(Reading time: 11 - 22 minutes)

 " என்ன முடிவு பண்ணியிருக்கே? சொல்லு!"

 " அம்மா! அப்பா கேட்கறாரில்லே, வாயை திறந்து சொல்லு!"

 " இத பாருங்க! எனக்கொண்ணும் மல்லுக்கட்டி நிக்கணும்னு ஆசையில்லேங்க! என் பொண்ணு நல்லா வாழணும்! அதுக்கு நீங்க நல்லவழி இருந்தா சொல்லுங்க! ஆனா, எந்தக் காரணத்தைக் கொண்டும், அந்த 'சாலமன் பாப்பையா' வேண்டாங்க!"

 மூவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.

 " அம்மா! நீ அடிக்கடி பட்டிமன்றம் பார்க்கிறே, கேட்கறேன்னு தெரியுது, பையன் பேரு 'சாலமன்' தான், 'சாலமன் பாப்பையா' இல்லே!"

 " சரி சரி, ஏதோ ஒரு 'மண்'! இப்ப உங்க செலக்‌ஷன் யார்னு சொல்லுங்க! அது, எனக்கு சம்மதமான்னு சொல்றேன்...."

 " அவசரப்படாதே! அந்த கட்டத்துக்குப் போவதற்கு முன்பு, நம்ம பொண்ணு சுந்தரி என்ன சொல்றான்னு கேட்போம்.

 சுந்தரி! நீ செலக்ட் பண்ண பையன் விஷயத்திலே, உங்க அம்மாவுக்கு ரெண்டு ஆட்சேபணை, ஒண்ணு மதம்! ரெண்டாவது, அவன் பத்து வயது மூத்தவன்! உங்க அண்ணனுக்கும் இந்த பத்து வயது வித்தியாசத்தை ஏத்துக்க முடியலே, அதனாலே, அவனை ஒதுக்கிடுவோம், மற்றவங்களிலே உனக்கு பிடித்தவனா ஒருத்தனை சொல்லு, மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்......"

 சுந்தரி, சிரித்துக்கொண்டே, பேசினாள்.

 " அப்பா! அண்ணனின் ஆட்சேபணை எனக்குப் புரிகிறது. அம்மாவின் எதிர்ப்பும் தான். அவர்களை நான் குறை கூறவில்லை.

 ஆனால், கொஞ்சம் ஆழமா யோசனை செய்து முடிவு எடுக்கணும்னு சொல்றேன், பத்து வயது மூத்தவனாயிருக்கிறதனாலே,என்ன பிரச்னை? தாம்பத்யம் சரியா இருக்காதா? பிறக்கிற குழந்தைகளை பாதிக்குமான்னு அவங்க பதில் சொல்லட்டும், முதல்லே........."

 " ஆமாம், நிச்சயமா! இதிலென்ன சந்தேகம்? சின்னக் குழந்தைகூட சொல்லுமே!"

 " அப்படியா? ஆனா நம்ம வீட்டிலே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே சுமுகமான உறவுதானே, அண்ணா! நீயும் நானும் நல்லாத்தானே இருக்கோம், நமக்கென்ன உடற்குறை?"

 " சுந்தரி! என்ன சம்பந்தமேயில்லாம பேசறே?"

 " யோசனை பண்ணி சொல்லுங்க! இல்லே, நானே சொல்லட்டுமா?"

 " நீயே சொல்லு!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.