(Reading time: 78 - 156 minutes)

நான் வேணும்னு பண்ணலைடி… வேற வழி இல்லாம அப்படி ஒரு காரியத்தை செஞ்சிட்டேன்…”

“அறிவில்ல உனக்கு?... படிச்சவ தான நீ?... செத்துட்டா எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடுமா?... உன்னைப் பெத்த அந்த இரண்டு உயிரையும் நினைச்சுப்பாரு கொஞ்சம்…. அவங்களை நினைச்சிருந்தா தான் நீ அப்படி ஒரு முடிவையே எடுத்துருக்க மாட்டியே…”

“அய்யோ… ப்ளீஸ் ஜனனி… என்னை நீயும் கொல்லாத…. நான் பண்ணினது தப்புதான்… இல்லன்னு சொல்லலை… அதுக்காக எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டேன்… உங்கிட்டயும் ஆயிரம் தடவை கேட்டுட்டேன்… இப்பவும் கேட்குறேன்.. மன்னிச்சிடு… ப்ளீஸ்… எப்பவும் போல பேசு…”

“மனசு ஆறலைடி எனக்கு… மனசு ஆறலை... கார்த்தியை நீ விரும்புற சரிதான்… ஆனா அதுக்காக பெத்தவங்களை தூக்கி எறிஞ்சிட்டு அவங்க கொடுத்த உயிரை நீ மாச்சுக்க நினைச்சது எந்த வகையில சரி ஜானு?... பெத்தவங்க இல்லாத நிலைமை எவ்வளவு கொடுமையானது தெரியுமா?... நீயும் போன பின்னாடி அவங்க உயிரோட இருப்பாங்கன்னு நினைக்குறியா?... சத்தியமா மாட்டாங்க… நீயும் செத்து, அவங்களையும் கொன்னுட்டு உன் காதலை வாழ வச்சா தான் என்ன?... வாழ வைக்காட்டாதான் என்ன?... அதனால யாருக்கு என்ன லாபம்?... உன் காதல் உண்மையானதுன்னு நிரூபிச்சு ஆவியா அலைஞ்சு அதப் பார்ப்பீயா?... இல்ல, வாழ வேண்டிய வயசுல பிள்ளையை பறிகொடுத்துட்டு, நடைபிணமா இருப்பாங்களே பெத்தவங்க அதை கண்ணார கண்டு ரசிப்பியா?... சொல்லுடி என்ன செய்வ?...”

ஜனனி கேட்ட கேள்வியில் இருந்த உண்மை ஜானவியை வாய் பேச விடாது செய்ய, மௌனமாக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் அவள் அழுதபடி…

“நீ தின்ன தூக்கமாத்திரை உன் உயிரை எடுக்குறதுக்குள்ள அர்னவ் வந்து காப்பாத்தினான்… இல்லன்னா உன் நிலைமை?... நீ செத்துப் போன பின்னாடி அவன் மட்டும் உசுரோட இருப்பான்னு உன் மனசு சொல்லுதா ஜானு?... சொல்லு… அவ தன் காதலை உங்கிட்ட மறைச்சதுக்கு ஆயிரம் காரணம் இருந்தாலும், நீ சாவை தேடி போனது தப்பு…. முட்டாள் தனம்… மடத்தனம்…”

ஜனனி ஆத்திரத்தோடு பேச, ஜானவி அமைதியாக அழுது கொண்டே இருந்தாள்…

“சாவு தான் பிரச்சினைக்கு தீர்வுன்னா, என்னைக்கோ நான் செத்து போயிருக்கணும்… யாருமே இல்லாம, எந்த உறவுமே பிடிப்புக்கு இல்லாம இத்தனை வருஷமா நான் நரக வாழ்க்கை வாழ்ந்தேன்… நான் நினைச்சிருந்தா எப்பவோ செத்து போயிருக்கலாம்… செஞ்சேனாடி நான்?... சொல்லு செஞ்சேனா?... தைரியமா இந்த உலகத்துல தனியா நான் வாழலை?... வாழ்ந்து காட்டணும்டி வாழ்ந்து காட்டணும்… இடியே விழுந்தாலும் அதை எதிர்கொள்ளுற துணிவு இருக்கணும் மனுஷனா பொறந்தவனுக்கு… ஒரு விஷயம் நமக்கு கிடைக்கலன்னா, அது வேற யார் கைக்கோ கிடைக்கப்போகுதுன்னு அர்த்தம் இல்ல… அது நம்மை சேர சரியான நேரத்தை எதிர்பார்த்திட்டிருக்குன்னு அர்த்தம்… அநாதையா பொறந்தவ நான், எனக்குப் பெத்தவங்க இல்லைன்னு நான் வருத்தப்படாத நாள் இல்ல… ஆனா, எனக்கும் ஒருநாள் பெத்தவங்க கிடைப்பாங்கன்னு நான் நம்பினேன்… அந்த நம்பிக்கை தான் என்னை இத்தனை நாள் வாழ வச்சது இந்த சமூகத்துல அதுவும் தனியா… என் நம்பிக்கை வீண் போகலையே… எனக்கும் அப்பா, அம்மா கொடுத்துட்டார் கடவுள்…. ஆனா அதை நினைச்சு சந்தோஷப்படுறதுக்குள்ள, அத இல்லாம பண்ண பார்த்தல்ல நீ… பாவி… போடி… பேசாத… எங்கிட்ட….”

“நான் பண்ணினது முட்டாள்தனம் தான்… ஒத்துக்குறேன்… ஆனா, அம்மாவும் அப்பாவும், கண்டிப்பா அந்த முடிவை எடுக்க மாட்டாங்க… நானே போயிருந்தாலும், உனக்காக கண்டிப்பா இருந்துருப்பாங்க… அந்த நம்பிக்கையில தான் நான் அப்படி ஒரு முடிவையே எடுத்தேன்…”

“அறைஞ்சேன்னா பாரு…..” என்றவள் ஜானவியை கை ஓங்கிட, அவளே தன் தவறை உணர்ந்து கையை கீழே இறக்கினாள்…

“சாரி… ஜன்ன்ன்ன்ன்னி…. ப்ளீஸ்டி… பேசு… கஷ்டமா இருக்கு… அடிக்கன்னாலும் செஞ்சிடு… ஆனா பேசாம இருக்காத….”

தோழியின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஜானவி கெஞ்ச, அவளுக்கும் மனது இளகியது…

“இனி இப்படி செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணு முதல்ல…”

“சத்தியமா இப்படி பண்ண மாட்டேன்… போதுமா?...”

“சரி… போய்த்தொலை….” என்றவள், தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு செல்ல முயன்ற போது, நினைவு வந்தவளாக,

“ஆமா ஏன் மூஞ்சியை தொங்கபோட்டுட்டே வந்த?...” என்றாள் ஜனனி ஜானவியிடம்…

“இப்பதான் உனக்கு கேட்கணும்னு தோணுச்சா?...”

“அதான் கேட்டேன்ல… சொல்லுடி… கடுப்பேத்தாம…”

“வர வர நீ உன் தம்பி மாதிரியே பேச ஆரம்பிச்சிட்ட?..”

“இப்போ எதுக்குடி நீ என் தம்பியை உள்ள இழுக்குற?...”

“பின்ன உன் நடவடிக்கை எல்லாம் அப்படித்தான இருக்கு….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.