மாலையானதும் கீர்த்தனா நேரத்திற்கு எழுந்து விளக்கு வைக்கச் செல்ல தேவாவோ சரண்யாவை கட்டிப்பிடித்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான். அது தெரியாமல் கீர்த்தனா அவனுக்கு காபி போட்டுக் கொண்டு வந்து பார்க்க அதிர்ந்து போய் கோபத்தில் அவனை உலுக்கி விட்டாள்.
கண்விழித்தவன் கீர்த்தனா கோபமாக நிற்பதையும் தான் சரண்யாவை கட்டியணைத்தவாறு படுக்கையில் கிடப்பதையும் கண்டு அச்சத்தில் எழுந்து நின்றான்
”இல்லை இது தூக்கத்தில இப்படி சாரி கீர்த்தனா” என பதற அவளோ பதிலே சொல்லாமல் காபியை கொடுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள். அவளது அந்த அமைதி அவனைக் கொன்றது. அனைத்துக்கும் காரணமான சரண்யாவைப் பார்த்து கோபமாக தலையணையால் அவளை அடித்து எழுப்பினான். கையில் காபியுடன் நின்றவனைக் கண்டவள்
”தாங்ஸ்”என்றாள்
“எதுக்கு” என புரியாமல் கேட்க அவனிடமிருந்து காபியை வாங்கி
”இதுக்குத்தான்” என்றாள்
”ஏய் அது எனக்கு, உனக்கில்லை சொந்தமா நீ காபி போட்டுக்க மாட்டியா, விளக்கு வைச்ச நேரத்தில தூங்கறியே வீட்டுக்கு ஆகுமா எழு எழுந்து வெளிய வா, உன்னால எனக்கும் கீர்த்தனாவுக்கும் ஃப்ரீயாவே டைவர்ஸ் கிடைச்சிடும் போல இருக்கு எழுந்து ரெடியாகி நில்லு”
”எங்க போறோம்”
“ம் காசிக்கு”