அவளை கொண்டு போய் வைத்தியின் பக்கத்தில் அமர வைக்க போக அவனோ அவன் பக்கத்தில் வேறு ஒரு பையன் இருப்பதைக் கண்டு அங்கு செந்தாமரை அமர்வது பிடிக்காமல் சுந்தரத்துக்கும் தனக்கும் நடுவில் இடைவெளி விட்டு நகர்ந்து அமர்ந்தான். செந்தாமரையை இருவருக்கும் மத்தியில் அமர வைத்த மணியோ
”சின்னய்யா அப்ப நான் கிளம்பறேங்க”
“சரி நான் பார்த்துக்கறேன்” என அவன் திடமாக சொல்லவும் அதோடு கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
கண்களை தன் கைகளால் கசக்கியபடியே ஆஆஆ வென அழுதவளைப் பார்த்துச் சிரித்தான் சுந்தரம்
”ஏய் சுந்தரம் எதுக்கு சிரிக்கற பாவம் அழுவறா சிரிக்காத” என அவனை அதட்டவும் அதோடு அவன் வாய் மூடிக்கொள்ள வைத்தியோ தன் பையில் இருந்த கமர்கட்டு, ரப்பர் மிட்டாய், கடலை உருண்டை என அனைத்தும் எடுத்து அவள் மடியில் வைத்தான்.
அதைப்பார்த்த தாமரையோ அழுகையை மெல்ல மெல்ல குறைத்து இறுதியில் ஒரு கடலை உருண்டையை எடுத்து சாப்பிடலானாள். அவள் கையில் இருந்த சிலேட் கூட பழையதாகவே இருந்தது. அதை பத்திரமாக ஒரு கையில் வைத்துக் கொண்டு அவள் விம்மி விம்மி அழுதுக் கொண்டே ஒரு கையால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அழகை வெகுவாக ரசித்தான் வைத்தி
”உன் பேரு என்ன” என கேட்க அவளோ அவனிடம்
”செந்தாமரை”
“என் பேரு வைத்தி” என்றான்
அவளோ ம் என தலையாட்டிவிட்டு அடுத்து ரப்பர் மிட்டாய் சாப்பிட ஆரம்பித்தாள்