(Reading time: 78 - 156 minutes)

நிமிர்ந்து பார்க்காமல் விடமாட்டான் என நினைத்துக்கொண்டிருந்த போது,

பிரேமி ஜானவிக்கு அவளது இடது கன்னத்தில் முத்தம் கொடுக்க, ஜானவியின் விழிகளோ சட்டென நிமிர்ந்தது…

அதற்காகவே காத்திருந்தது போல் அவனும் அவளது பார்வையை எதிர்கொள்ள, இரு விழிகளும் அருகருகே தங்கள் துணையை ரசித்துக்கொண்டிருந்த போது,  

“மாமா அத்தைக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டேன்… இன்னொன்னும் கொடுக்கவா?...” என பிரேமி கேட்க,

“ம்ம்ம்ம்ம்….. அது என் சார்பா…” என்றான் அவளையே பார்த்த வண்ணம்…

பிரேமி இன்னும் சாய்ந்து அவளது வலது கன்னத்தில் பூசிய சந்தனத்தில் இதழ் வைத்து, முத்தம் கொடுக்க, உடலெல்லாம் சிலிர்த்து போனது ஜானவிக்கு….

வெட்கம் பிடுங்கி தின்ன, பட்டென்று கண்களை மூடிக்கொண்டாள் அவள்…

அவளின் வெட்கத்தினை மிக பக்கத்தில் ரசித்தவனுக்கோ அப்போதே அவளை தன்னுடன் இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருக்க, தன் உணர்வினை கட்டுப்படுத்தினான்…

“அக்கா… அங்கே என்ன நடக்குது?... பிரேமியை தூக்கி வச்சு அர்ன்வ் என்ன பண்ணுறான்?..”

ஜன்னியின் கேள்வியாய் கேட்க, “அத தான் நானும் பார்த்துட்டிருக்கேன்… இந்த ஜானு என்னடான்னா, குனிஞ்ச தலை நிமிரமாட்டிக்குறா?...” என்றாள் சரயூவும்…

“எனக்கென்னவோ நடக்குறதைப் பார்த்தா அர்னவ் எதோ கேம் விளையாடுற மாதிரி தெரியுது…”

“சரியா சொன்ன ஜனனி… வா மேல போகலாம்…”

இருவரும் மேலே வந்த போது, பிரேமி, ஜானவியின் மடியில் இருந்தாள்…

“ஹேய்… என்னடா நடக்குது இங்க?... என் பொண்ணை வைச்சு ப்ளே பண்ணிட்டிருக்கியா நீ?...”

சரயூ கோபமாக கேட்க, அர்னவோ ஒன்றும் தெரியாத்து போல் இருந்தான்…

“டேய்… டேய்… நீ யாரு… எப்பேர்ப்பட்டவன்னு எனக்கு நல்லாவே தெரியும்டா கேடி… இனி என் பொண்ணை தூக்கி கொஞ்சுற சாக்குல ஜானவி பக்கம் சாஞ்ச, மகனே அடி வெளுத்துடுவேன் சொல்லிட்டேன்…” என சரயூ மிரட்ட, அவன் அப்போதும் ஒரு நமுட்டு சிரிப்போடு எதுவுமே நடவாதது போல் அமர்ந்திருந்தான்…

“ஏண்டி… அவன் தான் லூசு வேலை பண்ணுறான்னு தெரியுதுல்ல… மண்டையில நாலு கொட்டு கொட்டி, சேட்டை பண்ணாம இருன்னு சொல்லமாட்டியா நீ?...”

ஜனனி ஜானவியை முறைக்க

“இல்ல… அது….”  என்று இழுத்தாள் அவள்..

“அது சரி… இங்க வெறும் காத்து தான வருது… அதான் சார் ரொம்ப துள்ளுறார் போல…” என்ற சரயூ அர்னவின் காதினை திருகினாள்…

“சிஸ்… வலிக்குது விடுங்க…” அவன் கெஞ்ச, அவள் மசியவில்லை…

“அக்கா… பாவம்… விடுங்கக்கா… அவருக்கு வலிக்குது….”

ஜானவி பாவமாய் கெஞ்ச,

“இத பார்த்தியாடி ஜனனி… இவ்வளவு நேரம் இங்க காத்து தான் வந்துச்சு… இப்போ பார்த்தீயா வாய்ஸ் எப்படி பளீர்ன்னு வெளிவருதுன்னு…”

“ஆமாக்கா… நானும் கவனிச்சேன்… சுவிட்ச் அங்க போட்டா, லைட் இங்கல்ல எரியுது….”

ஜனனியும் தன் பங்கிற்கு அவர்களை காலை வார, இருவருக்குமே சிரிப்பு வந்தது….

“பார்த்தியா அவன் சிரிக்குறான்?...”

சரயூ முறைத்துக்கொண்டே சொல்ல,

“சிஸ்… முதல்ல எங்களை முறைக்குறதை விட்டுட்டு, போய் வேலையைப் பாருங்க…”

அர்னவ் சிரிப்புடன் சொல்ல,

“அதான… அக்கா… முதல்ல கீழே போங்க… மாமா உங்களை தான் ரொம்ப நேரமா பார்த்துட்டிருக்குறார்… போயி அவரை கவனிங்க…” என்றாள் ஜானவியும் கேலியுடன்…

“பிசாசுகளா?.. என்னையே கலாய்க்குறீங்களா?... உங்களை…” என்றவள் கைகளை ஓங்கிய தருணம், திலீப் அங்கிருந்து அவளை வா என அழைக்க, அவள் தன் கைகளை பட்டென கீழே இறக்கினாள்..

“ஜானவி எனக்கு ஒரு டவுட் டீ?...”

“என்ன டவுட் கேளு ஜன்னீ…..”

“இல்ல கல்யாணப்பொண்ணு நீயா?... இல்ல அக்காவா?...”

“மாமா பாக்குறதுலேயே உனக்குத் தெரியலை…”

ஜானவி கேலியுடன் கூற, அவளின் காதினை பிடித்து திருகியவள், ஜனனியின் முதுகிலும் ஒன்று போட்டு விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கினாள் முகத்தில் வெட்கத்தோடு…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.