(Reading time: 11 - 22 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

சரவணனுக்கோ அனுபவம் இல்லாத குமாரை நியமிக்க தயக்கம். அப்போது தான் கல்லூரியை முடித்து விட்டு தந்தையின் நிறுவன நிர்வாகத்தை கற்க வந்திருந்த இந்து குமாருக்கு பரிந்துரை செய்தாள். அவன் அது வரை பெற்றிருந்த மதிப்பெண்ணையும்,  குடும்ப சூழ்நிலையையும் அவள் சுட்டி காட்டினாள். ஆனாலும் தந்தை தயக்கம் காட்டவும், தன் பக்கத்தை, அன்னையின் உதவி கொண்டு உறுதிப் படுத்திக் கொண்டாள். சரவணனை பொறுத்த வரை அர்ச்சனா சொல்வது தான் வேத வாக்கு.

  

"எனக்கு இதெல்லாம் முதல்ல தெரியாது சார். ஒரு தற்காலிக வேலையா தான் சரவணன் சார் எனக்கு கொடுத்தார். நான் நல்லா வேலை செய்தால் நிரந்தரம் செய்வேன்னு சொன்னார். அப்புறம் மூணு மாசத்திலேயே எனக்கு நிரந்தர உத்தரவை கொடுத்திட்டார். அப்போ அவரே என்னை கூப்பிட்டு இதை சொன்னார். அவரை மாதிரி ஒரு நல்ல மனிதரை நல்ல முதலாளியை பார்ப்பதே கஷ்டம்.."

  

"ம்ம்ம் ஆனால் அவர் உங்களுக்கு வேலை தர யோசிக்க தானே செய்தார்...."

  

"அதற்கு காரணம் இருக்கு தானே சார். அவர் பரிதாபப்பட்டு தகுதி பார்க்காமல் எனக்கு வேலை கொடுத்து ஒரு தப்பான முன் உதாரணமா இருக்க கூடாதுன்னு நினைச்சு இருக்கலாம்...."

  

அவனுக்கு சரவணன் குடும்பம் மீதிருந்த மதிப்பும் விசுவாசமும் சஞ்சீவுக்கு புரிந்தது. அதன் பின் அவன் பேசிய பலரும், சரவணனையும், அர்ச்சனாவையும், இந்துவையும், ஏன் சேகரையும் கூட புகழ்ந்து தான் பேசினார்கள். அதே போல் அங்கு வேலை செய்பவர் யாரும் ஏதோ பணத்திற்காக வேலை செய்கிறோம் என்பது இல்லாது மிகுந்த மகிழ்ச்சியுடன் பணி புரிவதாக தோன்றியது. அதற்க்கான காரணமும் அவனுக்கு விரைவிலேயே புரிந்தது. எஸ் எ ஐ பெயரில் விற்பனையாகும், உடைகளை வடிவமைக்க என்று தனியே ஒரு பிரிவு இருந்தது.  அதன் உள்ளே சென்றவன், அங்கே பல இளம் பெண்களை கண்டு அதிசயிக்கவில்லை. பொதுவாக பேஷன் டிசைன் என்றாலே பெண்கள் தானே இருப்பார்கள்! ஆனால் அவர்களின் நடுவில் ஐம்பது வயதில் ஒரு பெண்மணியை காணவும் அவனுக்கு அதிசயமாகிப் போனது. அதிலும் அவரை பார்த்தால் அதி நாகரிகமானவராகவும் தெரிய வில்லை. சஞ்சீவை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்த குமார், அவனின் வியந்த பார்வையைக் கண்டு,

  

"என்ன சார் கமலா அக்கா பார்த்து ஷாக் ஆயிட்டீங்களா?" எனக் கேட்டான்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.