”என்னடா தாஸ் தலைவலியா வா வா மூலிகை எண்ணெய் இருக்கு தேய்ச்சி விடறேன் வாடா” என அவனை கையோடு இழுத்துக் கொண்டுச் செல்ல அவன் வரமாட்டேன் என அடம்பிடிக்க கேட்காமல் அவனை தரதரவென இழுத்துச் சென்றார் தாத்தா வைத்தியநாதன்.
அங்கு கோயிலிலோ தேவா வேகமாக சாமியை கும்பிட்டு விட்டு சுற்றி முற்றி பார்த்தான். பிரகாரத்தையும் சுற்றியாகி விட்டது. கீர்த்தனா இல்லாமல் போகவும் குழம்பினான். பழங்கால கோயில் என்பதால் அந்த கோயிலைச் சுற்றி மதில் சுவர்கள் இருக்கும், அதற்கு உள்ளும் புறமும் செடிகள் மரங்கள் என வளர்ந்திருக்கும். கோயிலுக்கு ஒரு பக்கம் சின்னதாக குளமும் இன்னொரு பக்கம் கிணறும் இருக்கும் அங்கு சென்று தேடியும் கீர்த்தனா இல்லாமல் போகவே தேவா தன் மனதுக்குள்
”சே நாமதான் லேட்டு, அவள் முன்னாடியே வந்துட்டு போயிட்டா போல அவள்கிட்ட நாம டைம் கூட கேட்கலையே சரி விடு எப்படியாவது அவளை பார்த்து முதல்ல போன் நெம்பர் வாங்கிப் பேசிடனும்” என நினைத்தவன் காற்றாட ஒரு காலியான இடத்தில் அமர்ந்து கண்கள் மூடி நமசிவாய மந்திரத்தை ஓதிக்கொண்டிருந்தான்.
அவன் அமர்ந்த இடம் பின் பக்கம் மதில் சுவரை தாண்டி வெட்ட வெளியில் மரங்களுக்கு மத்தியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். கீர்த்தனாவை தேடி கோயில் முழுக்க அலைந்து திரிந்து பின் பக்கமும் அலைந்ததில் அப்படியே அமர்ந்துவிட்டான். அந்த மரங்கள் இருந்த இடமும் கோயிலுக்கே சொந்தம்.
வேப்பமரம், அரசமரம், புளியமரம் என பெரிய பெரிய மரங்கள் அங்கு இருந்தது. சிலுசிலுவென்ற காற்றில் அமர்ந்தபடி தேவா மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தான். 108 முறை சொல்லி முடித்த உடன் கையில் இருந்த ருத்ராட்சத்தை இரு கண்களில் ஒத்திக் கொண்டு அதை கழுத்தில் போட்டவன் கண்கள் திறந்துப் பார்த்தான்.
அங்கு நேராக இருந்த ஒரு மரத்தடியில் கீர்த்தனா அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும் அவன் சிரிக்க அவளோ அங்கிருந்து எழுந்து அவனைத் தேடி வந்து அவன் முன்பு அமர்ந்தாள்.