(Reading time: 28 - 55 minutes)

நான் சொல்லிக்கிட்டு இருந்த பாபா இவர் தான். இவர உள்ள தூக்கிட்டு போவோம்” உடன் இருந்த தனது சகாவை சமீரின் தந்தை பணிக்கவும் அந்த நபர் தயங்கி நின்றார்.

“யோசிச்சு தான் செய்கிறாயா. இந்த இடம் யாருக்கும் தெரியக் கூடாத இடம்ன்னு கொஞ்சம் நேரம் முன்ன தான் சொன்ன ”

“இந்த பெரியவருக்கு சுயநினைவே இல்லை. காதும் கேக்காது வாய் பேசவும் முடியாது. எப்படியும் நாம் இங்க முழு நேரமும் காவல் செய்ய முடியாது. இவர் உபயோகமா இருக்கலாம்” சமீரின் தந்தை சொல்லிவிடவும் அந்த இன்னொரு நபர் சம்மதித்தார். விஜயகுமாரை அந்த மரத்தினால் ஆன வீட்டினுள் தூக்கிச் சென்றனர்.

சிறிது நீர் தெளிக்கவும் மயக்கத்தில் இருந்து தெளிந்த விஜயகுமார் இங்கும் அங்கும் பார்வையை உருட்டி எதிரே நின்ற மனிதர்களை கண்டு பயந்து ஒடுங்கிப் போனார். அதாவது போனது போல நடித்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“பாபா என்னை தெரியலையா” சமீரின் தந்தை சைகை மூலம் அவருக்கு விளக்க முற்பட அப்போதும் விஜயகுமார் விழிகளில் அச்சம் குடிகொண்டிருந்தது.

“அவருக்கு சாப்பிட ஏதாவது குடு” உடன் இருந்த நபரை சமீரின் தந்தை பணிக்கவும் அந்த நபர் கொண்டு வந்த ரொட்டியை விஜயகுமார் கைகளில் சமீரின் தந்தை கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட விஜயகுமார் இப்போது சமீரின் தந்தையை சிறிது சிநேகத்துடன் பார்க்கவும் சமீரின் தந்தை புன்னகைத்தார்.

“சமீரிடம் அவனது மாமா நல்லா இருக்கார்ன்னு சீக்கிரம் போய் சொல்லணும். அவன் சுருண்டு கிடப்பது பார்த்து என் மனம் எவ்ளோ துடிச்சு போச்சு” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் சமீரின் தந்தை.

கையில் இருந்த ரொட்டிகளை உண்டவர் மெல்ல இடது கால் அசைக்க வலியில் துடித்தார். அதைக் கண்ட சமீரின் தந்தை விஜயகுமார் காலினை ஆராய்ந்து அது முறிவு பெற்றிருகிறது என்று உணர்ந்து தனது சகாவிடம் கட்டளைகள் பிறப்பித்தார்.

சமீரின் தந்தையும் அவரின் சகாவும் அந்த கால் முறிவினை சரி செய்து கட்டு போட முனைந்தனர். எப்பேர்பட்ட வலியினையும் தாங்கக் கூடிய வகையில் பயிற்சி பெற்ற விஜயகுமார் அப்போது அவர்கள் முன்னிலையில் வலியினைப் பொறுத்துக் கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை.

அவர் துடி துடித்ததைப் பார்த்து மற்ற இருவரும் ஆறுதல் சொல்லிக் கொண்டே அவரின் முறிவை சரி செய்தனர்.

“காலை அசைக்காமல் இங்கேயே இருக்கணும்” சமீரின் தந்தை சைகை செய்யவும் விஜயகுமார் அமைதியாக அவரைப் பார்த்தார்.

“நீ சொல்றது சரி தான். இத்தனை வலியிலும் தொண்டையில் இருந்து சத்தமே வரல. பைத்தியம் மாதிரி எங்கேயோ பார்த்துட்டு இருக்காரு”

“நான் இன்னிக்கு கிராமம் திரும்பணும். நீ இன்னிக்கு இவர் கூடவே இரு. நான் நாளைக்கு வரேன். இன்னும் ரெண்டு வாரத்தில் பொருள் எல்லாம் வர ஆரம்பிச்சிரும்”

“சரி நானும் தினம் தினம்  இங்கே இருக்க முடியாது. இந்த பாபா இங்க இருப்பது  பொருள்களுக்குக் காவல் இருப்பது போலவும் ஆச்சு”

சமீரின் தந்தை விடைபெறவும் விஜயகுமாருடன் அந்த இன்னொரு நபர் அன்றிரவு தங்கி விட்டிருந்தார்.

மறுநாள் விடிந்ததும் சமீரின் தந்தை உணவு தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் மற்றும் அடுப்பு முதலியவைகளை எடுத்து வந்தார்.

அடிப்படை சமையல் பற்றி சமீரின் தந்தை செய்முறை விளக்கம் காண்பிக்கவும் அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயகுமார்.

“சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இங்கேயே இருக்கணும்” என்று விஜயகுமாரிடம் தெரிவித்து விட்டு தனது மொபைலில் விஜயகுமாரைப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் அவ்வாறு புகைப்படம் எடுக்கும் போது பயந்தது போல முகத்தை மூடிக் கொண்டார் விஜயகுமார்.

“சமீர் நீங்க நல்லா இருக்கீங்கன்னு சொன்னா நம்பவே மாட்டேன் என்கிறான். அவனை இங்க கூட்டிட்டு வரவும் முடியாது. உங்களாலும் அடிப்பட்ட கால் வைத்துக் கொண்டு நடக்க முடியாது. பயப்பட வேண்டாம். இது புகைப்படம் தான்” அவரை சமாதானம் செய்வது போல பேசிக் கொண்டே அந்த புகைப்படத்தை அவரிடம் காண்பிக்க விஜயகுமார் அந்த மொபைலை காணாததைக் கண்டது போல அசட்டுத்தனமாக சிரித்தார்.

“உங்களுக்கு தான் காது கேக்காதே. நான் சொன்னது புரிந்திருக்காது” என்று கூறிக் கொண்டே சமீரின் புகைப்படத்தைக் காட்டவும் அதை தடவி தடவிப் பார்த்துக் கொண்டார் விஜயகுமார்.

விஜயகுமார் மேல் சமீரின் தந்தைக்கும் பரிவு ஏற்பட சிரித்துக் கொண்டே நான் பிறகு வருகிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டார்.

“பூக்குட்டி நீ டான்ஸ் ஆடும் போது காட்டும் அபிநயம் டாடியும் கத்துகிட்டேன்டா. எவ்வளவு இயல்பா என்னால நடிக்க முடிந்தது” மனதில் மகளை நினைத்துக் கொண்டார்.

முன்னதாக சமீரின் தந்தையும் இன்னொருவரும் பேசிக் கொண்டிருந்த செய்தியை அவர் மனம் அசை போட்டது.

“ஒரு வழியா யாரும் கண்டுபிடிக்க முடியாத இந்த இடத்தை தயார் செய்தாச்சு. நமக்கு இன்னும் இரண்டு மாசத்துக்கு வேலை இருக்கும்” சமீரின் தந்தை தனது சகாவிடம் கூறவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.