(Reading time: 13 - 26 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

பணத்துக்குத் தக்கவாறு மூர்த்தியின் பெருமையும், பணம் கொடுப்பவர்களின் பெருமைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு அங்கே தரப்படும் சலுகைகளும் சிறப்புகளும், மடங்களிலும் மற்ற அறநிலையங்களிலும் பணத்துக்கு வரவேற்பு அமைந்துள்ள சிறப்பும் பெருமையும் ஆகிய எல்லாம் நினைவுக்கு வந்தன.

  

எப்படியோ என் தங்கை மணிமேகலையை ஏழை ஆசிரியர் ஒருவர்க்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு முடிவு ஆயிற்று. அடுத்து, என் பேச்சு வந்தது. இனிமேல் படிக்க வைக்க முடியாது என்பதை அப்பா தெளிவாக்கி விட்டார். முன்பின் தெரியாத குடும்பத்துப் பெண்ணைக் கொண்டுவந்து மருமகளாகக் கொண்டால், இந்த ஏழைக் குடும்பம் என்ன ஆகுமோ, தெரிந்த வீட்டில் வேலூரில் உள்ள பெண்ணே நமக்குப் போதும் என்ற கருத்தையும் தெரிவித்தார். அம்மா ஒன்றும் கூறாமல் அமைதி ஆனார். நானே அம்மாவிடம் என் தயக்கத்தைச் சொன்னேன். "அத்தை மகள் என்பது ஒன்றுதான் குறை; பெண்ணைப் பொறுத்த வரையில் வேறு குறை இல்லை. மற்ற எல்லாப் பொருத்தமும் இருந்து ஒரு குறை இருந்தால் இருந்து போகட்டும்" என்றார். "வாய் துடுக்கு அல்லவா அம்மா?" என்றேன். "சின்ன வயதில் அப்படி இருந்தாள். இப்போது இல்லை. தவிர, நாம் புது உறவு தேடிப்போனால், அங்கே அந்தப் பெண்ணைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? இயற்கையாகவே வாய் துடுக்காக இருந்தாலும் முதலில் அடக்கமாகப் பழகுவாளே, அப்போது ஏமாறுவோம் அல்லவா," என்றார். வேறு வழி இல்லைபோல் தோன்றியது. "தேர்வு முடிவு தெரியட்டுமே" என்றேன். "அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இரண்டு திருமணமும் ஒன்றாக நடந்தால் செலவு குறையும்" என்றார்.

  

கல்லூரியில் படித்த காலத்தில், அது ஓர் அறை என்றும், படித்து முடித்த பிறகு புகும் உலகம் திறந்தவெளி என்றும் கற்பனை செய்து கொண்டிருந்தேன். தங்கையின் திருமணப் பேச்சும் என் திருமணப் பேச்சும் அவற்றை ஒட்டிய சிக்கல்களும் எனக்கு உண்மையை உணர்த்தின. நான் இதுவரையில் இருந்ததுதான் திறந்தவெளி என்றும், இப்போது புகும் வாழ்க்கைதான் புழுக்கம் மிகுந்த அறை என்றும் உணர்ந்தேன்.

  

என் கவலையையும் சோர்வையும் பாக்கிய அம்மையார் உணர்ந்து கொண்டார். "கயற்கண்ணியைவிட நல்ல பெண்ணாக, தெரிந்த பெண்ணாக, இருந்தால் சொல், நானே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்லி ஏற்பாடு செய்வேன்" என்றார்.

  

சொல்லத் தெரியாமல் விழித்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.