(Reading time: 37 - 74 minutes)

ஆனால் காதல் என்றால் என்ன என்று ஹரிணி தலையைப் பிய்த்துக் கொண்டது அவர்களுக்கு எப்படித் தெரியும்.

ரிணி தனது மேற்படிப்பை முடிக்கவிருந்த போது அவளைத் தேடி  வந்தாள் தாரா.

“டாக்டர் என்னை நினைவு இருக்கா” தாரா கேட்கவும் ஹரிணி தன்னிடம் ஐ லவ் யூ சொன்னவளை எப்படி மறப்பாள்.

“டெலிவரி முடிஞ்சு அம்மா ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அப்புறம் பாப்பாவோட பிசியா இருந்ததால உங்களை பார்க்க வர முடியலை. அன்னிக்கு உங்க போன் நம்பரும் வாங்கி வைக்கலை” தாரா வருத்தம் தெரிவித்தாள்.

“அதுனால என்ன பரவாயில்ல. நீங்க இப்போ வந்ததே ஸ்வீட் சர்ப்ரைஸ். ரொம்ப தாங்க்ஸ். அனஸ்தடிஸ்ட்டை எத்தனை பேர் இப்படி நியாபகம் வைத்து வந்து பார்க்க வராங்க” ஹரிணி நன்றி தெரிவித்தாள்.

தாரா ஹரிணியை அவளது மகளின் முதலாம் பிறந்த நாள் விழாவிற்குக் கட்டாயம் வர வேண்டும் என்று வற்புறுத்தினாள். அன்று ஹரிணிக்கு விடுமுறையாக இருக்கவே சரி என்று சம்மதம் சொன்னாள்.

மகள்கள் எல்லோரும் சென்னையில் இருந்தபடியால் அச்சமயம் பாரதி அவர்களைக் காண வந்திருந்தார். பிறந்த நாள் விழாவிற்கு அன்னையையும் உடன் அழைத்துச் சென்றாள் ஹரிணி. ஹரிணியைப் பார்த்ததும் குழந்தையோடு தாரா ஓடோடி வந்தாள். தனது தாயை அறிமுகம் செய்து வைத்தாள் ஹரிணி.

தாரா அங்கிருந்த அனைவருக்கும் ஹரிணியை அறிமுகம் செய்து வைத்தாள்.

அன்னையை ஓர் இடத்தில் அமரச் செய்து விட்டு ஹரிணி குடிக்க குளிர்பானம் எடுத்து வரச் சென்றாள்.

அப்போது “பாரதி தானே” என்று ஓர் குரல் ஒலிக்க நிமிர்ந்து பார்த்தார் பாரதி.

“கல்யாணி” சந்தோஷமும் வியப்புமாய் பாரதியின் குரல்  ஒலித்த போதும்  தூரத்தில் இருந்த மகளை பதற்றமாய் பார்த்தன அவரது விழிகள்.

மகளுடன் அங்கே வந்திருந்த பாரதியை கவனித்துவிட்டு தான் கல்யாணி அவர்களை தேடி வந்தார். பாரதியின் முகபாவத்தை வைத்தே வைதேகி தான் அந்த மகள் என்று புரிந்து கொண்டார்.

 “தாரா எனக்கு மருமகள் முறையாகணும். உங்க மகள் வைதேகியைப் பத்தி ரொம்ப பெருமையா சொன்னா. ரொம்ப சந்தோஷம் பாரதி” கல்யாணி சொல்லவும் பாரதியின் கண்கள் பனித்தன. அதே சமயம் அங்கே கையில் குளிர்பானத்துடன் வந்த ஹரிணியின் செவிகளில் கல்யாணி சொன்னது விழுந்தது.

ஹரிணி வரவும் தனது பால்ய சிநேகிதி என்று கல்யாணியை அறிமுகம் செய்து வைத்தார் பாரதி. ஹரிணியின் கன்னத்தை மெல்ல வருடிக் கொடுத்தார் கல்யாணி.

ஹரிணியை  பாரதி ஜெயராஜன் தத்தெடுத்த போது அந்த காப்பகத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர்  கல்யாணி.  சில நடைமுறை சிக்கல்கள் இருக்க கல்யாணியின் உதவியால் தான்  குழந்தையை பாரதி ஜெயராஜன் தம்பதியினர் எந்த வித சிரமங்களும் இன்றி ஸ்வீகாரம் செய்து கொள்ள முடிந்தது.

பாரதி ஜெயராஜனுக்குத் திருமணம் ஆகி சில நாட்களே ஆகியிருந்த நிலையில் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பியதும் அதில் பிடிவாதமாக இருந்ததும் வைதேகி என்று அவளுக்குப் பெயர் சூட்டியதும் கல்யாணியின் நினைவில் பசுமையாக இருந்தன.

இன்று ஒரு சிறந்த டாக்டராக அவளைக் காண்கையில் கல்யாணியின் மனம் பூரித்தது.

தாரா அனைவரையும் கேக் கட் செய்ய அழைக்க ஹரிணியை அனுப்பி விட்டு பாரதியும் கல்யாணியும் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு ஹரிணியின் கல்யாணம் குறித்து திசை திரும்ப தாங்கள் இது வரை அது குறித்து யோசிக்கவில்லை என்று கூறினார் பாரதி.

“இங்க இப்படி திடீர்னு கேட்கிறேனேன்னு நினைக்க வேண்டாம். மனசிலே பட்டது. என் பையனுக்கு உங்க மகளை கல்யாணம் செய்துவிக்க ஆசைப்படறேன்” கல்யாணி கேட்கவும் பாரதிக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் உடனடியாக என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“ஒன்னும் அவசரம் இல்லை. உங்க குடும்பத்தில் எல்லோருடனும் நிதானமா ஆலோசித்து முடிவு செய்யுங்க. வைதேகி கிட்டேயும் சம்மதம் கேளுங்க. என் மகனை அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்றவர் பாரதியை தனது மகன் பாலகிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மிகவும் பணிவுடன் வணக்கம் தெரிவித்த பாலகிருஷ்ணனை பாரதிக்குப் பார்த்ததும் பிடித்து விட்டிருந்தது. எனினும் தங்கள் பாதம் தொட்டு வணங்கிய ஹர்ஷவர்தன் அவர் கண் முன் வந்து போனான்.

மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்காமல் முடிவேதும் செய்ய முடியாது என்று தீர்மானித்தார்.

தங்களது அன்னையர் தோழிகள் என்று அறிந்த ஹரிணி , பாலகிருஷ்ணன் இருவரும் பரஸ்பரம் ஹல்லோ சொல்லி நலம் விசாரித்துக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.