(Reading time: 37 - 74 minutes)

ஆனால் ஹர்ஷாவின் மனதில் என்ன இருக்கிறது என்று சாராதவே குழப்பம் கொண்டிருக்கிறார் என்பதையும், ஸ்வாதி அவளாக எடுத்திருந்த முடிவு பற்றியும், பாரதிக்கும் ஹரிணியின் மனதில் என்ன இருக்கிறதோ என்ற ஐயம் இருந்ததையும் இவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை.

இது வரை யாரும் நேரடியாக ஹர்ஷாவிடமோ ஹரிணியிடமோ அவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவு எத்தகையது, என்ன விதமான உணர்வு அவர்களுக்குள் என்று கேட்கவில்லை. ஒருவேளை அப்படி யாரேனும் கேட்டால் அவர்களுக்கே அதற்கான பதில் தெரியாது என்பது தான் உண்மை.

அவன் மேல் அவளும் அவள் மேல் அவனும் கொண்டிருக்கும் உணர்வு. எந்த உறவிற்குள் அடங்கி விடக் கூடும் இவர்கள் பிணைப்பு. அன்பு, நேசம், பாசம், பக்தி, பரிவு, நட்பு, காதல் என்ற எண்ணற்ற வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றில் முற்றுப் பெற்று விடுமா.

அவனுக்கு அவள் ஹனி, அவளுக்கு அவன் ஹரி. அவர்களைப் பொறுத்தவரையில் அதிலேயே அனைத்தும் அடங்கிப் போனது.

ஹர்ஷாவிடம் பேசியபின் ஹரிணி சற்றே தெளிவடைந்திருந்தாள். பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினாள்.

“கல்யாண விஷயத்தில் என் அம்மாவிற்குப் பிடித்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான் என்னோட ஒரே எதிர்பார்ப்பா இருந்தது விதும்மா.  மத்தபடி நான் ஒரு சராசரி மனிதன். நிறை குறைகள் உண்டு. இப்போ என்னைப் பத்தி சொன்னேன்னா நிறைகளை மட்டும் தான் சொல்வேனாயிருக்கும். ஒன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். அம்மா, மனைவி, தோழி, சகோதரி, சகமனுஷி என எந்த உறவாக இருந்தாலும் அப்பெண்ணை மதிக்கும் ஆணாக என் அம்மா என்னை வளர்த்திருக்காங்க” தெளிவாக தீர்க்கமாக அவளது கண்களை நேராக சந்தித்து பாலகிருஷ்ணன் சொல்லவும் ஹரிணிக்கு அவன் மேல் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது.  

“என்னைப் பத்தி சொல்ல சொன்னா எனக்கே சொல்லத் தெரியாது. ஆனா ஹர்ஷவர்தன் சரியா சொல்லுவான்” ஹர்ஷாவை போன் மூலம் பாலகிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

ஹரிணி சம்மதம் சொல்ல அவர்கள்  திருமண நாள் நிச்சயமானது. சரியாக அதே நாளில் ஹர்ஷா லெப்சிக் செல்ல வேண்டியாதாகிப் போனது.

“நாம வேணும்னா டேட் மாத்தி வச்சுக்கலாமா. ஹர்ஷா வராம எப்படி” ஹரிணியின் சார்பில் பாலா சொல்ல, பெரியவர்கள் ஆறு மாதம் எல்லாம் தள்ளிப் போட முடியாது என்று கூறிவிட்டனர்.

திருமணத்திற்கு  இரண்டு மாதங்கள் இருந்த நிலையில் இறுதித் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஹரிணி அதிலேயே கவனமாக இருந்தாள். அவள் பாலகிருஷ்ணனோடு அதிகமாக பேச முடியாமல் போனது.

ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் ஹர்ஷாவும் பாலாவும் நெருக்கமான நட்பு கொண்டனர். ஒரு ராஜகுமாரனாக, இப்போது சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணனாக இருப்பவன் கொஞ்சம் கூட கர்வம் இன்றி இலகுவாக பழகுவதை வியந்தான் பாலா. அதே சமயம் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கி இருக்கும் பாலாவை பெருமையாக பார்த்தான் ஹர்ஷா.

ஹரிணி பாலாகிருஷ்ணன் திருமணத்திற்கு சாரதாவும் ஸ்வாதிகாவும் ஒரு வாரம் முன்பே வந்து சேர்ந்தனர். பூர்வியும் வந்து ஐக்கியமானாள்.

சாரதா ஜெய்பூர் பந்தேரி சில்க் புடவையும் குந்தன் செட்டும் தனது பரிசு என்று கொடுக்க ஸ்வாதிகா மார்பிளில் வேலைப்பாடு செய்த நகைப் பெட்டியை பரிசளித்தாள்.

ஹரிணிக்கு என்ன பிடிக்கும் என்று ஹர்ஷாவிடம் கேட்டு பதில் கிடைக்காமல் நொந்து போன பூர்வி தனது பரிசாக இளையராஜா பாடல்கள் அடங்கிய மியூசிக் ப்ளேயரைக் கொடுத்தாள்.

எல்லோரும் அவரவர் பரிசுப் பொருட்களைக் கொடுத்து அதை ஹரிணியிடம் பெயருக்கு காட்டிவிட்டு தாங்களே பிரித்துப் பார்த்து அது குறித்து விவாதித்து சலசலத்துக் கொண்டிருந்தனர்.

“ஹர்ஷா அண்ணா என்ன கிப்ட் கொடுத்து விட்டாங்க பூர்வி” சுகீர்த்தி கேட்க ஸ்வாதிகா, ப்ரீத்தி, வரூதினி அனைவரும் ஆர்வம் கொண்டனர்.

“அது தான் சாரதா ஆன்டி கொடுத்தாங்களே” பூர்வி சமாளிக்க முயன்றாள்.

“அது எப்படி ஷாஸா கொடுக்கும் கிப்ட் ஆகும். விதுக்கா ராஜாஸா பேர் போட்டு பத்திரிக்கை கொடுத்தாங்க, அது குடும்பத்தினர் சார்பா கொடுக்கும் பரிசு. நான் தனியா கொண்டு வந்தேன்ல. ஷாஸா ஒன்னும் குடுத்து விடலையா. அவர் எப்போவுமே இப்படி தான்” ஸ்வாதிகா சொல்லவும் ஹரிணி இடையிட்டாள்.

“உங்க எல்லோருக்கும் முன்னாடியே எனக்கு ஹர்ஷா கிப்ட் கொடுத்தாச்சு. அதுனால எல்லோரும் போய் ஒழுங்கா தூங்குங்க” என்று அதட்டியவள் இந்நேரம் அவன் ப்ளைட் ஏறியிருக்கணுமே என்று தனது மொபைலில் மெசேஜ் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தாள்.

அவன் ப்ளைட் ஏறிய தகவல் அதில் இருந்தது. அவனுக்கு வாழ்த்து கூறி பதில் மெசேஜ் அனுப்பிவிட்டு உறங்கச் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.