(Reading time: 37 - 74 minutes)

ஆனாலும் அங்கே சமநிலை இல்லையே. அந்தப் பரவசமும் நிறைவும் கூட இந்த உலகத்திடம் இருந்து ஒரு வழியாக பெற்றுக் கொண்டதே. அதற்கு நிகராக என்ன கொடுத்திட முடியும் என்று சிந்தித்தவன், எதிலும் பற்றில்லாமல்  எதன் மீதும் உரிமை கோராமல் அனைத்தையும் ரசித்து மகிழ்ந்திரு எனும் தாரக மந்திரமே சரி என்று அதன் வழி சென்று கொண்டிருந்தான்.

ஆனால் இன்று ஹர்ஷாவும் ஹரிணியும் அவனை வெகுவாக சிந்திக்க வைத்து விட்டனர்.

‘எனது’ என்று சொந்தம் கொண்டாடாத  ஒரு உச்சக்கட்ட உரிமையை,  துளியளவும் பற்றில்லாத ஓர் உறுதியான பந்தத்தை,  சரணாகதியில்லாத ஓர்  பரிபூரண சமர்பணத்தை ஹர்ஷாவின் ஹனியிலும் ஹரிணியின் ஹரியிலும் உணர்ந்தவன், என்ன மாதிரியான உணர்வு இது, என்ன உறவு அவர்களுக்குள், இது இரு மனிதர்களுக்குள் சாத்தியமா என்று எல்லாம் சிந்திக்கலானான்.

விடியல் பொழுதிலேயே ஹாங்காங் செல்ல விமானம் ஏற வேண்டும் அவன்.  ஹரியையும் ஹனியையும் அறிந்து  கொள்ளும் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று அவனது மனதின் ஓரத்தில் சிறு ஆர்வம் துளிர்க்க தான் செய்தது. எப்போதும் போல காலத்திடம் அதை ஒப்படைத்துவிட்டு தனது பாதையை நோக்கி பயணிக்கலானான்.  காலம் அவனுக்கு அந்த வாய்ப்பினைக் கொடுக்குமா??

ர்சியைப் போல ஆழமான அலசலில் இறங்கவில்லை எனும் போதும்  ஸ்வாதிகாவின் சிந்தனையும் ஹரிணி ஹர்ஷாவை சுற்றித் தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

ஸ்வாதிகா அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது ஹர்ஷாவை சந்திக்க வாய்ப்பே கிடைக்காமல் ஏமாற்றம் கொண்டு  யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓர் வெள்ளிக்கிழமையன்று  மாலை வேளையில்  அவன் இருப்பிடம் வந்துவிட்டிருந்தாள்.

எப்போதும் அவளது பயணங்கள் அனைத்தையும் அவர்களது செக்ரட்டரி தான் கவனித்துக் கொள்வார். முதல் முறையாக உடன் படிக்கும் மாணவியின் உதவியோடு விமானம் புக் செய்து தனியே பயணித்து விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து ஹர்ஷா தங்கியருந்த குடியிருப்பை வந்தடைந்து விட்டாள்.

வீடு பூட்டியிருக்கவே ஹர்ஷாவிற்கு  அவள் போன் செய்ய ரிங் போய்க் கொண்டே இருந்தது. இரவு வேறு நெருங்கிக் கொண்டிருக்க ஆள் அரவமற்ற அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் பத்தாவது மாடி காரிடாரில் செய்வதறியாது திகைத்திருந்தாள்.

ஹர்ஷா பணிபுரியும் மருத்துவமனை அருகாமையில் தான் இருந்தது. அங்கு இதயப் பிரிவு சென்று விசாரிக்கலாம் என்று அவளுக்கு அப்போது தோன்றவில்லை.

மனதில் அச்சம் குடிகொள்ள ஹர்ஷா எங்கிருக்கிறான் என்று யாரிடம் கேட்பது என்று மலைத்து நின்றாள். ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளுக்குள்.  உடனேயே ஹரிணியை அழைத்தாள்.

அவளது சூழ்நிலையை சொன்னதும் ஹரிணி கடிந்து கொள்வாள் என்று ஸ்வாதிகா எதிர்பார்த்திருக்க ஹரிணியோ அவளை ஆசுவாசப்படுத்தினாள்.

“சர்ஜரி செய்து கொண்டிருக்கும் போது ஹர்ஷாவால  போன் எடுக்க முடியாது ஸ்வாதி. சர்ஜரியில் இருக்கானோ என்னவோ.  இப்போ அங்க நைட் ஆகிருச்சு. தெரியாத இடம் வேற. இரு நான் பூர்விக்கு போன் செய்து உன்னை அவளோட வீட்டிற்கு அழைத்துப் போகச் சொல்கிறேன். அவள் அதே பில்டிங்ல ஆறாவது மாடியில் இருக்கா” என்று கூறி பூர்வி யார் என்ற விவரங்களைச் சொன்னாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்வாதியை தேடி வந்தாள் பூர்வி.

“ஹர்ஷா அண்ணா சர்ஜரியில் இருக்கார். நைட் வீட்டுக்கு  வருவது சந்தேகம் தான். நீங்க என்னோட ஸ்டே செய்துக்கோங்க” அவளது வீட்டிற்கு ஸ்வாதியை அழைத்துச் சென்றாள் பூர்வி.

ஹரிணி பூர்வியிடம் என்ன சொன்னாளோ, பூர்வி ஸ்வாதியிடம் மிகவும் பிரியமாகப் பேசினாள். சுடச் சுட சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும் செய்து கொடுத்தாள். அங்கே ஒரே ஒரு படுக்கை மட்டும் இருக்கவே அதை ஸ்வாதிக்கு விட்டுக் கொடுத்து தான் சோபாவில் படுத்துக் கொள்வதாக சொன்னாள்.

“ரொம்ப தாங்க்ஸ் பூர்வி” ஸ்வாதிக்கு கண்கள் கலங்கியே விட்டிருந்தன.

“தாங்க்ஸ் ஹரிணிக்காக்கு சொல்லுங்க” என பூர்வி சொல்ல தன்னை ஒருமையில் அழைக்கும் படி கூறினாள் ஸ்வாதிகா.

“அப்போ நீயும் என்னை ஒருமையில் கூப்பிடு” பூர்வி சொல்ல சந்தோஷமாக தலையாட்டினாள் ஸ்வாதிகா.

இருவரும் நெடுநேரம் கதைத்துக் கொண்டிருந்தனர். இடையே ஹரிணி போன் செய்ய அவளிடமும் சிறிது நேரம் உரையாடினர்.

மறுநாள் பூர்வி வேலைக்கு செல்லும் முன்  ஸ்வாதியை எழுப்பி   ஹாட்பாக்ஸில் உணவு வைத்திருப்பதாக கூறி தனது போன் நம்பரை ஒரு ஸ்டிக் பேப்பரில் கிறுக்கி ப்ரிட்ஜ் மேல ஒட்டி வைத்து விட்டு   மதியம் வந்துவிடுவதாக சொல்லிச் சென்றாள்.

ஒரு பதினோரு மணி போல ஸ்வாதியின்  மொபைலுக்கு பூர்வியிடம் இருந்து போன் வந்தது. அவள் சாப்பிட்டாளா ஒன்றும் சிரமம் இல்லையே என்று கேட்டறிந்தவள் இன்னும் சிறிது நேரத்தில் ஹர்ஷாவுடன் வருவதாக தகவல் சொன்னாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.