ஏன் இவ்வளவு அநாகரீகமா நடந்துக்கறே?" என்று அவனைக் கடிந்து கொள்வேன்.
ஒரு நாள் மேகர்பான் என்னிடம் சொன்னான், "எல்லாம் ஜாடைமாடையா ஏற்பாடாயிடும்னு நீ சொன்னியே. என்ன ஜாடைமாடை? கடையிலே மட்டரகப் புத்தகம் விக்கறாங்களே, அந்தப் புத்தகத்திலே இந்த ஜாடைமாடையெல்லாம் எழுதியிருக்கு."
"அதைப்பத்தி உனக்கென்ன? நீதான் அவகிட்டே போகப் போறதில்லையே..! இல்லே, போகப்போறியா?"
"நான் போவேனா அந்தத் தேவடியாகிட்டே! அது நடக்காது! என் பேரு மேகர்பான் சிங். நான் சௌஹான் வம்சத்து ராஜபுத்திரனாக்கும்! காலக்கோளாறு, போலீசிலே வேலை பார்க்க வேண்டியதாயிருக்கு. அதுக்காக நான் தாழ்ந்து போவேனா? நீ கூட என்னைப் புரிஞ்சுக்கலியே!"
நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டேன். அவன் நாளுக்கு நாள் பைத்தியமாகிக் கொண்டிருந்தான். அவனுக்கு உள்ளூற ஏற்பட்டிருந்த ஆசையைத் தீர்த்துக் கொள்வதானால் அவனது கௌரவமும் அழிந்துவிடும். ஆனால் அந்த ஒழுக்கங் கெட்டவளோ அவனைப் பலமாகத் தன்பக்கம் ஈர்க்கிறாள். அவள் விரும்பிய யாரும் அவளிடமிருந்து தப்பியதில்லை. அவள் அவனைக் காந்தம்போல் இழுத்துக் கொண்டுவிடுவாள்.
அவள் என்னை விரும்பவில்லை என்பது என் அதிருஷ்டந் தான். அவள் மேகர்பானுக்கு வசிய மருந்து போட்டு விட்டாள். அதற்கு முன் எனக்கு வசியக் கலையில் நம்பிக்கையில்லை. இப்போது கொஞ்சங் கொஞ்சமாக நம்பிக்கை வந்தது. மேகர்பான் என் விடுதிக்குப் பக்கத்து விடுதியில் வசித்தான். நான் அவனுடைய நடமாட்டங்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
அவன் இரவு பத்துமணிக்கு வெளியே போவான். விடியு முன்னர் திரும்பி வருவான். அலங்கோலமாகத் தோற்றமளிப்பான் அவன். பைத்தியக்காரனின் பார்வை. தொடர்போ ஒழுங்கோ இல்லாமல் ஏதேதோ வேசுவான். அவன் பேச்சில் அசிங்கமான திட்டுக்களைத் தவிர வேறெதுவும் புரியாது. கூடைகூடையாய்க் கெட்ட வார்த்தைகள். நாளுக்குநாள் அவை பெருகுவதைக் கவனித்தேன்.