(Reading time: 26 - 51 minutes)

"ஏன் இந்த அதிர்ச்சி, என்ன ஆயிற்று?" என்று சம்யுக்தன் வினவினான்.

அதற்கு பூங்கொடி, "உங்களுடன் வீடு வரை நடந்தே செல்லலாம் என்று ஆசையாக இருந்தேன். ஆனால், நான் வந்த மாட்டு வண்டி வழியிலேயே நின்றுகொண்டிருக்கிறது. என் தோழிகள் இன்னும் எனக்காக காத்திருக்கிறார்கள் போலிருக்கிறது" என்றாள்.

உடனே சம்யுக்தன், "அவர்களை இப்படி காக்க வைத்துவிட்டு நீ ஓடி வந்திருக்கிறாயே" என்றான்.

"மாட்டு வண்டியை நெருங்கும் வரை நாம் பேசிக்கொண்டே செல்லலாம் அல்லவா?" என்றாள் பூங்கொடி.

பார்த்திபன், 'இவர்களின் காதல் லீலையை என்னால் தாங்கவே முடியவில்லையே' என்று மனதில் நொந்துகொண்டான்.

சம்யுக்தன், "நானும் இளவரசரும் சண்டையிட்டபோது நீ எதற்காக அங்கே வந்தாய்?" என்றான்.

"தங்களின் வீரத்தைப் பார்க்கத்தான் அத்தான். அங்கே தங்களின் வீரத்தையும் பார்த்தேன், தாங்கள் என் கொலுசின் ஒலியைக்கேட்டு மயங்கி நின்றதையும் பார்த்தேன்"

"நான் ஒன்றும் மயங்கி நின்று விடவில்லை. வாள்களின் ஓசையின் நடுவே கொலுசின் ஓசை கேட்கிறதே என்று தான் பார்த்தேன்"

அவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோதே மாட்டு வண்டியை நெருங்கிவிட்டார்கள்.. சம்யுக்தனுடன் பூங்கொடி வருவதைப் பார்த்த அவளுடைய தோழிகளின் முகத்தில் மலர்ச்சி.

பூங்கொடியைப் பார்த்ததும் ஒருத்தி, "எங்கே சொல்லாமல் கொள்ளாமல் சென்றாயடி? உன்னைக் காணாமல் நாங்கள் தவித்துவிட்டோம்" என்றாள்.

பூங்கொடி, "நான் உங்களிடம் சொல்லிவிட்டுத்தானே சென்றேன், உங்களின் காதுகளில் விழவில்லையா? வைத்தியரிடம் சென்று உங்களின் காதுகளை முதலில் காட்டுங்கள்" என்றாள்.

சம்யுக்தன், மாட்டு வண்டியில் சற்று வயதான பெண்கள் சிலர் இருப்பதை பார்த்து, "இவர்களும் உன் தோழிகளா?" என்று கேலிச் சிரிப்புடன் கேட்டான்.

"நாங்கள் பூஜை முடிந்து வந்துகொண்டிருந்தபோது, இவர்கள் வழியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பார்க்க பாவமாக இருந்ததால், இரக்கப்பட்டு எங்கள் வண்டியில் ஏறிக்கொள்ளச் சொன்னோம். அந்த வேளையில் தான் நான் உங்களைப் பார்க்க ஓடி வந்தேன்" என்றாள் பூங்கொடி.

சம்யுக்தன், "சரி, சீக்கிரம் வண்டியில் ஏறிக் கொள். நேரமாகிறது" என்றான்.

அப்போது ஒரு தோழி, "சற்றுப் பொறுங்கள். எங்களின் பாதுகாப்பிற்காக வந்த வீரர்கள் பூங்கொடியை தேடிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வந்து விடட்டும்" என்றாள்.

ஒரு பெண், "பூங்கொடி வந்து விட்டாள்!" என்று சில முறை உரக்க கத்தினாள்.

அதைக்கேட்டு பூங்கொடியைத் தேடிச்சென்ற வீரர்கள் சற்று நேரத்தில் வந்துவிட்டார்கள்.

"வண்டி புறப்படட்டும்" என்று சம்யுக்தன் சொன்னான்.

அப்போது பூங்கொடி, "அத்தான், நீங்களும் எங்களுடன் வாருங்கள். தாமதமாக வீட்டிற்கு செல்வதால், தாய் தந்தையர் என்னைக் கடிந்துகொள்வார்கள். நீங்களும் என்னோடு வந்தால் தங்கள் முகத்தைப் பார்த்து என்னை விட்டு விடுவார்கள். அது மட்டுமின்றி, இந்த வயதான வண்டிக்காரர் வண்டி செலுத்தும் வேகத்தைப் பார்த்தால் இரண்டு நாட்கள் கழித்து தான் வீடு சென்று சேருவோம் போலிருக்கிறது. தாங்கள் தான் வண்டி ஓட்டுவதில் கைதேர்ந்தவர் ஆயிற்றே. தாங்கள் வண்டி ஓட்டினால் நேரத்தோடு வீட்டை அடைந்துவிடுவோம்" என்று கூறினாள்.

பார்த்திபனும், "பூங்கொடி சொல்வது சரிதான்" என்று கூறி ஒரே பாய்ச்சலாக வண்டியில் ஏறி எல்லாப் பெண்களையும் பார்த்து அசடு வழிய சிரித்தான்.

சம்யுக்தன், பார்த்திபனின் தோளை மெதுவாகத் தட்டினான்.

பார்த்திபன் திரும்பி, "நீ இன்னும் ஏற வில்லையா?" என்று கேட்டான்.

சம்யுக்தன், "நீ முதலில் கீழே இறங்கு" என்று கூறினான்.

"எதற்கு?"

"நீ கீழே இறங்கு சொல்கிறேன்"

பார்த்திபன் கீழே இறங்கினான். உடனே, சம்யுக்தன் வண்டிக்காரரை சற்று தள்ளி உட்கார சொல்லிவிட்டு வண்டியில் ஏறினான்.

பார்த்தியன், "இப்போது நான் ஏறவா" என்றான்.

சம்யுக்தன், "பெண்களைப் பார்த்தால் காவல் புரிவதை மறந்து விடுவாயே. நீ உன் காவல் பணியை தொடர்ந்து செய். நான் பூங்கொடியை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று சொன்னான்.

பார்த்திபன், "நான் மட்டும் காவல் புரிய வேண்டும், நீ காதல் புரிய வேண்டுமோ?" என்றான்.

சம்யுக்தன் அவன் சொன்னதைக் கேட்டு முறைத்துப் பார்த்து விட்டு வண்டியை செலுத்தினான். வண்டியில் இருந்த பெண்கள் பார்த்திபனின் நிலையைப் பார்த்து சிரித்தார்கள்.

ண்டி சென்று கொண்டிருந்தது. தோழிகள் பூங்கொடியையும் சம்யுக்தனையும் பார்த்து கேலி பேசி சிரித்துக்கொண்டு வந்தார்கள். பூங்கொடி, "போதும் உங்கள் விளையாட்டு" என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூறினாள். அவள் வெட்கப்படுவதை சம்யுக்தன் ரசித்துக்கொண்டே வண்டி ஓட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.