(Reading time: 25 - 50 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

சத்யனா?. ஆசுவாசமான பரத் அரை மயக்கநிலைக்கு சென்றான்.

"ரேச்சல் இறங்கும்மா" என்று ரஞ்சன் அவளை கைபிடித்து இறக்கி… அவள் காலடியிலிருந்து பரத்தை விடுவித்தான்.

"இங்கே என்ன நடக்குது?" என்று போலீஸ் உடையிலிருந்த ஒருவர் கேட்கவும்… தன்னை புடவை தலைப்பினால் போர்த்திக் கொண்ட கல்பி ஒரு அடி முன் வந்தாள்.

"ஐயா… இந்த நாலு முரட்டு பசங்களும் என்னை துரத்திட்டு வந்தாங்க. இவங்கதான் என்னை காப்பாத்துனாங்க" என்றவள்,

ரேச்சல் இருந்த பக்கம் திரும்பி,

"ரொம்பவும் நன்றி ம்மா.. என்னோட மானத்தையும் உயிரையும் காப்பாத்திட்ட. நீ மட்டும் வரலைன்னா இன்னேரம் இவங்க என்னை அழிச்சு… கொன்னு புதருக்கு இடையில் வீசிட்டு போயிருப்பான்க. நீதான் என்னோட குலசாமி" என்று கையெடுத்து கும்பிட்டு அழுதாள்.

ரேச்சலின் வெறித்த பார்வையில் ஒரு மாற்றம் தெரிந்தது…

"நீ சொன்னது சரிதான் தாயி… நான் இனிமே ஒழுங்கா புடவை கட்டிக்கறேன். நான் கேவலமாக உடுத்தியிருந்த விதம்தான் இவன்களை என் பின்னாடி வரவச்சிட்டது…" என்று சொல்லவும்… ரேச்சலிடம் அசைவு தென்பட்டது.

"அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை… உன்னுடைய ட்ரஸிங்க பார்த்து அவன்க வரலை. பயந்து ஓட ஆரம்பிச்சேல்ல, அப்ப துரத்த ஆரம்பிச்சிருப்பான்க. நம்முடைய நடை உடை பாவனை அத்தனையும் நமக்கு தன்னம்பிக்கையை தருவதாக இருக்கணும். உனக்கே உன் ட்ரஸ் பத்தின குற்ற உணர்வு இருந்ததால நீ பலகீனமாயிட்ட. பாதுகாப்பில்லனு நினைச்சே… அந்த பலவீனம்தான் அவன்களுக்கு பலமாயிட்டது." பெருமூச்சு எடுத்து தொடர்ந்தாள்.

"உனக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தரக்கூடியதை மட்டும் உங்கிட்ட வச்சிக்கோ… அது உடுத்துற உடையாவும் இருக்கலாம்… சின்ன கத்தியாகவும் இருக்கலாம்… தளராமல் போராட வைக்கின்ற மனோசக்தியாகவும் இருக்கலாம்… எப்பவும் நம்ம பலவீனப்படுத்தும் விஷயத்திலிருந்து விலகி நிக்க கத்துக்கோ…"

பேசிக் கொண்டே பார்வையை விலக்கியவள் கண்ணில் சத்யன் பட்டான். உடனே அவளுக்கு அவளுடைய நேற்றைய பலவீனம் நினைவிற்கு வந்து விட்டது. சோர்வுற்ற உடல் சட்டென நடுங்க… வார்த்தைகள் குளற…கண்கள் கலங்க...

"உலகம் நம்முடைய பலவீனத்தைதான் நமக்கு எதிரான ஆயுதமாக்கி பார்க்கும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.