண்டிய பராக்கிரமன்….

ஆண் வேடமிட்டிருந்தாலும் அது வரையும் ருயம்மாவின் உடை அமைப்பு காகதீய பாணியிலேயே இருக்கும்…. ‘ஆக காகதீயரைக் கண்டாலே பாண்டிய மக்களுக்கு வெறுப்பு போலும்….அதனால்தானே இவர் இவ்வாறு மாறிக் கொள்ள ஏவுகிறார்’ என மனம் விசனப்பட்டாலும்

பயணத்தில் ஆபத்தை தவிர்ப்பது அறிவாளியின் செயல் என்ற அடிப்படையில் அவள் பராக்கிரமன் கொடுத்தவைகளை புனைந்து கொண்டே கரை இறங்கினாள்….

அந்நிய மண்ணில் அவள் பாதங்கள்..….

என்று அவள் மானகவசன் மீது தனக்கிறுக்கும் காதலையும் தன்னால் எப்போதுமே அவனது வாழ்க்கை துணையாக இயலாது என்பதையும் அறிந்து கொண்டாளோ அப்பொழுதிலிருந்து அவளுக்கு இப் பயணம் முற்றிலும் அர்த்தமற்றதாய் தோன்றுகிறது….

பராக்கிரமர் இவளது உண்மை அறிந்து அதை இவள் தகப்பனாரிடமோ காகதீய அரசவையிடமோ வெளியிடும் முன்….. இவளாகவே விலகிக் கொள்வதும்…இவ்விவாஹத்தில் விருப்பம் இல்லை என மறுத்துவிடுவதும் உத்தமமல்லவா…?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அப்படி மறுக்கும் போது மும்மிக்கும் பராக்கிரமருக்குமாய் விவாஹ பேச்செழும்பும்… அவ்வாறு நடந்தாலும் தன் இழப்பை குறித்து வேதனைதான் என்றாலும் தங்கை வாழ்வை குறித்து இவளுக்கு மகிழ்ச்சியே….

அதே சமயம் வரதுங்கருக்கு மும்மியின் மீது ஈடுபாடு இருப்பதால்…அவரும் பாண்டிய இளவல்தான் எனும் வகையில் மும்மிக்கும் வரதுங்கருக்குமாய் பராக்கிரமரே விவாஹம் பேசவும் செய்வார்…. அதுவும் எல்லா வகையிலும் நன்மை பயக்கும் உறவே…. என  நினைந்தாள் ருயம்மா...

ஆகையால் உடனடியாக காகதீயம் திரும்பிவிட இவள் எண்ணம் கொண்டாலும்….. குலசேகர பட்டணத்திலிருந்தே அடுத்த மரகலத்தில் அவள் காகதீயம் நோக்கி பயணப்பட விளைந்தாலும்… அதை எவ்வாறு பராக்கிரமனிடம் வெளியிடுவது என அவளுக்கு தெரியவில்லை….

அவ்வாறு திடுதிப்பென திரும்பிச் செல்ல என்ன காரணம் சொல்லவாம்? அதோடு காதல் கொண்ட மனதல்லவா அவளது…..எதோ வகையில் அவனுடனான தருணங்களை நீட்டிக் கொள்ளவே அது அவளை உந்துகிறதோ? இப்போது திரும்பி காகதீயம் சென்றபின் அவளால் அவள் மனம் கொண்ட மானகவசரை என்றென்றும் காணவே முடியாதே…

ஆக விருப்பத்துடனா இல்லை விருப்பமின்றியா என அறியாமலே ருயம்மா பாண்டிய தலைநகரான செண்பக பொழிலுக்கு செல்ல ஆயத்தமானாள்…

ரகலம் துறைமுகம் சேர்ந்த நேரம் ஒரு மாலைப் பொழுது. கடலாடும் வணிகர்களை போல இவர்களிடம் பெரிதாய் பொதியோ சுமையோ இல்லை என்பதால் அந்நேரமே  பாண்டிய தலைநகரை நோக்கி தன் பயணத்தை துவக்குவான் மானகவசன் என எதிர்பார்த்தாள் ருயம்மா….

அரசனுக்கு அவன் படையுடன் கோட்டைக்குள் இருப்பதுதானே பாதுகாப்பு….

ஆனால் மானகவசனோ அப்படி எதுவும் அவசரம் கொள்ளவில்லை… மாறாக தன் சராசரி வணிக கோலத்தில் துறைமுகத்தை சுற்றி வருவதிலும்.....ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவாய் சுங்கம் வசூலிக்கப்படுகிறது என வணிகன் போல கேட்டறிந்து கொள்வதிலும் காலம் கடத்தினான்….

இவ்வாறாக தனது நாட்டு நிர்வாகத்தை பரிசோதித்தான்..….அனைத்தும் தன் கட்டளைப்படிதான்  நடைபெறுகிறதா என உளவு பார்த்தான்….அனைத்தையும் இவளை அருகில் வைத்துக் கொண்டேதான் செய்தான் அவன்….

அது இவள் மீது அவனுக்கு இருக்கும் நம்பிக்கையை பறை சாற்ற இன்னுமாய் வெந்து தணிந்தாள் ருயம்மா தேவி….

இது போதாதென “நாளை விடியலில் இங்கிருந்து  பயணிக்கலாம்….இன்று இரவு இங்கேயே கழிக்கலாம் “ என தனது பிரயாண திட்டம் சொன்ன மானகவசன்

ஊரின் எல்லைப் பகுதியிலிருந்த ஒரு சத்திரத்தை தேர்ந்தெடுத்து அங்கு  சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு இரவில் தன்னுடன் ஊர்காவலுக்கு வருமாறு இவளை அழைத்தான்….. அதுவும் இவளும் அவனுமாக மாத்திரம் தன்னந்தனியாகவாம்……

விக்கித்து விழித்தாள் காகதீய இளவரசி….

அவள் திகைப்பை கண்ணுற்ற பாண்டிய வேந்தன்…

“இது பாண்டியர்களின் தொன்றுதொட்ட வழமை ருயமரே…. மொத்த தேசத்துக்கு மட்டுமன்றி ஒவ்வொரு ஊரின் பாதுகாவலும் அரசனின் பொறுப்பே ஆகும்…. அதற்கென பிரத்யேகமாய் வீரர்களை ஈடுபடுத்துவதும்…. அவ்வப்போது அரசனே  அதில் நேரடியாக கலந்து கொள்வதும் வேந்தனின் பணிகளில் ஒன்று… மக்களிடமிருந்து இதற்கென பாடிகாவல் என தனி வரியே வசூலிக்கபடுகிறது…..அவ்வாறிருக்க சில திங்களாய் வெளி தேசத்தில் தங்கிவிட்ட நான் இன்றாவது சென்றாக வேண்டும்…. அதோடு பாண்டிய தேசத்தை நேருக்கு நேராய் அறிந்து கொள்ள உமக்கும் இது வெகு சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என விளக்கியவன்

ருயம்மாவை ஒரு அகன்ற துகிலை கொண்டு குளிருக்கு போர்த்துவது போல் தன்னை மூடிக்கொண்டு ஆயத்தமாகி வர சொன்னான்…

படபடப்பாய் இருந்தாலும் ஒரு வகையில் ஒருவித சுவாரஸ்யமும் சேர துணிந்து கிளம்பிவிட்டாள் ருயம்மா…

பாண்டிய பராக்கிரமனுமே உடை முறையை மாற்றியே வந்திருந்தான்….. ஆம் வெற்று மார்பும் இடையில் கம்பீரமாய் உடுத்தி இருந்த குடியானவனின் பருத்தி வஸ்திரமுமாய் அவன்… தோளிலும் ஒரு சாதரண பருத்தி துகில்….

ருயம்மா இங்கு குலசேகரபட்டிணம் வரவுமே அதை கவனித்திருந்தாள்….. கடலாடும் பாண்டிய வணிகர்கள் மரகல பிரயாணத்திலும் இங்கு குலசேகரபட்டிண வீதிகளிலும் அவர்கள் சென்று வரும் நாடுகளின் முறைக்கேற்ப மேலாடை  உடுத்தி இருந்தாலும், சராசரி குடியானவர்களில் ஆண்கள் யாருக்கும் மேலாடை அணியும் வழக்கம் இல்லை….. அந்த சதாரண குடியானவன் கோலத்திற்கு மாறி வந்து நின்றான் பாண்டிய பராக்கிரமன்….

இப்படியாய் தொடங்கியது இவர்களது ஊர்காவல்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.