அப்போது ஜனனி ஓடி வந்து ஜானவியின் தந்தையிடம், “அப்பா…… எனக்கு வேலை கிடைச்சிட்டு….” என கூக்குரலிட, அவருக்கோ சந்தோஷம் தாளவில்லை…
“இப்போதான்ம்மா… நிறைவாயிருக்கு… உனக்கும் ஒரு நல்லது நடக்கணும்னு வேண்டிட்டிருந்தேன்… என் வேண்டுதல் வீண் போகலம்மா… கடவுள் கண் திறந்து பார்த்துட்டார்…”
அவர் பூரிப்புடன் சொல்ல, “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா…” என அவரின் காலில் விழுந்து வணங்கினாள் அவள்…
“நல்லாயிரும்மா… நல்லாயிரு… ஒரு குறையும் இல்லாம சந்தோஷமா இருப்பம்மா… என் பிள்ளைங்க சந்தோஷமா வாழணும்… அது ஒன்னே போதும் எனக்கு இந்த ஜென்மத்துக்கும்…” என்றார் அவரும் மனமார…
பக்கத்தில் நின்ற ஜானவியை கவனித்தவள், அவளிடம் இண்டர்வியூ என்னாச்சு என்று கேட்க, அவள் பதிலுக்கு புன்னகைக்க,
“ஹேய்…. சூப்பர்……….” என்றபடி ஜன்னி ஜானவியை அணைத்துக்கொள்ள, சரியாக அந்நேரம் அங்கே வந்து சேர்ந்தான் அர்னவ்…
விஷயத்தை ஜானவியின் தந்தை அவனிடம் கூற, அவனின் முகம் எங்கும் பெரும் மலர்ச்சி…
ஜன்னியின் அணைப்பில் இருந்தவளின் பார்வை முழுதும் அவன் மீதே இருக்க, தன்னை மீறி வெளிவந்த கண்ணீர்த்துளிகளை துடைத்துக்கொள்ளும் எண்ணமே இல்லாது அவனையே விழி விரியப் பார்த்தாள் அவள்..
அவன் தன் கட்டை விரலை உயர்த்தி காண்பிக்க, பதிலுக்கு கண் மூடி இமைத்தாள் அவள் உதட்டில் உதித்த புன்னகையோடு….
அதன் பின்னர், திருமண தேதியை முடிவு செய்தவர்கள், விரைந்து அடுத்தடுத்து நடக்க வேண்டிய காரியத்தை கவனித்தனர்…
பத்திரிக்கையும் அடித்து வர, அதை ஜனனியிடம் கொண்டு கொடுப்பது போல் கொடுத்து, அவளைக் கையோடு வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று ஜானவி அர்னவிடம் கூற, அவனும் சரி என்று சம்மதம் சொன்னான்…
பிறகென்ன, அவர்கள் திட்டப்படி, ஜனனியும் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டாள்… இன்னும் ஒரு மாத்த்தில் கல்யாணம்… நினைக்கவே இனிப்பாக இருந்த்து அர்னவிற்கு…
நாலு மாதத்திற்கு பின் சென்று, இன்று அந்த நாளிலேயே அவன் வந்து நிற்க, அவனுக்கு சிரிப்புத்தான் வந்த்து…
இந்த நாலு மாதத்தில் எத்தனை சந்தோஷமான தருணங்கள், எத்தனை மறக்க முடியாத நிகழ்வுகள், எத்தனை உவகைகள்… எண்ணி எண்ணிப் பார்த்த போதும் அவனுக்கு தெவிட்டவே இல்லை கொஞ்சமும்…
இருந்தாலும் இன்னும் ஒரு மாதம் ஜானவியிடம் சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும்… இல்லையெனில் இன்று போல் உளறிவிட நேரிடும்… என நினைத்தவன், அதை தன் மனதில் பதிய வைத்துக்கொண்டான்…
இரண்டு நாட்கள் கழித்து, சரயூ திலீப், குழந்தைகள் சகிதம் வீட்டிற்கு வர, அவளை வரவேற்றான் அர்னவ்…
“வாங்க சிஸ்… வாங்க மாமா… ஹேய் குட்டீஸ் வாங்க வாங்க…”
“ம்ம்…” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் உள்ளே செல்ல, குட்டீஸ்களும் உள்ளே ஓடினர்…
“உன் மேல சின்னக்கோபம் அவளுக்கு… நீ எதுவும் நினைச்சிக்காத அர்னவ்…”
திலீப் அணுசரனையாய் கூற, அர்னவோ சிரித்தான்…
“எனக்குப் புரியுது மாமா… நான் பார்த்துக்குறேன்…” என அர்னவ் சொன்னதும், திலீப்பும் புன்னகைத்தபடி உள்ளே சென்றான்…
அதன் பின்னர் அனைவரும் கிளம்பி கடைக்குச் செல்ல, கல்யாணக்கலை வந்திருந்தது இருவரின் முகத்திலும்…
கடைக்குச் சென்றதும், ஜானவியை அழைத்தான் அர்னவ்… அவள் அவனருகே வர, அவளையும் அழைத்துக்கொண்டு, சரயூவிடம் சென்றான்…
“சிஸ்….”
அவன் அழைத்ததும், திரும்பாமல் நின்றவள், “அக்கா… ப்ளீஸ்… இங்க பாருங்க…” என்ற குரல் கேட்டதும் திரும்பினாள்…
இருவரும் ஒருசேர கைகூப்பி, “எங்களை மன்னிச்சிடுங்க… நாங்க செஞ்ச எல்லா தப்புக்கும்… திட்டிட்டா கூட பரவாயில்லை… ஆனா இப்படி பேசாம மட்டும் இருக்காதீங்க… கஷ்டமா இருக்கு…” என கூறிவிட்டு கலங்கிய தங்கள் கண்களை அவர்கள் துடைத்துக்கொள்ள,
“ஹேய்… லூசுகளா?.. இதென்ன சின்னப்பிள்ளையாட்டம் அழுதுகிட்டு?...” என்றவள் அர்னவின் கரத்தினை பிடித்துக்கொண்டாள்..