(Reading time: 23 - 45 minutes)

வளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அதே நேரத்தில் தனியாக கீழே சென்று வரவும் சரியாக தோன்றவில்லை. மறுக்கலாம் என்று வாய் திறந்தவளுக்கு தோழியின் ஆசையான முகத்தை பார்த்ததும் மறுக்க தோன்றவில்லை... மீண்டும் வாயை மூடிக்கொண்டவள் கண்களால் மதுவை பார்த்துவிட்டு “ப்ளீஸ்...” என்று கேட்கவும் அணியின் ஸ்ட்ரிக்ட் தலைவி கொஞ்சம் மனம் இறங்கிவிட்டாள்.

“ஹ்ம்ம்... என்னவோ பண்ணுங்க...” என்று விட்டு, “எட்டி பாருங்க குல்பி தள்ளி போகாம ஹோட்டல்க்கு கீழேயே இருந்துச்சுன்னா மட்டும் தான் போகணும்..” என்று கூறவும் மெத்தையில் இருந்து விறுவிறுவென்று ஓடி சென்று எட்டி பார்த்தாள் மற்றவள்.

சரியாக அது ஹோடெல்லை கடக்க போக, கொஞ்சம் கத்தி “குல்பி... ஒய் குல்பி...” என்றாள்.

அவள் கத்தவும் மற்ற தோழிகள் போச்சு என்று தலையில் கைவைத்துவிட்டனர்.

போச்சு எல்லாம் உன்னால தான் என்று மதுவை ஒரு செல்ல அடி போட்டுவிட்டு அவசரமாக போய் தோழியின் வாயை மூடினாள் கீர்த்தி. சத்தம் கேட்டு குல்பிக்காரன் அதே இடத்தில் நின்று சுற்றி சுற்றி பார்க்க... அதை கவனித்துவிட்டு தோழியை முறைத்தவள் அவளது செல்லமாக கெஞ்சும் கண்களை பார்த்துவிட்டு “ஹ்ம்ம் சரி வா” என்று கூறிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றாள்.

யாரோ அவனை வேண்டும் என்றே கூப்பிட்டு விட்டு ஓடி சென்றுவிட்டனர் என்று நினைத்துக்கொண்டவன், கொஞ்சம் மிதிவண்டியை அழுத்திக்கொண்டு முன்னே சென்றான் அவர்கள் வருவதற்குள்.

“அச்சச்சோ என்னடி நான் தான் கூப்பிட்டேள அதுக்குள்ள இந்த குல்பிகாரன் எங்க போனான்” என்று தோழி மீண்டும் அதிலேயே குறியாக வர, கீர்த்தியும் சேர்ந்து தேடினாள். கொஞ்சம் புதிதாக இருந்தாலும் நடந்து சென்று பக்கவாட்டில் திரும்பிய தெருவில் எட்டி பார்த்தனர். நினைத்தது போலவே அவன் அந்த பக்கமாக சென்றுக்கொண்டிருக்க குல்பி என்று அழைத்து நிறுத்தினர்.

பார்த்தவன் நின்றுவிட, “அட நீங்க தானம்மா கூப்பிட்டது... நான் ஏதோ காத்து கருப்போன்னு நினைச்சேன்” என்று கூறி சிரித்தான்.

அவன் கொஞ்சம் இலகுவாக பேச இருள் பயம் குறைந்தாலும் அதிகமாக பேச்சு தராமல் குல்பி வாங்கினர்.

அவர்களுக்கு பின்புறம் இருந்து ஒரு உருவம் வெளியே வருவும் பயத்துடன் திடுக்கிட்டு தள்ளி நின்றனர் அவர்களோடு சேர்ந்து குல்பிகாரனும் பயந்து நின்றான். வெளியே வந்தவன் கேவலமாக சிரித்துவிட்டு “என்னடா நீயே பயந்துட்ட... சரி எனக்கும் ஒரு குல்பி குடு” என்று தள்ளாடிய நடையுடன் மதுவின் நாற்றம் வீச நின்றுக்கொண்டிருந்தான்.

அவனை பார்க்கவே அருவருப்பாக இருக்க உடல் தானாக பயத்தில் சுருங்கிவிட இரு பெண்களும் கையில் இருந்த சில்லறையை குடுத்துவிட்டு வேகமாக நடக்க துவங்கினர். என்னதான் வீராவேசமாக வந்துவிட்டாலும் ஒரு ஆண்மகனை அந்த சூழலில் எதிர்கொள்ள முடியவில்லை பெண்களுக்கு. அந்த பெண்கள் இருவரும் முன்னே செல்ல அவர்கள் போவதை கண்டு அதே தள்ளாடிய நடையுடன் பின்னால் வர துவங்கினான் குடிகாரன்.

“நடையா... இது நடையா... ஒரு நாடகம் அன்றோ நடக்குது...

இடையா... இது இடையா... அது இல்லாதது போல...” என்று பாடும் சத்தம் அருகமையில் கேட்கவும் திரும்பி பார்த்தாள் கீர்த்தி. பின்னோடு வந்தவன் அவர்கள் அருகாமையில் நின்று அந்த கேவலமான நாற்றத்தோடு ஒரு சிரிப்பை சிரித்தவண்ணம் அவளது கையை பிடிக்க  மனம் தொண்டையில் வந்து துடிக்க செய்தது கீர்த்திக்கு. தள்ளாட்டத்தில் அவன் இருந்ததாலோ என்னவோ வெறுப்போடு அவள் கையை சுலபமாக இழுத்துக்கொண்டு அந்த அருவருப்பில் எச்சிலை உமிழ்ந்து அவன் மீது துப்பிவிட்டு ஓடிவந்தாள் தோழியின் கையை இறுக பற்றிக்கொண்டு.

குடியில் மூழ்கிப்போனவன் மீண்டும் பின்னோடு வந்தானா அல்லது கோவத்தோடு தாக்க வந்தானா என்று கூட பார்க்கும் துணிவு இருவருக்கும் இல்லை. கையில் வாங்கிய குல்பி கீழே விழுந்துவிட பதறி திரும்பி பார்க்காமல் அறைக்கு முன்னே வந்து சுவாசித்துக்கொண்டிருந்தனர். தோழியை நிறுத்தியதும் கீர்த்தி தான், எங்கே மதுவிற்கு தெரிந்தால் திட்டுவாளோ என்று நினைத்து வெளியேயே நின்று ஆசுவாச படுத்திக்கொண்டு உள்ளே சென்றனர்.

அவர்களின் முகத்தை பார்க்காமல் தொலைகாட்சியை பார்த்தவண்ணம் அவர்கள் உள்ளே வந்ததை மட்டும் உணர்ந்து பேசிய மது இலகுவாக கேட்டாள். “என்னடி ஆட்டத்தை போட்டுட்டு வருவீங்கன்னு பார்த்தாள் பொறுமையா சத்தமே இல்லாமல் வரீங்க என்ன குல்பி கிடைக்கலையா??”

தோழி கீர்த்தியின் முகத்தை பார்க்க, “இல்ல மது கிடைக்கலை... அதான் இவள் சோர்ந்து போயிட்டாள்.”

“ஆமா ஆமா பெரிய சோகம் தான்ம்மா படுங்க ரெண்டு பேரும்” என்று கிண்டல் செய்து அவளும் படுத்துக்கொண்டாள். கீர்த்தி சொன்ன பொய்யையே பின்பற்ற துவங்கினாள் மற்றவள். இருவரும் படுத்துவிட, கீர்த்திக்கு தான் அந்த குடிகாரன் தொட்ட இடம் எரிவதுப் போல இருந்தது அவ்வளவு அருவருப்பாக இருந்தது. அடிக்கடி எழுந்து சென்று சோப்பை போட்டு கழுவி பார்த்தாள் எந்த மாற்றமும் இல்லை அது உடலில் பட்ட உணரவில்லையே உள்ளத்தில் தோன்றியது ஆயிற்றே அதை அவளால் மாற்ற முடியவில்லை. இதுவெல்லாம் மறந்து அவள் தூங்க வெகு நேரம் ஆனது.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1082}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.