(Reading time: 30 - 60 minutes)

'சினிமா காரங்களுக்கும் மனசு இருக்குங்க. அவங்களுக்கும் வலிக்கும். அவங்க நடிப்பை விமர்சனம் செய்யுங்க அதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அவங்க தனிப்பட்ட வாழ்கையை பத்தி நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டு வாய்க்கு வந்த படி பேசாதீங்க. இது என்னோட தாழ்மையான வேண்டுகோள். என்னோட ரசிகர்கள் இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணுவீங்கன்னு நம்பறேன்..' 

எங்க அம்மா எப்படின்னு எனக்கு நல்லா தெரியும். உண்மையிலேயே எங்க அம்மா வயித்திலே பிறந்ததுக்காக நான் ரொம்ப பெருமை படறேன். அவங்க நல்லவங்கன்னு யார்கிட்டேயும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனா அவங்களுக்கு நடந்ததை எல்லாரும் புரிஞ்சிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். புரிய வெச்சிட்டேன். நன்றி' கையெடுத்து வணங்கினான் ரிஷி.

விழிகளைகூட நிமிர்த்த முடியவில்லை மேகலாவால். அவமான ஊசிகள் அவர் உடலெங்கும் தைத்து நிற்க.....

சந்திரிக்கா மேடம் கொஞ்சம் மேலே வாங்க...' மைக்கில் அழைத்தார் மேடையில் இருந்த அந்த பெரிய நடிகர். மேடை ஏறி வந்தார் சந்திரிக்கா. தர்மசங்கடத்தின் மேலே நின்றார் என்றே சொல்ல வேண்டும். அவர் அருகில் வந்து அவர் தோளை அணைத்துக்கொண்டான் ரிஷி. மேகலாவின் உள்ளம் கொதித்து பொங்கியது.

'உங்களுக்கு இவ்வளவு தப்பு நடந்திருக்குன்னு எங்க யாருக்கும் தெரியாது மேடம். தெரிஞ்சிருந்தா முதலிலேயே ஏதாவது செய்திருப்போம்...' அவர் குரலில் மன்னிப்பின் பாவம்.

'அய்யோ... பரவாயில்லை... பழசை எல்லாம் நான் எப்பவோ மறந்திட்டேன்' மேகலாவை பார்த்துகொண்டே தான் சொன்னார் அவர். 'சின்ன பையன். அவனுக்கு ஏதோ மனசு கேட்கலை. அதான் இப்படி...'

அநேகமாக எல்லா நடிகர் நடிகைகளும் மேடை ஏறி சந்திரிக்காவுக்கு தங்களது அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர். யாரும் மேகலாவின் பக்கம் கூட திரும்பவில்லை. தலை குனிந்து தள்ளாடியபடியே இறங்கினார் மேடையை விட்டு. அவர் அருகில் ஓடி வந்தது அஸ்வத்.

'நீ வாம்மா. நாம வீட்டுக்கு போகலாம்.' தாங்கிக்கொண்டான் அம்மாவை. தன் மீது பாசம் வைத்து வளர்த்த அம்மாவை தாண்டி அவன் வேறெதையுமே சிந்திப்பதாக இல்லை. இந்த நிமிடம் வரை!!!

விழா தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்க இயக்குனரும் கிளம்பி விட்டிருந்தார். அருந்ததியையும் இழுத்துக்கொண்டு!!!!!  அவரை பற்றியும் ரிஷி கொஞ்சம் யோசித்திருக்கலாம் என்ற வருத்தம் அவருக்கு இருந்தது நிஜம்.

இத்தனை நாட்கள் ரிஷி அவள் பக்கம் திரும்பாததற்கு காரணம் தெளிவாக புரிந்திருந்தது அவளுக்கு. முடிந்து விட்டதா??? இதோடு எல்லாம் முடிந்து விட்டதா???

முடியவில்லை. அதோடு முடியவில்லை எதுவும். அவமானமும், ஆத்திரமும் தலை தூக்க  அதன் பின் ஆரம்பித்தது மேகலாவின் தற்கொலை முயற்சி. ஒரு முறை... இரண்டு முறை... மூன்று முறை... பதறிப்போனார் சந்திரிக்கா. அத்தனை பத்திரிக்கைகளிலும் இதே பேச்சு

'அம்மா... எல்லாம் டிராமாமா....' இதை எல்லாம் நம்ப தயாராக இல்லை ரிஷி.

'அவன் சினிமாவை விட்டு, இந்த நாட்டை விட்டே போகணும். இனிமே இந்த பக்கம் வரக்கூடாது. அப்போதான் நான் நிம்மதியா இருப்பேன்' தினமும் இதே அலறல் மேகலாவிடம். வேறு வழியே இல்லாமல் ஒரு நாள் ரிஷியின் வீட்டுக்கு வந்தார் இயக்குனர்.

'உன்னை அறிமுகப்படுத்தினது நான் தான். உனக்கு குரு நான். அன்னைக்கு நீ என்னை பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா ரிஷி. அவளுக்கு ஒரு அவமானம்ன்னா அது எனக்கும் தான் இல்லையா???"

'கரெக்ட் அங்கிள். ஆனா என்னை பொறுத்தவரைக்கும் மாதா பிதா அப்புறம் தான் குரு இல்லையா??? நீங்க சொன்னதே தான். எங்க அம்மாவுக்கு ஒரு அவமானம்ன்னா அது எனக்கும் இல்லையா???' பொறுமையான தொனியில் எதிர் கேள்வி கேட்டான் ரிஷி. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே தான் இருந்தனர். ராமனும் சந்திரிக்காவும்.

சில நிமிட மௌனம். பின்னர் கேட்டார் இயக்குனர் ' சரி எனக்கு உன்கிட்டே இருந்து ஒரு குருதட்சணை வேணும். தருவியா???'

'துரோணர் கட்டை விரலை கேட்டா மாதிரி கேட்க போறீங்களா அங்கிள்???'

'ஆமாம்' என்றார் சட்டென 'நீ இந்த நாட்டை விட்டு போயிடணும்'

'சாரி அங்கிள். நான் எந்த தப்பும் செய்யலை. அதனாலே போக மாட்டேன்.' உறுதியான குரலில் வந்தது பதில்.

'இல்லை நாங்க போயிடறோம்.' இது அம்மா.

'மா.... என்னமா நீ??  நான் வரமாட்டேன்...'

'நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். அவங்களோட எந்த பிரச்னையும் வேண்டாம்னு. நீ கொடுத்த வார்த்தையை மீறிட்டே ரிஷி....'

'அம்மா... என் கரீயர்... கஷ்டபட்டு மேலே வந்திருக்கேன் மா...'

'ஒரு உயிரை விட வேறே எதுவும் பெரிசு இல்லை ரிஷி. மேகலா உயிர் போயிடுச்சுன்னா யாராலையும் அதை திருப்பி தர முடியாது கொஞ்ச வருஷம் பிரேக் எடு. எல்லார் மனசும் ஆறட்டும். அப்புறம் பார்ப்போம்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.