சிட்டாக பறந்து தன் மனைவியை தேடிச் சென்றார்
அவரோ பூஜையறைக்குள் சென்றவர் விளக்கை பற்ற வைத்துவிட்டு தியானத்தில் அமர்ந்துவிட சுந்திரத்தால் அந்த தியானத்தை கெடுக்க மனமின்றி அமைதியாக காத்திருந்தார்.. நேரம் சென்றது தியானமும் தொடர்ந்தது. தாமரை தன் கடந்த காலத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஞாபகப்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றாக நினைத்து உருகிக் கொண்டிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு
மானாமதுரை
”வைத்தி டேய் வைத்தி இங்க வா, நேரம் ஆச்சிப் பாரு பள்ளிக்கூடத்துக்கு போகனும்ல முதல் நாளே தாமதமா போனா தப்பா நினைப்பாங்க வா இங்க” என விஜயன் தனது 6 வயது மகன் வைத்தியநாதனை பிடித்து இழுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் செல்லும் வழியில் நடக்கலானார். வழியில் விஜயன் நிலத்தில் வேலை செய்யும் மாணிக்கமும் தனது மகன் சுந்தரத்தை பள்ளியில் சேர்க்க அழைத்து வந்தார். விஜயனைக் கண்டதும்
”ஐயா வணக்கம்ங்க” என பணிவாக சொல்ல விஜயனும்
”என்ன மாணிக்கம் உன் புள்ளையையும் பள்ளிக்கூடத்தில படிக்க வைக்கறப் போல”
“ஆமாம்ங்கய்யா எல்லாம் உங்க புண்ணியத்திலதான் இல்லைன்னா என்னால படிக்க வைக்க முடியுமா, உங்க நிலத்தில நான் வேலை செய்றதால கல்விக்கு உதவி செய்றீங்க அதான் என் பையனை கூட்டிட்டு பள்ளிக்கூடத்தில சேர்க்கலாம்னு வந்தேன்”
“உன் பையன் எப்படி நல்லா படிப்பானா”
“நல்லா படிப்பாங்கய்யா”
“என் பையனும் திறமைசாலிதான்”