(Reading time: 14 - 28 minutes)

 வாசல் புறத்தில் நிழல் தட்டவே, மூவரும் திரும்பி பார்த்தனர்.

 சீனு!

 " அம்மா!" என குரல் தழுதழுக்க, அவன் அழைத்ததும், பெற்ற வயிறு பாசமுடன் பொங்கி வழிந்து தாவிச் சென்று அவனை அணைத்துக் கொண்டது!

 தம்பிகள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி!

 அந்த நேரத்தில், மீண்டும் நிழலாடவே, தலை தூக்கிப் பார்த்தனர்.

 சீனுவுடன் வந்திருக்கிற அந்த அமெரிக்கப் பெண்!

 ஆச்சரியம் என்னவெனில், புடவை அணிந்திருந்தாள்!

 " அம்மா! நான் வர லேட்டானதற்கு இவள்தான் காரணம்! இவளும் என்னுடன் வந்து உன்னை உடனடியாகப் பார்க்கவேண்டும் என அடம் பிடித்தாள். அதுவும் எப்படி, புடவை கட்டிக்கொண்டுத்தான் அம்மாவைப் பார்க்கணுமாம்! வேற வழியில்லாம, ரெண்டு பேரும் கடைக்குப் போய் புதிய புடவை வாங்கி வந்து, அதை அணிந்துகொள்ள நேரமாகிவிட்டது, இதிலே கூத்து என்னன்னா, அவளுக்கு புடவை கட்டிக்கத் தெரியாது! நான்தான் அவளுக்கு கட்டிவிட்டேன். அம்மா! எப்படி இருக்கு? நல்லா கட்டியிருக்கேனா?" என மூச்சு விடாமல் சீனு பேசிக்கொண்டே இருந்தபோது, தம்பிகள் இருவரும் தாயை பார்த்தனர். அவள் இந்த அதிர்ச்சியை எப்படி தாங்குவாள்? அவளுக்கு புடவை இவன் கட்டிவிட்டேன், என்கிறானே, அப்படியெனில், அவர்களுக்குள்ளே எல்லாம் நடந்துவிட்டதா? இதை அம்மா எப்படி தாங்குவாள்? என திக்குமுக்காடினர்!

 " சீனு! கையை கொடுடா! பிரமாதமா கட்டியிருக்கே!" எனச் சொல்லி, அம்மா அந்தப் பெண்ணை கட்டியணைத்து முத்தமிட்டு "வாம்மா, உள்ளே!" என வரவேற்றாள்.

 இந்த இன்ப அதிர்ச்சி அடங்குவதற்குள், அந்தப் பெண் அம்மாவின் காலில் நமது கலாசாரப்படி வணங்கினாள்.

 அம்மாவின் காலைப் பற்றியபடி " என்னை உங்க மகளா ஏத்துக்குங்கம்மா!" என்று பழகுத் தமிழில் இனிய குரலில் கெஞ்சியதும், தம்பிகள் அண்ணனை ஏறிட்டு பார்த்தனர்.

 " என்ன அப்படி பார்க்கிறீங்க? மேரிக்கு நல்லா தமிழ் பேச கத்துக் கொடுத்துட்டேன், இந்த ஒரு வருஷத்திலே! அவள் பிடிவாதமா கத்துண்டா! ஏன்னா, நம்ம அம்மா அவளையும் தன் மகளா ஏத்துக்கணுமாம்! அவளைப் பெத்த அம்மா, மேரி சின்ன வயசிலே எதுவும் புரியுமுன்பே, பிரிந்து போய்விட்டாளாம். அதனாலே, மேரி தாய்ப்பாசத்துக்கு ஏங்குகிறாள், கூடப் பிறந்தவர்களும் இல்லை, அதனால் அவளுக்கு நாம மூணு பேரும்தான், அண்ணன்-தம்பிகள்!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.