மலர அடுத்து தாஸ் வரவம் அவள் பயத்தில் தலை குனிந்தாள். பவியோ தேவாவை அழைத்துக் கொண்டு வந்து ஒரு சேரில் அமர வைத்தவள்
”மாமா இன்னிக்கு நானும் கீர்த்தியும் சமையல் போட்டி வைச்சோம், தனித்தனியா வெண் பொங்கல் செஞ்சிருக்கோம். யாரோட டிஷ் நல்லாயிருக்குன்னு சொல்லுங்களேன்” என சொல்ல தேவா புரியாமல் விக்ரமை பார்த்தான்
”என்ன விக்ரம் இது”
“அய்யோ அண்ணா அதை ஏன் கேட்கறீங்க கோயிலுக்கு போய் வந்த ரெண்டு பேரும் சமையல் கட்டுல நுழைஞ்சி ஒரே சண்டை போட்டாங்க, யார் டிபன் செய்றதுன்னு சரி சண்டையை சரியாக்கறேன்னு நான்தான் இப்படி சமையல் போட்டி வைச்சேன். ரெண்டு பேரும் சமைச்சிட்டாங்க. அதுல கீர்த்தி வேகமாக சமைச்சி வைச்சிட்டு வெளிய போனா, இவள் இப்பதான் சமைச்சி முடிச்சா. ரெண்டு பேர் செஞ்சதையும் நான் சாப்பிட்டேன். ரெண்டுமே நல்லாயிருக்கு ஆனா ஒருத்தரைத்தான் செலக்ட் பண்ணணும்னு பவி அடம்பிடிக்கறா, என் கூட சண்டை போடறா அண்ணா நீயே சாப்பிட்டு பார்த்து யாரோடது நல்லாயிருக்குன்னு சொல்ணா” என சொல்ல தேவா சிரித்தபடியே சரியென தலையாட்ட தாஸும் ஒரு சேரில் அமர்ந்துக் கொள்ள பவி இருவருக்கும் தனித்தனியாக முதலில் ஒரு கிண்ணத்தில் இருந்த வெண் பொங்கலை வைத்தாள். அதை இருவரும் சாப்பிட்டு முடித்ததும் தேவா
”நல்லாயிருக்கு நெய் தூக்கலா, காரம் சரியா ம் நல்லாயிருக்கு” என்றான் உடனே அவள் இன்னொரு கிண்ணத்தில் இருந்த வெண் பொங்கலை பரிமாறினாள். அதை ஒரு வாய் சாப்பிட்ட உடனே கண்டுபிடித்தான் அது கீர்த்தனா செய்ததென்று காரணம் அந்த பொங்கலை கேரள பாணியில் அவள் செய்திருந்தாள். கல்லூரியில் தேவா படித்தபோது கேரளாவிற்கு டூர் சென்றபோது சாப்பிட்ட அதே ருசி இதில் தெரியவே
”ரொம்ப நல்லாயிருக்கு” என்றான் தேவா தாஸும் சூப்பர் என கை சைகை செய்ய பவி உடனே
”ரெண்டுத்துல எது நல்லாயிருக்கு”
“எதுவா இதான்” என கீர்த்தனா செய்ததை காட்ட பவியின் முகம் சூம்பி போனது.