(Reading time: 37 - 74 minutes)

இப்போது ஸ்வாதிகாவின் வயற்றில் பயப்பந்து உருண்டது. ஹர்ஷாவிடம் என்ன விளக்கம் சொல்வது என்று பலவாறு யோசித்து  ஒன்றும் புரிபடாமல் கலங்கிப் போயிருந்தாள்.

ஆனால் மதியம் பூர்வியுடன் வந்த ஹர்ஷா அவளிடம் எதுவும் கேட்கவில்லை. மாறாக போன் எடுக்காமல் போனதற்கு விளக்கம் தெரிவித்து வருந்தினான்.

ஹர்ஷாவைப் பார்த்ததும் முதலில் சந்தோஷமும் பின் சிறிது பயமும் கொண்ட ஸ்வாதி அவனது கலைந்த கேசத்தையும், சிவந்த கண்களையும், சோர்ந்த தோற்றத்தையும் பார்த்தவள்  கலங்கிப் போனாள். அவளது ஷாஸாவை இப்படி அவள் பார்த்தே இல்லை.

ஸ்வாதியின் முகம் பிரதிபலித்த உணர்வுகளையும் ஹர்ஷா அவளிடம் கொண்டிருந்த கனிவையும் பூர்வி கவனிக்கவே செய்தாள்.

சரியாக அப்போது ஸ்வாதியின் போன் ஒலித்தது. ஹரிணி தான் போன் செய்திருந்தாள். ஸ்வாதியின் நலத்தை விசாரித்த ஹரிணியிடம், ஹர்ஷா மற்றும் பூர்வியும் அங்கிருப்பதாக ஸ்வாதி சொல்ல ஸ்பீக்கரில் அனைவரிடமும் பேசினாள் ஹரிணி.

ஹர்ஷாவிடம் என்ன சர்ஜரி  என்று சுருக்கமாக கேட்டறிந்தாள்.

“பூர்வி வீக்என்ட் போர் அடிக்குதுன்னு எப்போவுமே சொல்லுவியே. ஸ்வாதி உனக்கு கம்பெனி கொடுக்க வந்திருக்கா பாரு. ரெண்டு  பேரும்  வெளியே போய் என்ஜாய் செய்யுங்க” என்றவள் ஸ்வாதியிடமும் சம்மதம் கேட்க அவளும் சந்தோஷமாக சரி என்றாள்.

ஹரிணியிடம் பேசி முடித்ததும் தான் ஓய்வெடுக்க போவதாக சொல்லி தனது விசிடிங் கார்டை ஸ்வாதியிடம் கொடுத்து அவளது கைப்பையில் வைத்துக் கொள்ள சொன்னான் ஹர்ஷா.  

“ஷாஸா என்னை கோபித்துக் கொள்வாங்கன்னு நினச்சேன். ஆனா என்னை ஒன்னும் சொல்லாம சாரி சொல்லவும் எனக்கு ரொம்ப கஷ்டமாகிருச்சு” என்று பூர்வியிடம் சொன்னவள் தான் சொல்லாமல் சர்ப்ரைஸ் விசிட் செய்ததை அப்போது தான் சொன்னாள்.

“நேத்து விது அக்காவும் என்னை ஒண்ணுமே சொல்லலை, ஷாஸா இவ்வளவு டையர்டா நான் பார்த்ததே இல்ல, எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியல. அவருக்கும் நான் திடீர்னு வந்தது சங்கடமா தான் இருந்திருக்கும் இல்லையா. விது அக்கா எல்லாத்தையும் அழகா சால்வ் செய்துட்டாங்க”

ஸ்வாதி சொல்லவும் அவளது செயலை உரிமையாகக் கடிந்து  கொண்ட பூர்வி  ஹர்ஷாவின் பணி பற்றி பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு  ஹரிணியின் பக்கம் திரும்ப மிகவும் நெகிழ்ந்தாள் பூர்வி.  

“நான் எத்தனையோ தடவை ஆச்சரியப்பட்டிருக்கேன். அண்ணாவும் அக்காவும் எப்படி ஓரே மாதிரி திங் செய்றாங்கன்னு. அண்ணாவும் அக்காவும் ஒன்னா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்” பூர்வி என்னவோ ஹர்ஷா ஹரிணி இணைந்து பணி செய்வது பற்றித் தான் சொன்னாள். நித்தம் மருத்துவமனையில் ஹர்ஷாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைவரும் திணறுவதை பார்ப்பவள் அல்லவா. ஹரிணியால் மட்டுமே அவனது எண்ணத்திற்கும் வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியும் என்று அவள் நினப்பதுண்டு. அதையே தான் இப்படிச் சொல்லியிருந்தாள்.

அப்போது ஸ்வாதிகா அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்ற போதும் பின்பு திருமண பேச்சுகள் நடைபெற்ற போது அதை எல்லாம் யோசித்து குழப்பம் கொண்டாள்.

ஒன்று போலவே சிந்திப்பவர்கள், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து  கொண்டிருப்பவர்கள், காதலால் பிணைந்து திருமணத்தில் இணைவதே சரி என மனக்கணக்கு போட்ட ஸ்வாதி தன் பிரியமான தோழியாகிவிட்ட பூர்வியிடம் கூட அது பற்றி சொல்லியிருக்கவில்லை.

ஹரிணி தனது திருமணத்தைப் பற்றி சந்தோஷமாக ஸ்வாதியிடம் தெரிவித்த போது அவளுக்கு அதிர்ச்சி தான்.  ஹர்ஷா இதை எப்படி எதிர்கொள்வான் என்று வருத்தம் கொண்டாள். ஆனால் அவனோ திருமணத்திற்கு அவனால் வர முடியாது என்று தான் வருத்தம் கொண்டான். பூர்வி, சுகீர்த்தி, ப்ரீத்தி, வரூதினி அனைவருடனும் அவளது விது அக்காவின் திருமணத்தை மகிழ்ச்சியாகவே எதிர்கொண்ட போதிலும் ஸ்வாதியின் மனதின் ஓர் ஓரத்தில் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் அன்று மாலை ஹரிணியும் ஹர்ஷாவும் வீடியோ காலில்  பேசிக் கொண்டதைப் பார்த்தவளின் உள்ளம் உருகிப் போனது. குழப்ப மேகங்கள் மெல்ல மெல்ல மனதை விட்டு விலகுவதை உணர்ந்தாள்.

ஹர்ஷா அவள் மேல் கொண்டிருந்த நேசத்தை அவளது உள்ளுணர்வு உணர்ந்திருந்த போதும் அவளாகவே குழப்பிக் கொண்டு  ஒரு முடிவெடுத்து அதைப் பிடித்துக் கொண்டிருந்தது தவறு என்பதை உணர்ந்தாள்.

சிறுவயது முதல் அவளது ஷாஸா மேல் அவள் கொண்டிருந்த அந்த நிர்மலமான நேசத்தை இப்போது அவளது மனதில் நிரப்பிக் கொண்டாள். 

“இங்க என்ன செய்துட்டு இருக்க ஸ்வாதி. அங்க நாங்க எல்லோரும் கிப்ட்ஸ் பிரிச்சிட்டு இருக்கோம் வா” என்று அவளது சிந்தனையைக் கலைத்து பூர்வி அழைத்துச் சென்றாள்.

“விது அக்கா அவ்வையார் மாதிரி கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடுவாளோன்னு நினச்சேன். மாமாவை பார்த்ததும் அக்காவுக்கும் காதல் வந்திருச்சு” வரூதினி சொல்ல பூர்வியும் ஸ்வாதிகாவும் கதை கேட்க ஆர்வமாகினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.