------
சதா! "அம்மா! அம்மா!" என்று வாய்ப்பிதற்றுகிறான். பிறகு விடுதலை தினம் இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்றன என்ற செய்தி தெரிந்ததும் எங்குமில்லாத உற்சாகம் பொங்கிவிடுகின்றது. "என் தாயைக் கண்டு களிக்கும் நாள் சமீபித்துவிட்டது; இனி என்னுயிர் போனாலும் நான் தாயின் வாக்கை மறுப்பதில்லை, நான் இங்கிருந்து விடுதலை யடைந்தவுடனே முதல் முதல் தாயின் அருகில் ஓடி அவள் பாதத்தில் விழுந்து பலகோடி தண்டனிட்டு அவளிடம் நான் செய்த குற்றத்திற்காகக் கன்னத்திலறைந்துகொண்டு மன்னிப்புக் கேட்கப் போகிறேன். என் செல்வச் சோதரிகளை வாரியணைத்து முத்தமிடப் போகிறேன். நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் என் சகோதரனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் கூறி அவர்களுக்கு நற்புத்தி புகட்டப்போகிறேன். என்னுடைய சகல துர்க் குணங்களையும் இச் சிறைச்சாலையிலேயே குழி வெட்டி மூடிவிட்டுப் போய் விடப் போகிறேன். தேவாதி தேவா! ஸ்ரீ பார்த்தஸாரதி! எனக்கு இனிமேல் இத்தகைய மதியை அளிக்காதே!" என்று பல விதமாக எண்ணமிட்ட வண்ணம் அந்த இரண்டு நாட்களையும் ஒரு நிமிடத்தை ஒரு யுகமாகக் கடத்தினான்.
ஆகா! அன்னையின் அன்பிற்கு ஒரு உவமை யுண்டா! அந்த தனிச் சுடரின் இன்ப மனுபவியாதவர்கள் பாபாத்மாக்கள் என்பதற்கு ஐயமே இல்லை. "அன்னையோடு அறுசுவை உண்டியும் போம்; தாயோடு போயிற்று அன்பு; தேரோடு முடிந்தது திருநாள். தாயில்லாப் பிள்ளையோ வாயில்லா ஊமையோ!" என்றெல்லாம் ஆன்றோரால் கூறப் பட்ட பழமொழிகள் பொய்த்து விடுமா! அந்தோ! தாயைப் போன்ற பாசத்தைக் காட்டி, ஊட்டி வளர்த்து விட்ட செவிலித் தாயின் அன்பே பெருத்த மலை போன்றிருக்கையில் தாயின் உண்மையான அன்பு கூறவேண்டுமா? தாயைப் பிரிந்து வருந்திய அந்த மனிதனுக்குத் தாயைப் பார்க்கப் போகின்றோம் என்கிற பெரிய ஆசை உண்டானதும் இழந்த பலமும், நீங்கிய தெம்பும் களைத்தெழுந்தது. அவன் அங்கம் அன்பின் வலுவால் பெருத்தது. விடுதலை செய்யும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண் டிருந்தான்.
--------
அந்த நேரம் வந்தது. அதினரிகள் அவனை அழைத்து அனேக புத்திமதிகள் கூறி "இனிமேல் இத்தகைய காரியம் செய்தால் தீவாந்திர சிக்ஷை விதிக்கப்படும்" என்று கூறியனுப்புகின்றார்கள்.