(Reading time: 57 - 113 minutes)

இதை விட அழகான தருணம் வாழ்வில் வராது என்று இருவருமே உணர்ந்தார்கள். நாடகம் முடிந்ததும் "எப்படி இருக்கு?", என்று கேட்டாள் காவ்யா.

"ரொமான்ஸே இல்லை டி. பட் ரொமான்டிக்கா இருக்கு. அதை விட உன் கூட உக்காந்து பாக்குறது பிடிச்சிருக்கு", என்றான் ஷியாம்.

அதன் பின் சாயங்காலம் வரை அவர்களின் சீண்டல்கள் தொடர்ந்தது. திலாகவும் சுந்தரும் வந்துவிடுவார்கள் என்பதால் அவனிடம் இருந்து தப்பித்து அவளுடைய அறைக்கு சென்று விட்டாள் காவ்யா.

இரண்டு காதலர்களுக்கும் நாட்கள் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது.

அடுத்த வாரம் ஞாயிறு அன்று சூர்யாவும், மதியும் குற்றாலம் செல்லலாம்  என்று கிளம்பினார்கள். அப்போது "ஷியாமையும் காவ்யாவையும் கூப்பிடலாம்", என்றாள் மதி.

திலகாவும், சுந்தரும் பேர்மிசன் தரவே நால்வரும் சென்றார்கள். அன்றைய நாளும் நால்வருக்கும் அழகாக அமைந்தது. முன்பு போலவே அவர்களுக்கு பார்சலில் சாப்பாட்டை கட்டி கொடுத்திருந்தார்கள் மங்களமும் திலகாவும்.

அங்கே தண்ணீரில் குளித்து ஆர்ப்பாட்டம் போட்டு மகிழ்ச்சியாக  அந்த நாளை களித்தார்கள்.

ஷியாம் ஊட்டி கிளம்புவதற்கு முந்தைய நாள் அவனை அழைக்க மோகனும் காயத்ரியும் வந்தார்கள்.

அவர்களை திலகாவும், சுந்தரும்  அன்பாக வரவேற்றார்கள். மாலை சூர்யாவும், மதியும் வந்து இவர்களை பார்த்து விட்டே அவர்களின் வீட்டுக்கு சென்றார்கள்.

அடுத்த நாள் ஊட்டிக்கு  ஷியாம் செல்ல இருப்பதால் காவ்யாவை பிரிய வேண்டுமே என்று தவித்தான் ஷியாம்.

அன்று இரவு தன் மகன் முகத்தில் இருந்த கவலையை கண்ட மோகன்  நேராக சுந்தரை காண சென்றார்.

"என்ன சார்  புது இடம்னு தூக்கம் வரலையா? ஷியாம் தூங்கிட்டானா?", என்று கேட்டார் சுந்தர்.

"ஷியாம் தூங்கலை. சும்மா படுத்துருக்கான். காயத்ரியும் காவ்யாவும் தான் கதை பேசுற சத்தம் இன்னும் கேக்குது. நீங்க தூங்கலையா?"

"இனி தான் தூங்கணும்"

"ம்ம்"

"என்ன சார் ஒரு மாதிரி இருக்கீங்க?"

"மிஸ்டர் சுந்தர் உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் பத்தி பேசணும்?"

"என்கிட்டயா? என்ன விஷயம்? சொல்லுங்க"

"சொல்றதை எப்படி எடுத்துப்பீங்கன்ணு தெரியலை"

"ஐயோ அப்படி எல்லாம் இல்லை. என்ன சொன்னாலும் தப்பா எடுத்துக்க மாட்டேன். சொல்லுங்க"

"என்னோட குடும்ப விவரம் எல்லாமே  உங்களுக்கு தெரியும்"

"ஆமா, மதி சொல்லிருக்கா. அது மட்டுமில்லாம ஷியாம் இத்தனை வருசம் தனிமையில் வாடுனது எல்லாமே தெரியும்"

"ஹ்ம், அது எல்லாமே என்னோட தப்பு தான். அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்"

"ஐயோ, என்ன மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க? அதுவும் என்கிட்டே?"

"இல்லை, நான் கேக்க போற விசயம் அப்படி பட்டது. இப்ப இதை பத்தி பேசுறது என் மகனுக்கே தெரியாது. அவனுக்கு உங்க பொண்ணை  தருவீங்களா? கண்டிப்பா கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவான். அவனுக்கு காவ்யா எங்க வீட்டுக்கு வந்தப்பவே பிடிச்சிட்டு. ஆனா அவ படிப்பு  முடிஞ்ச பிறகு பேசிக்கலாம்னு சொல்லிட்டான். ஆனா இப்ப அவளை பிரிஞ்சு போறதை  நினைச்சு தவிக்கிறான் போல? அட்லீஸ்ட் அவனுக்கு தான் காவ்யான்னு முடிவு தெரிஞ்சா கொஞ்சம் நிம்மதியா போவான். அவனுக்கு இது வரைக்கும் அப்பாவா நான் எதுவுமே செய்யலை. இப்ப அவனுக்கு புடிச்ச வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து என் தவறை  சரி செய்யலாம்னு நினைக்கிறேன். எங்க குடும்பத்தை பத்தி, அவனை பத்தி நல்லா விசாரிச்சிக்கோங்க", என்று முடித்தார் மோகன்.

"ஐயோ, நீங்க இவ்வளவு சொல்லணுமா? ஷியாம் தம்பி முகம் ரெண்டு நாளா சரியே இல்லை. இது தான் காரணமா? நான் அவர் பாத்துட்டு இருந்த சைட் ஒர்க்  முடியலைன்னு இப்படி இருக்கான்னு நினைச்சேனே? உங்க குடும்பம் எப்படின்னு எனக்கு தெரியாது தான். ஆனா ஷியாமை இத்தனை நாளா பாக்குறோம். அப்படி பட்டவன் எங்களுக்கு மாப்பிள்ளையா கிடைச்சா நாங்க கொடுத்து வச்சவங்க. எனக்கு முழு சம்மதம்", என்றார் சுந்தர்.

"ரொம்ப சந்தோசம் சுந்தர். உங்க மனைவியும், பொண்ணும்  என்ன சொல்லுவாங்களோ?"

"திலகாவுக்கு  ஷியாமை கட்டாயம் பிடிக்கும். அப்புறம்  நாங்க பாக்குற பையனை தான் எங்க பொண்ணுக்கும் பிடிக்கும். நாளைக்கு நானே ஷியாம் கிட்ட சம்மதம் சொல்றேன். இங்க இருந்து போறவனுக்கு  இது ஒரு கிப்டா இருக்கட்டும் சரியா?"

"தேங்க்ஸ் சுந்தர். என் மகன் நிஜமா சந்தோச படுவான். நானும் இப்ப நிம்மதியா போய் தூங்குவேன். குட் நைட்", என்று சொல்லி விட்டு எழுந்து போனார் மோகன்.

அவர் சென்றதும் யோசித்து கொண்டிருந்த சுந்தர் அருகில் வந்த திலகா  "எதுக்கு இல்லாத மூளையை கசக்கிட்டு இருக்கீங்க?", என்று கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.