(Reading time: 32 - 64 minutes)

ஞ்சள் வெயில் மயங்கி இரவின் மடியில் வீழ்ந்துகொண்டிருந்தது, கோவில் கருவரையின் எதிரே விரிந்திருந்த வேப்பமரம் அதனை சுற்றி அமைந்திருந்த மேடை, அதன் மேல் நட்சத்திரங்களாய் மின்னும் எலும்பிச்சை விளக்குகள். சின்னதாய் கோவில் பிரகாரம், எதிரே திவ்ய ரூபினியாய் தேவி துர்கா. முன்பு மகிடனின் தலையை மண்ணில் உருட்ட நர்த்தனம் ஆடிய மகாசக்தி துர்காவின் திரு உருவம் தான், ஆனால் இந்த முகத்தில் தான் எத்தனை களை, அழகு, மென்மை, சாந்தம்,  பார்க்க திகட்டாத அந்த கல்யாண துர்கையின் சன்னதி எதிரே தர்ஷினியும், கீர்த்தனாவும் கண்கள் மூடி நின்றனர். சக்தியின் சன்னதியில் மனம் சலனமற்று பெரும் நிம்மதியை மனதில் நிலை நிறுத்தியது.

தீபாராதனை கண்ணையும் கருத்தையும் நனைக்க, கண்களில் ஒற்றிக் கொண்டவள் வெகுநேரம் கண்கள் மூடிநின்றாள். உள்ளே உணர்வுகளை உருத்தும் ஓர் முகம் அவ்வப்போது வந்து இம்சித்தது. சக்திதேவி, இன்றோடு இந்த மனக்குழப்பம் நீங்கட்டும் என வேண்டியவள் விழிகளை திறக்கும்போது, தர்ஷினி அருகே இல்லை, கொடுத்திருந்த அர்ச்சனைத்தட்டை வாங்க அவள் சென்றிருந்தாள். பிரசாதம் வாங்க வலதுகையை நீட்டினாள். அவளது அழைப்பிற்கு செவி சாய்க்காது கடந்துசென்ற அர்ச்சகரை எப்படி அழைப்பதென தயங்கிநின்ற தருணம், குவித்து நீட்டப்பட்ட உள்ளங்கையில் விழுந்தது துளி குங்குமம். நிமிர்ந்து பார்க்கும்போது, சக்தியின் வடிவம்போன்று களையான முகம், நேர்த்தியாக உடுத்தபட்ட கதராடை நெற்றியில் கீற்றாய் திருநீரு கீழே சிறியதாய் ஒரு கருப்பு பொட்டு, குறுநகை தவழும் அந்த முகத்தை பார்த்தபடி நின்றாள் கீர்த்தனா.

“குங்குமம் இட்டுகோமா! ஐயர் உன்ன கவனிச்சுருக்க மாட்டார், அவர் கொடுக்கலையேனு நினைக்காத, அம்பாள் என் மூலமா உனக்கு கொடுத்த பிரசாதமா இருக்கும் இது. நான் குங்குமம் இட்டுக்க முடியாது, என் கையில் அம்பாள் கொடுத்த மங்கல பிரசாதத்த நான் உனக்கு கொடுத்துட்டேன்.. அவ்வளவுதான், வச்சுக்கோ!”

பதிலுக்கு இவள் புன்னகைத்தாள். அந்த கணத்தில் நிறைந்துபோனது மனது. மோதிரவிரலில் தொட்டு நெற்றியில் கீற்றாய் இட்டாள்.

“சுமங்கலி எப்போதும் வகுடலயும், திருமாங்கல்யத்திலயும் குங்குமம் வச்சகனும்! இந்த காலத்து பெண்ணுங்க, அதுக்கு கூச்ச படுறாங்க, நீ மாங்கல்யத்தில குங்குமம் வச்சுகோமா, அது உன்னயும் உன்னவரையும் என்னைக்கும் பினைச்சு வைக்கும்.” சொல்லிவிட்டு கடந்து போனார் அவர்.

அதிரிந்து போனாள் பெண். கை அவளை அறியாது பாய்ந்து கழுத்தை தடவியது, இரண்டு மூன்று ஊக்குகள் பினைத்து அவள் சேலைக்குள் மறைத்தாய் நினைத்த மாங்கல்ய சரடு வெளியே துருத்திநின்றது. உடலும் மணமும் ஒரு நோடி அதிர்ந்து நடுங்கி பின் அமைதியானது. இன்னும் சில நிமிடங்களில் கழட்டி உண்டியலில் போடபோகிறாள் தான், ஆனால் அது கழுத்தை வருடும்போது மார்ப்புக்குள் உரசும்போது தன்னை அறியாது அவளுள் எழுகிற அந்த உணர்வின் அர்த்தம் தான் என்ன? தர்ஷினி வந்தாள். அவளைப்பார்த்தமும் குழப்பங்களை மறைக்க எண்ணி ஒரு வெற்றுபுன்னகை கையிலிருந்த கூடையிலிருந்து குங்குமத்தை எடுத்து இவளது நெற்றியில் இட்டாள் தோழி, கைகளைப்பற்றி அழைத்துப்போனாள் எதிரே விரிந்து, பரந்திருந்த வேப்பமரத்தின் ஓர் தாழ்வான கிளையில் பானையால் ஆன ஓர் உண்டியல், அந்த மரத்தை சுற்றி தான் எத்தனை பெண்கள், பாவாடை தாவணியில், புடவையில் சுடிதாரில் இன்னும் அழகாய் ஆர்வமாய் சுற்றி வருகின்றனர்,

“இந்த வேப்ப மரத்தில மஞ்சள் கயிறு கட்டினா கல்யாண வரம் கிட்டும்ங்கிறது இங்க ஐதீகம், இந்த துர்கையம்மனோட பேரே, கல்யாண துர்கைதான்!” – தர்ஷினி

“ம்ம்..” – கீர்த்தனா

“வா உண்டியல்ல மாங்கல்யத்த போட்டுட்டு அப்படியே சுற்றி கும்பிட்டுட்டு கிளம்பலாம்” என கீர்த்தனாவின் வலதுகையைப்பற்றி அவள் அழைத்த தருணம்

“பூம்ம்.. “என்ற சத்தம், வாயால் எழுப்பப்பட்ட ஒலிதான். இருவரின் செவியருகேயும் அது பாய, வெக்கித்து திரும்பினர். வழக்கமான குறும்புடன் காவ்யா. கீர்த்தனா புன்னகைத்தாள், தர்ஷினியோ, “ஐயோ இவளுக்கு என்ன சொல்லி விளக்குவதென விழித்தாள்!”

“ஏய் நான் என்ன அப்படி பயப்பிடுற மாதிரியா இருக்கேன் இரண்டு பேரும் இப்படி முழிக்கிறீங்க!” – காவ்யா

“ஐயோ, கீர்த்தனா மழை கொட்டப்போது.. சீக்கிரம் வீட்டுக்குபோனும்!” – மேகங்களின் அடையாளமே இல்லது நட்சதிரங்களின் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்த வானத்தைப்பார்த்து கிண்டலாக தர்ஷினி கூற,

“ஹையடா, நக்கல்,  நான் கோயிலுக்கு வந்தா மழை வரும்னா, அப்படியாவாது மழை பெய்யட்டும் தர்ஷூ”

தர்ஷினி முகத்தை சுழிக்க, கீர்த்தனா அமைதியாய் தோழியர் இருவரையும் பார்த்திருந்தாள்.

“போச்சுடா, நீ தான் சாமிகொண்டாடியா மாறிட்டனா, இவளையும் ஏண்டி கெடுக்கிற”  இது தர்ஷினிக்கு, அடுத்து கீர்த்தனாவைப்பார்த்து, “கீர்த்து, இவ பேச்ச கேட்காத, இங்க வந்தா உடனே கல்யாணம் ஆகும்னு இவ சொல்லிருப்பாளே, அப்படியே மரத்த சுத்துனும் சொல்லிருப்பாளே!”

ஆமாம் என்பதுபோல் கீர்த்தனா புன்னகையுடன் தலையசைக்க,“ஆமாண்டி அப்படிதான் சொன்னேன் அவ இன்னும் மரத்த மட்டும் தான் சுத்தல அது மட்டும் பாக்கி!” என்றாள் கோபமாக, பின் கீர்த்தனாவின் பக்கம் திரும்பி, “கீர்த்து நீ போய் சுத்தி கும்பிட்டுட்டு உண்டியல்ல போட வேண்டிய காணிக்கைய போட்டுட்டு வா, நாங்க பிரசாத ஸ்டால் கிட்ட வெயிட் பன்றோம், ஒன்னும் அவசரமில்ல, புரியுதா?” என்றாள். தர்ஷினியின் முகக்குறி கீர்த்தனா செய்ய வேண்டிய காரியத்தை தெளிவாய் அவளுக்கு உணர்த்த, அவள் முன்நோக்கி நடந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.