ஏட்டு கந்தசாமி : “ சார் ! , எனக்கு தெரிஞ்சு இது கொலை தான்னு நான் நெனைக்கிறேன் . நமக்கு இப்ப கெடச்சிருக்கிற ஒரே தடயம் , இந்த இடதுகுதிங்கால் வெட்டு தான் சார் ... . “ .
இன்ஸ்பெக்டர் ரவி : “ இந்த விஷயம் , நமக்குள்ள மட்டுமே இருக்கட்டும் . வெளில தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க . “ என்றார் .
இருவரும் வெளியே நடந்து வந்தார்கள் . அங்கிருந்த ஒவ்வொருவரையும் , தன் பார்வையால் சலித்துக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ( வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் மரணத்துக்குக் காரணமானவர் , தவபுண்ணியம்தான் என்று தெரிந்தும் , தற்போதைய சூழ்நிலையைக் காரணம் காட்டி , மௌனம் சாதித்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . ) நேரம் ஆக , ஆக , கூட்டம் சற்று குறைய ஆரம்பித்திருந்தது ... ஒரு கட்டத்தில் நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது . தவபுண்ணியம் மற்றும் ராமலிங்கத்தின் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது . தவபுண்ணியமும் , ராமலிங்கமும் கிளம்பத் தயாராயிருந்தார்கள் . தவபுண்ணியத்தைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , “ சாரி சார் ! உங்க நண்பர் இறப்பிற்கு , எங்களோட ஆழ்ந்த அனுதாபங்கள் சார் . “குமாரசாமியின் மரணத்தில் ஆரம்பித்து , இப்பொழுது சிவநேசன் வரை மாத்தூர் சம்பவங்கள் நீண்டுகொண்டிருக்கின்றது . அவர் எப்படி இறந்தார்ன்னு விசாரணை போய்ட்டிருக்கு ....(என்று முடிப்பதற்குள் , தவபுண்ணியம் கறாரான குரலில் பேச ஆரம்பித்தார் ... )
தவபுண்ணியம் : ( .... சிவந்த முகத்துடன் ..... ) இது நிச்சயமா சாதாரணமான சாவு இல்ல . ஆள் யார்ன்னு தெரிஞ்சா , உடனே சொல்லுங்க . மத்தத நான் பாத்துக்கறேன் . நான் இத சாதரணமா விடப்போறதில்ல . நீங்க என்ன வேணாலும் பண்ணிக்குங்க . ஆனா , அவன் யார்ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும் .... “ என்றார் .
இன்ஸ்பெக்டர் ரவி : “ சரிங்க சார் ! எதுக்கும் , நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க . உங்க வீடுகளுக்கெல்லாம் , கூடுதல் பாதுகாப்பு குடுத்துருக்கோம் . “ என்று அவர்கள் இருவரையும் , அவரவர் கார்களில் வழியனுப்பியிருந்தார் .
உடைந்த மனதுடன் ராமலிங்கமும் , தவபுண்ணியமும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள் . கூடுதல் பாதுகாப்புக்காக , இரவு நேர ரோந்துப் படையினர் நான்கு பேர் , அவர்களுக்குத் துணையாக அனுப்பி வைக்கப் பட்டிருந்தனர் . அடுத்த பதினைந்து நிமிடங்களில் , போலீஸ் ஜீப் , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பறந்திருந்தது . இரவுப் பொழுதை , போலிஸ் ஸ்டேஷனிலேயே கழிக்க முடிவெடுத்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் .... களைப்பு மிகுதியால் , ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த மேசையிலேயே கண்ணயர்ந்திருந்தார் ஏட்டு கந்தசாமி . இன்ஸ்பெக்டர் ரவியின் கண்கள் உறக்கத்துக்கு , முட்டுக்கட்டை போட்டிருந்தது . இந்த கேஸ் சம்பந்தமான யோசனையிலேயே உறக்கத்தைத் தொலைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .
அடுத்த நாள் காலை 9 மணி . மாத்தூர் கிராமப் பஞ்சாயத்து அரசமரத்தடியே , மிகப்பெரிய மக்கள் கூட்டம் நின்றுகொண்டிருந்தது . வேதாந்த சுவாமிகள் , தன்னுடைய சீடர்களுடன் அங்கே முகாமிட்டிருந்தார் . மாத்தூர் சம்பவங்களுக்கான ஒரு தீர்வை எதிர்பார்த்து , கிராம மக்கள் அங்கே காத்துக் கொண்டிருந்தனர் . அந்த வழியாக வந்த , போலீஸ் ஜீப் , இந்த கூட்டத்தைப் பார்த்ததும் நின்றிருந்தது . புரியாத புதிராய் , அந்த ஜன சங்கமத்தில் கலந்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . சரியாக 09:1௦ மணிக்கு சுவாமிகள் பேச ஆரம்பித்திருந்தார் .
வேதாந்த சுவாமிகள் : “ இங்கு கூடியிருக்கின்ற அனைவருக்கும் , என் முதற்கண் வணக்கங்கள் . நான் முன்பே சொன்னது போல , மாத்தூர் கிராமத்தில் அமானுஷ்ய நடமாட்டங்கள் , மிகவும் மோசமான அளவில் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது . அதற்க்கு உங்களின் கவலை தோய்ந்த முகங்ககளே சாட்சி . இன்று இரவுக்குள் , யாருக்கும் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் .நாம் இன்று , அதன் முடிவுக்கான கடைசிக் கட்டத்தை நெருங்கியிருக்கிறோம் . இன்று இரவு நடைபெறவிருக்கும் அர்த்த சாம யாகத்தோடு , அந்த அமானுஷ்ய நடமாட்டத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறோம் . எனவே அதுவரை பொதுமக்கள் , மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டியது அவசியம் . அதற்கான வழிமுறைகளைத் தான் , நான் இப்பொழுது சொல்லப்போகிறேன் “ என்று பேசலானார் .
“ இதோ நான் கையில் வைத்திருப்பது , எங்கள் அன்பாலயத்தால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட , ஒரு சுத்தமான தீர்த்தம் .... இதை ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் , சரியாக ஆறு மணிக்கு மேல் , தெளிக்க வேண்டும் . அதன் பின்னர் , மூன்று நெய் விளக்குகளை , மேற்கு நோக்கி , வீட்டைப் பார்த்தவாறு ஏற்ற வேண்டும் . இரவு நேரம் ஆக , ஆக , அந்த அமானுஷ்யத்தின் ஆட்டம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் . எனவே இன்று ஒரு இரவு , அனைவரும் வெளியே செல்வதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது ............................ இந்த யாகத்திற்கு , தங்களால் முடிந்த பொருளுதவியை , காணிக்கையாக அளிக்க முற்பட்டால் , அதை இந்த அன்பாலயம் , பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளும் . ” என்று பேசி முடித்திருந்தார் .