(Reading time: 78 - 156 minutes)

மூன்று மணி நேரம் கழித்து அவள் வெளியே வர, அவள் சொல்லப்போகும் பதிலுக்காக காத்திருந்தவனிடம் அவள் பேச போக, அவனோ தன் போனை நீட்டினான் அவளிடம்…

புரியாமல் விழித்தவளிடம், “பேசு…” என அவன் சைகை காட்ட, அவளும் வாங்கி காதில் வைத்தாள் போனை…

“ஜானவி… நான் அப்பா பேசுறேன்மா…”

சட்டென அந்த வார்த்தைகளில் கலங்கி போனது அவள் விழி…. எதிரே நின்றவனின் உயரம் அவள் மனதில் அதிகரித்த அதே வேளை,

தகப்பனிடத்தில், “அப்பா… நல்லா எழுதியிருக்குறேன்ப்பா… கண்டிப்பா உங்க ஆசையை நிறைவேத்திடுவேன்ப்பா…” என்றாள் அவள்…

“இது போதும்மா… ரொம்ப சந்தோஷம்… ரொம்ப சந்தோஷம்…” என்றவர்

“ஒருநிமிஷம் இரும்மா… ஜனனி பேசணுமாம்…” என கூற,

“கொடுங்கப்பா…” என்றாள் அவள்…

“ஹேய்… ஜானு… தூள் கிளப்பிருப்பியே பரீட்சையில…” என்றாள் கூவலுடன் ஜனனி…

“ம்ம்… நீ எப்படி எழுதியிருக்க?...”

“நீ தான சொல்லிக்கொடுத்த… பின்ன பாஸ் பண்ணாம இருப்பனா என்ன?...”

“அப்போ சரிடி….”

“சரி வீட்டுக்கு வா… மிச்சத்த அங்க பேசிக்கலாம்…”

“சரி…” என்ற ஜானவி அழைப்பினை துண்டித்துவிட்டு,

கண்ணீர் மல்க தன் முன்னால் இருந்த தன்னவனை பார்த்தாள்…

“தேங்க்ஸ்டா சகி……….” என்றவனுக்குள் ஊற்று போல் சந்தோஷம் பிறக்க, அழுதாள் அவள்…

“ஹேய்… என்னடா… இங்க பாரு… எல்லாரும் இருக்குறாங்க… அழாத….”

அவன் சொன்னதைக் கேட்டு தன் கண்களை துடைத்துக்கொண்டவள், “கிளம்பலாம்…” என்றாள்…

அவனும் பைக்கை ஸ்டார்ட் செய்ய, வழி எங்கும் அவள் எதுவும் பேசவில்லை… கண்ணாடி வழியே தெரிந்த அவளது முகத்தினைப் பார்த்துக்கொண்டே வந்தான் அவன்… லேசான வாட்டம் பிரதிபலித்தது அதில்…

ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவனை பைக்கை நிறுத்த சொன்னாள்…

அவனும் தாமதிக்காமல் நிறுத்த, அவள் அவனையேப் பார்த்தாள்…

“எதுக்கு உன் முகம் வாடிப்போய் இருக்கு?... நான் எதும் தப்பு பண்ணிட்டேனா?...”

அவன் கவலையோடு கேட்க,

“எதுக்கு கார்த்தி இப்படி இருக்குறீங்க?......” என்றாள் அவள்…

அவள் வார்த்தைகளில் அவன் என்ன பேச என்று தெரியாமல் நிற்க,

“முத முத அப்பாகிட்ட தான் நான் நல்லா எழுதியிருக்கேன்னு சொல்லணும்னு நினைச்சு தான போன் போட்டு கொடுத்தீங்க… அன்னைக்கு ஹாஸ்பிட்டல்லயும் எல்லாரும் வந்துட்டு போன பிறகு தான நீங்க வந்தீங்க… எதுக்கு இப்படி பண்ணுறீங்க?... உங்களுக்கு எங்கிட்ட உரிமை இல்லையா?... சொல்லுங்க?...” என்றாள் அவள் அழுகை கலந்த ஆதங்கத்துடன்…

“எல்லாம் இருக்குடி… எல்லாமே இருக்கு…. ஆனா எல்லாமே மாமா, அத்தைக்குப் பிறகு தான்… அவங்க உன்னைப் பெத்தவங்க… அவங்க பொண்ணு நீ… அதனால அவங்களுக்கு தான் எல்லாத்துலயுமே முதல் உரிமை இருக்கணும்… அதுதான் நான் அவங்களுக்கு ஒரு மருமகனா கொடுக்குற மரியாதை… என்னைக்கு நீ என் மனைவியா ஆகுறியோ அன்னைக்கு ஊரறிய உலகறிய உன்னை என் கையில பிடிச்சு கொடுத்து, இனி எல்லாமே என் பொண்ணுக்கு நீங்க தான்னு சொல்லி அவங்க அத்தனை உரிமையையும் எங்கிட்ட தருவாங்க… ஏன்னா அப்போ நீ அவங்க பொண்ணு மட்டுமில்ல… என் மனைவியும் கூட…. நீ என் மனைவியா நம்ம வீட்டுக்கு வந்தாலும், மாமா, அத்தைக்கு உன் மேல இருக்குற உரிமையை நான் எந்த விதத்துலயும் தடுக்க மாட்டேன்… அதுக்கு இடையூறாவும் இருக்க மாட்டேன்…”

அவன் கண்களில் உறுதியுடனும், வார்த்தைகளில் தீவிரத்துடனும் கூற, அவள் உதடு துடிக்க, கண்ணீர் கண்களில் இருந்து வழிய அவனையேப் பார்த்தாள்….

“அழாதடி… நீ அழுதா எனக்கும் அழுகை வரும்டி… ப்ளீஸ்… புரிஞ்சிக்கோ….”

அவன் கெஞ்சிக்கொண்டே தன் விழியினை திரும்பி நின்று துடைத்துக்கொள்ள,

“கார்த்தி……” என்றாள் அவள்…

“சொல்லு சகி…”

அவன் காதலாக கூற,

“எனக்கு உங்களை இப்பவே கட்டிக்கணும் போல இருக்கு….” என்றாள் அவள் சட்டென…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.