(Reading time: 28 - 55 minutes)

சில நேரம் சூழ்நிலைகளின் பிடியில் தன்னம்பிக்கை தத்தளிக்கும் தருணங்களில் தெய்வ நம்பிக்கையோ அல்லது பிரியமான ஒருவர் மீதான ஆழ்ந்த நம்பிக்கையோ நம்மை சுழலில் அடித்துச் செல்லாமல் கரை சேர்க்கும்.

அன்று வேரறுந்த நிலையில் சித்தார்த்தின் சொல் மீதான நம்பிக்கையின் பலத்தினாலே தான் அபூர்வா பட்டுப் போகாமல் உயிர்மீட்டிருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரீத்தியின் "அடையாளம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

கில உலக நாட்டிய விழாவின் இறுதி போட்டி தனி நபர் நடனம், குழு நடனம் என இரு பகுதிகளில் நடைப்பெற்றது.

தனி நபர் நடனத்தில் உலகில் உள்ள பல்வேறு நடன கலைஞர்களில் இருந்து சிறந்த பத்து பேர் மட்டுமே இறுதி சுற்றுக்குத் தேர்வு பெற்றனர்.

அந்த பிரம்மாண்டமான  அரங்கத்தை அடைந்ததும் விதிமுறைகள் முடிந்து மேற்கொண்டு அபூர்வா மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்ட நிலையில் தன்னிடம் இருந்த சலங்கையை கண்களில் ஒற்றி அபூர்வாவையும் அவ்வாறே செய்யச் சொன்னான் சித்தார்த்.

முழு நாட்டிய அலங்காரத்தில் இருந்தவள் கண்களில் எப்போதும் இருக்கும் துள்ளல் இல்லாமல் தீர்க்கமான உறுதி தென்பட்டது.

அவளது கால்களில் சலங்கைகளை அணிவித்தவன் அவளை மெல்ல அணைத்து நெற்றியில் முத்தமிட்டு “ஆல் தி பெஸ்ட் பூக்குட்டி” எனவும் அங்கு அவன் வடிவில் தன் தந்தையே சொல்வது போல உணர்ந்தாள். அந்த உணர்வுடனே போட்டியில் பங்கேற்க சென்றாள்.

அது வரை போட்டியில் ரஷ்ய நடன மங்கையின் பாலே நடனமும் பிரேசில் நடன கலைஞனின் சம்பா நடனமும் சிறப்பாக அமைந்து அனைவரது பாராட்டினையும் பெற்றிருந்தன.

“தி நெக்ஸ்ட் பர்பார்மர் இஸ் மிஸ் அபூர்வா ஆர் விஜயகுமார் ப்ரம் இந்தியா. ஷி வில் பி பர்பார்மிங் பரத்நாட்யம்” என அறிவிப்பாளர் அறிவிக்க பலரும் மிகுந்த ஆர்வமாகினர்.

“ப்ரீ பைனல்ஸ் ரவுண்ட்ல அவங்க டான்ஸ் ரொம்ப அற்புதமா இருந்தது” அரங்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் சொன்னது சித்தார்த் காதுகளில் விழுந்தது.

இசை தவழ அங்கு மேடையில் அபூர்வா தோன்றினாள். அவளுக்கு கொடுக்கப்பட தீம் “கான்ட்ராஸ்ட் எமோஷன்ஸ்”

ஒரு அழகிய வனம். அதில் ஓர் பெண் மிகுந்த சந்தோஷமாக அங்கிருக்கும் மானோடும் மயிலோடும் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறாள். அபூர்வா இதை ஆடும் போது அவள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியும் உற்சாகமும் காண்போரையும் தொற்றிக் கொண்டது.

திடீரென அப்பெண் ஓர் செய்தி கேட்கிறாள். அதைக் கேட்டவள் திகைத்து உடைந்து போகிறாள். எதிரி தேசத்தின் தளபதி தன் எழில் கொஞ்சும் நாட்டினை சூழ்ச்சியின் மூலம் சூரையாடிவிட்டான் என்பதே அச்செய்தி. மன்னவனை இழந்த நாடும் தந்தையை இழந்த மகளும் அனாதையாகிப் போகின்றனர். அந்த சோகத்தில் அபூர்வா கண்களில் வழிந்த நீரையும் துடித்த துடிப்பையும் பார்த்த அனைவரது கண்களும் கலங்கிப் போயின.

உடனேயே தன் பொறுப்பினை உணர்த்து கோபம் கொண்டு எழுகிறாள். வீராவேசத்துடன் முழக்கம் புரிந்து பூரண போர்க்கோலம் தரித்து வாளேந்தி புரவி மீதேறி சீறிப் பாய்கிறாள். எஞ்சி இருந்த வீரர்களை ஒன்று திரட்டி எதிரியை நோக்கி அவள் செல்லும் காட்சியில் அந்த முகத்தில் கொளுந்து விட்டு எரிந்த கோபாக்னியின் வெப்பம் அரங்கத்தில் இருந்தவர்களையும் தகித்தது.

சினம் கொண்டு அவள் வீரப் போர் புரிந்து எதிரிகளை துவேசம் செய்யும் காட்சி அந்த மகிஷாசுரமர்தினியே நேரில் காட்சி அளித்தது போன்று பிரமிப்பூட்டியது.

போர் முடிந்து எதிர்களை வென்று வெற்றிக்கொடி பறக்க விடுகிறாள். வீரர்கள் வீரமுழக்கம் புரிய இவளோ அங்கே போர்களத்தில் சரிந்த உடல்களை கண்டு வேதனை கொள்கிறாள்.

அந்த போர்களத்தில் அவள் மெல்ல அந்த சரிந்த உடல்களிடையே நடக்க ஒரு முனகல் சத்தம் கேட்கிறது. எதிரி நாட்டு தளபதி தங்கள் நாட்டை சூரையாடியவன் தனது இறுதி மூச்சில்.

“தண்ணீர் தண்ணீர்” அவன் சைகை செய்ய மிகுந்த கருணையோடு அவன் சிரத்தை தனது கைகளில் தாங்கி தனது வீரனை நீர் எடுத்து வர பணித்து அவன் மார்பில் இருந்து பெருக்கெடுத்த குருதியை தனது உடையில் இருந்து கிழித்த துணி கொண்டு நிறுத்த முற்படுகிறாள்.

அவனுக்கு அவள் தண்ணீர் புகட்ட இரு கரம் கொண்டு அவளை வணங்கி மன்னிப்பு வேண்டி அவன் மடிவதாக காட்சி.

அவள் விழியில் இருந்து ஒரு துளி நீர் அவன் மேல் விழுந்து அவனுக்கு மோட்சம் அளிப்பதாக அவள் அபிநயம் செய்தது  அனைவரையும் உருக்கியது.

அங்கிருந்து எழுந்து நின்றவள் இறுதி இசைக்குத் தான் “பாரதத் திருமகள்” என அபிநயித்துக் காட்டவும் அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டினை தெரிவித்தனர்.

மகிழ்ச்சி, சோகம், சூழ்ச்சி, வீரம், கோபம், கருணை என எதிர்விதமான உணர்வுகளை தத்ரூபமாக ஓர் கதை போல நடனத்தின் மூலம் வெளிப்படுத்திய அபூர்வா வெற்றி பெற்றாள் என நடுவர்கள் அறிவிக்க பார்வையாளர்கள் மற்றும்  சக நடன கலைஞர்கள் அனைவரும் அதை அமோதித்து பாராட்டினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.