(Reading time: 37 - 74 minutes)

“நீ சொன்னது மட்டும் அண்ணா காதில் விழுந்தது உன்னை சம்ஹாரம் செய்திடுவார். ஏதும் உளறி வைக்காம ஒழுங்கா வேலையை மட்டும் பாரு. அப்புறம் அக்காவை மரியாதை இல்லாம பேசாதே” சுட்டு விரலை நீட்டி அவனை எச்சரித்தாள்.

ஆனால் அது கணேஷ் ராமின் மண்டையில் ஏறியதாக தெரியவில்லை. “இந்த பூரி மசாலா ஆர்டர் செய்தா நாங்க உடனே கேட்டுவிடணுமா” அப்போதைக்கு அலட்சியம் செய்தாலும் ஹர்ஷாவிடம் சற்று கவனமாகவே தான் இருந்தான்.  

ன்று விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. இரவு நேரப் பணியில் இருந்த ஹரிணி  எமர்ஜன்சி ஏதும் இல்லாததால் மழையை ரசித்துக் கொண்டிருந்தாள். அந்த மருத்துவமனையில் மயக்கமருந்தியல் துறை நிபுணராக அவள் சேர்ந்து ஓரிரு வாரங்களே ஆகியிருந்தன. அவளுக்குக் கீழ் இரு பயிற்சி மாணவர்கள் பணியில் இருந்தனர்.

“மழைன்னா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு ஹர்ஷா சொன்னார். நமக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சு ஆனா நாம சேர்ந்திருக்கும் போது மழையே வரலை” பாலா வருத்தமாக சொன்னது அவளுக்கு நினைவு வந்தது.

“அது ஏனோ என் வாழ்வில் முக்கிய தருணங்களில் என்னுடனே கைகோர்த்திருக்கும் நீ என் திருமணத்திற்கு வரவில்லை. ஹரியும் வரலை. நீயும் வரவில்லை. அவன் வந்தா தான் நீயும் வருவியோ” மழையிடம் ஊடல் கொண்டாள்.

பாலகிருஷ்ணன் தொழில் நிமித்தம் பெங்களூரு சென்றிருந்தான். மறுநாள் காலை புறப்பட்டு மதியம் போல திரும்பிவிடுவதாக சொல்லிச் சென்றான்.

“நாளை  வருகிறாயா, பாலா சந்தோஷப்படுவார்” மழையிடம் அவள் சொல்ல,  ஜன்னல் வழியே சில்லென்ற சாரல்  அவள் மேல் சிந்தியது.

அன்று இரவு டியூட்டியில் எமர்ஜன்சி ஏதும் வராததால் ஹரிணி ஓய்வாகவே இருந்தாள். சிறு சிறு வேலைகளை அவளது ஜூனியர்கள் செய்தனர்.

அதிகாலை நேரம். இன்னும் அரை மணி நேரத்தில் அவளது பணி முடிந்து விடும். பாலா ஏதும் மெசேஜ் கொடுத்திருக்கிறானா என்று தனது போனைப் பார்த்தாள். இரவு அவன் அனுப்பியிருந்த  குட் நைட் மெசேஜ் மட்டுமே இருந்தது. டியூட்டி முடித்து வீட்டிற்கு புறப்படும் போது கால் செய்து கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவள் அவளுக்கு  ஒதுக்கப்பட்டிருந்த டியூட்டி ரூமில் ரிப்ரஷ் செய்து கொண்டிருந்தாள். அப்போது அவளது டியூட்டி  போன் ஒலிக்க ஒரே ரிங்கில் எடுத்துப் பேசினாள்.

“மேம். மாஸ் கேஷுவாலிட்டி. இங்க ஒரு மல்டிபிள் இஞ்சுரி (உடலில் பல பாகங்களில் அடி)  பேஷன்ட். இன்டுபேஷன் (செயற்கை சுவாசக் கருவியை பொருத்துவது) சிரமமாக இருக்கும் போல தெரியுது மேம். நீட் யுவர் ஹெல்ப்” என்று எமர்ஜன்சியில் பணிபுரியும் மருத்துவர்  சொன்னதும் விரைந்து எமர்ஜன்சி அறையை அடைந்தாள் ஹரிணி.

எமர்ஜன்சி ஒரே பரப்பரப்பாக காணப்பட்டது. நெடுஞ்சாலையில் பெரிய விபத்து ஒன்று நடந்திருக்க, அந்த மருத்துவமனை நெடுஞ்சாலையை ஒட்டி இருந்தபடியால் அவசர சிகிச்சைக்கென விபத்தில் பாதிக்கப்பட்டோரை அங்கே அனுமதித்தனர்.

எமர்ஜன்சியில் ட்ரைஏஜ் முறையைப் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ் சைரன் தொடர்ந்து  ஒலித்த வண்ணம் இருக்க, ஆக்சிடன்ட் என்பதால் காவல் துறையை சேர்ந்தவர்களும் அங்கே பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

 மார்னிங் ஷிப்ட்டிற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் வந்து கொண்டிருந்ததால் அவ்வளவு பெரிய எமர்ஜென்சியை சமாளிக்க முடிந்தது.

ஹரிணியின் பணி நேரம் இன்னும் சில நிமிடங்களில் முடிந்து விடும் என்ற போதும் இது போன்ற சமயங்களில் கூடுதாக எமர்ஜன்சி அறுவை அரங்குகள் இயக்கப்படும். அதற்கு தயாரானவள் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டே எமர்ஜன்சி மருத்துவர் சொன்ன அந்த பேஷண்ட் அருகில் வந்திருந்தாள்.

அங்கே சிவப்பு வண்ண பேட்ஜ் ( உடனடியாக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளி) பொருத்தி  ரத்தக் கறைகளுடன்  மயக்க நிலையில் இருந்தவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் மூலம் சுவாசத்தை செலுத்திக் கொண்டிருந்தனர் எமர்ஜன்சி டாக்டர்ஸ்.

“செஸ்ட் இஞ்சுரி மேம். கார்டியோதொரசிக் டீமுக்கு கால் செய்திருக்கோம். நிறைய இஞ்சுரிஸ்” என்று எமர்ஜன்சி மருத்துவர் சொல்ல கையுறை அணிந்தபடியே செயற்கை சுவாசக் கருவியைப் பொறுத்த வேண்டிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு பேஷன்ட்டின் அருகில் சென்றவள் முகத்தில் வைத்திருந்த மாஸ்க்கை விலக்க  அந்த முகம் பார்த்து  நிலைகுலைந்து தள்ளாடினாள்.

“பா..லா” அவளது குரலின் நடுக்கத்தையும் தள்ளாட்டத்தையும்  கண்டு மேலும் இரு மருத்துவர்கள் உதவிக்கு வர ஒரு கணம் கண்களை இறுக மூடினாள்.

விபத்தில் பாதிக்கப்பட்ட எத்தனையோ நோயாளிகளைப் பார்த்திருக்கிறாள் தான். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளித்திருக்கிறாள் தான். ஆனால் காதல் என்றால் என்ன என்று அவளுக்கு உணர்த்தியவனை, அவள் கரம் பிடித்து வாழ்நாள் முழுவதும் உடன் வருவேன் என அக்னி சாட்சியாய் வலம் வந்தவனை இப்படி ஒரு கோலத்தில் காண்போம் என்றோ, தான் படித்த  மருத்துவத்தை அவன் மீதே பயன்படுத்தும் நிலை வரும் என்றோ நினைத்துக் கூட பார்த்திருப்பாளா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.