(Reading time: 40 - 79 minutes)

மானகவசனும் ருயம்மாவும் முதலில் சில பல வீதிகளை சுற்றி அலைந்தனர்….. பொதுவாக ஆள்நடமாட்டம் வெகு சொற்பமே……அவ்வாறு எதிர்பட்ட சிலரும் இவர்களை பெரிதாக சட்டை செய்து கொள்ளவில்லை….

 விதிவிலக்காக யாரோ ஓரிருவர் “யார் நீங்கள்…. ஊருக்கு புதிது போல் தெரிகின்றது….. இங்கு என்ன இந்நேரத்தில்?” என சற்று சந்தேக சாயையுடன் விசாரித்த போதெல்லாம்…. “அரையர் வைரவன் இங்கு வந்திருக்கிறாமே….அவரைப் பார்க்க வேன்டும்….” என ஒரு விடையை சொல்லியவண்ணம் வந்தான் மானகவசன்…..

சத்திரத்திலிருந்து இந்த ஊர்காவலுக்கு கிளம்பும் முன் வரதுங்கன்…..”அரையர் வைரவன்  குலசேகரபட்டிணம் வந்திருக்கிறார் போலும்…..முடிந்தால் அவரையும் பார்த்துவிடு” என மானகவசனிடம் சொல்வதை ருயம்மாவும் கேட்டிருந்தாள்…

வெகு நேரம் சுற்றி அலைந்த பின் இப்போது அவர்கள் வந்து சேர்ந்த இடம் ஒரு உயரமான மண்கரை….. அதில் அகன்று விரிந்த பல மரங்கள்….அருகில் ஏதோ வாய்க்கால் போன்ற நீரோட்டம்….

சிலு சிலுவென வீசும் பனிக்காற்றும் அரை குறையாய் ஆகாயத்தில் தெரியும் பிறை நிலவுமாய் அவ்விடம்….. அத்தனை நேரம் நடந்திருந்ததால் அருகில் கிடந்த பெரும் கல்லில் சென்று ஓய்வாக அமர்ந்தாள் ருயம்மா…..

சுற்றுமுற்றும் பார்த்து அங்கு யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டு, வெகு சிறு குரலில் பேசலானான் பாண்டிய பராக்கிரமன்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“என்ன மௌனம் ருயமரே…? ஏதோ அரையர் பேர் சொல்லி பொய் வேஷம் போட்டு தன் நாட்டு மக்களையே ஏய்கிறான் இப்பாண்டியன் என்று தோன்றுகிறதோ?” வினவிய அவன் வதனத்தில் இலகு பாவம்…

அவன் கேட்ட வகையில் சின்னதாய் புன்னகைத்த வண்ணம் மறுப்பாய் தலையசைத்த அவள்….

“அந்த அரையரையும் மறைமுகமாக கண்காணிக்கத்தான் தாங்கள் தேடுகிறீர் என வீதியெல்லாம் சொல்லிக் கொண்டா வர முடியும்…..?” என விஷமம் தொனிக்க பதில் வினா வினவினாள் காகதீய இளவரசி.

 வரதுங்கன் ‘அவரை பார்த்துவிடு’ என சொன்னதற்கு, ‘உளவு பார்த்துவிடு’ என்பதை தவிர வேறு பொருள் இருக்காது என்பது இவளுக்கு நிச்சயம்…

 இப்போது பாண்டிய வேந்தன் வதனத்திலும் வந்தமர்கிறது இளநகை….. ஒரு சிறு முறுவலுடன்….“ ம்…அப்படியானால் நாட்டின் நன்மைக்காக வேடமிடுவதில்லை தவறில்லை என்கிறீர்” என்றான் ஒருவித ஆமோதிப்பாக.

அவன் முகத்தில் இருந்த முறுவலும் இவ்வினாவின் தொனியும்….. ஏன் எதையோ குறிப்பாக உணர்த்துகிறதாம் இவளுக்கு? ருயம்மாவின் இதயத்தில் ஒரு சிலீர் சாரல் காற்று….

ஒரு வேளை….ஆயிரத்தில் ஒருவாய்ப்பாக….ஒரு வேளை  நான் மாறு வேடத்தில் இருப்பதைத்தான் குறிப்பிடுகிறாரோ பராக்கிரமர்…. ?!!!!!! சில்லிட்டுப் போனாள் இவள்….

விக்கித்தும் விதிர்விதிர்த்துமாய் இவள் தன் மனம் கவர்ந்தவனைப் பார்க்க….

மானகவசனோ….”சரி அதைவிடும்…. உம்மிடத்தில் ஒன்று கேட்க எண்ணியிருந்தேன்….” என்றபடி அடுத்த வினாவை தொடுத்தான்.

“ருயம்மாவின் விருப்பத்திற்கேற்றபடி அவளது வரும்கால மணவாளனும்… அவள் வந்து வாழப் போகும் தேசமும் இருக்கின்றதா என காணத்தானே இவ்வளவு நீண்ட பயணத்தை மேற்கொண்டீர்…. அவ்வளவு அவளது மன வாஞ்சைகளை குறித்து அக்கறையுள்ள நீர்…. விவாஹ முறைகளில் அவள் விருப்பம் குறித்து கேட்கவும் ஏன் விடையளிக்காமல் தவிர்த்தீர்….? “ இதுதான் அவனது அடுத்த வினா…..

இதற்கு என்ன பிரதியுத்தாரம் சொல்வாளாம் இவள்? இன்னுமே திகைத்தாள் ருயம்மா…..

“பெரியவர்கள் சம்பிரதாயங்கள் அதையெல்லாம் விடும்….எனக்கு மனைவியாய் வருபவளின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்க எனக்கு வாஞ்சை இருக்க கூடாதா…..?” அடுத்ததாய் இவ்வாறும் கேட்டான்….

சுவாசமெடுக்க திணறினாள் இவள்…..

“அத்தகைய ஆசை இருக்கிறது ருயமரே….நிறையவே இருக்கிறது….” மரகத குரலில் மந்தகாச மொழியில் இவள் விழி பார்த்து அவன் சொல்லிய வகையில்,  பெண்ணவள் உயிர்காட்டில் தீ நதி பிராவகம்… நனைந்து குளிர்கிறது அவள் காதல் பாலைவனம்…..

சிலையாய் சமைந்திருந்தவள் எண்ணத்தில் எழும்புகிறது ஒரு நினைவு ‘நான் மாறுவேடத்தில் ஏய்க்கிறேன் என தெரிந்துமே இவர் விவாஹத்தை விரும்புகிறாரோ….?’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.