நீங்க விரட்டிட்டா இன்னொரு புது ஆளை கொண்டு வரமாட்டாங்களா, இப்படியே எத்தனை பேரை நீங்க விரட்டுவீங்க, விரட்டறதே வேலையா இருந்தா உங்களை யார் மதிப்பாங்க? உங்களை நம்பி யார் வேலை தருவாங்க?” என கேட்க வந்தவர்கள் உடனே
”நீ யார்மா” என கேட்க சரண்யாவோ பதில் சொல்லு முன் பாட்டி கோசலை
”யாரா தெரியலை தேவாவை கல்யாணம் பண்ணிக்க போறவ, இந்த வீட்டு மூத்த மருமகள்” என சந்தோசமாகச் சொல்ல வந்திருந்தவர்கள் அதிர்ந்தார்கள் ஆனாலும் சந்தோஷப்பட்டார்கள்.
”நல்லது நல்லது தேவா தம்பியை எங்க எல்லாருக்கும் பிடிக்கும் நியாயமா பேச அவரால முடியும், அவருக்கு அடுத்து இந்த பொண்ணு பேசுது சரியான ஜோடிப் பொருத்தம். தேவா தம்பிக்கு ஏத்த பொண்ணுதான்” என ஒருவர் சொல்ல மற்றவர்
”எங்களுக்கு தம்பி மேல என்னிக்குமே கோபம் கிடையாது, எல்லாருக்குமே தேவா தம்பின்னா மதிப்பு அதிகம், அந்த தம்பிக்கு நாங்க என்னிக்குமே எதிலுமே கஷ்டம் தரமாட்டோம். வீட்டு முன்னாடி வந்து கத்தினது கூட தப்புதான், நீ சொன்னது போலவே நாங்க உங்க மாமனார்கிட்ட பேசிக்கிறோம்மா அப்புறம் நாங்க வர்றோம்” என சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பி சென்றுவிட சரண்யாவிற்கு பக்கென்றது. அவள் பாட்டியிடம்
”பாட்டி என்ன இது எதுக்காக இப்படி மருமகள்ன்னு சொன்னீங்க“
”ஏன் பயப்படற இவங்களால உனக்கு கஷ்டம் வரும்னு நினைக்கிறியா, நான் இருக்கேன்ல என்னை விடு, தேவா இருக்கான்ல அவன் உன்னை நல்லா பார்த்துக்குவான் என்ன ஒரு துணிச்சல் உனக்கு, அந்த ஆம்பளைங்க முன்னாடி தேவாவை போல தைரியமா நின்று நியாயம் பேசி அவங்களை மாத்தின பார்த்தியா என் நெஞ்சே குளிர்ந்திடுச்சி. உன்னைப் போல ஒருத்தி வரனும்னுதான் இந்த வீடு காத்திருக்கு, நீ வாம்மா நான் உனக்கு திருஷ்டி சுத்தி போடறேன். இப்ப போனானுங்களே இவனுங்க கண்ணே முழுசா உன் மேல இருக்கும் வா வா”
“இல்ல பாட்டி நான் சொல்றதை கேளுங்க நான் வந்து” என அவள் பேச ஆரம்பிக்க அவளை பேச விடாமல் அழைத்துச் சென்றார் பாட்டி.