(Reading time: 37 - 73 minutes)

சீரான வேகத்தில் அத்தனை உணர்வுகளையும் ஒன்றன் பின் ஒன்றாய் அவள் உள்ளத்தில் உள்வாங்க துவங்கிய ருயம்மா, வினாவை வீசியபின் சற்றாய் அஞ்சினாள். பாண்டியத்துடன் பகையை மீண்டுமாய் இழுத்தது இவள் நாவாய் இருக்க கூடாதே….

இவளது சீற்றத்தை செவ்வனே புரிந்து கொண்டாலும் மானகவசனின் விழிகளில் சினமோ அல்லது விசனமோ இரண்டுமே தோன்றவே இல்லை….

அதுவே இவளை ஒரு புறம் இன்னுமாய் அமைதிக்குள்ளாக்கி மறுபுறம் இன்னுமாய் சினம் கூட்டுகிறது எனில், அவனது பதில் செய்கையோ அதை கிஞ்சித்தும் சட்டை செய்தது போல் இல்லை.….

ஆம் அவன் இப்போது சற்றாய் நகைத்தான். அதன் மூலம் சிறியவள் சினத்தை இன்னுமே சீண்டினான்….

இவள் வேதனை அவனுக்கு ஹாஸ்யமாமோ? இவள் முன்பிலும் அதிகமாய் ஆத்திரம் கொள்ள…. அவனோ அடுத்த  நகைப்பால் இவளை குளிர்விக்கவும் செய்துவிட்டான்.

 “இழுத்து வந்து கொட்டிலில் அடைப்பதா? “ என வினவியபடி மீண்டுமாய் நகைத்தான் அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

கடமைக்காய் ஒரு விவாஹம் என்ற சிந்தையே அவனில் இல்லை என்பதை இவளுக்கு தெரிவிக்க அந்த நகைப்பே போதுமானதாய் இருக்க…

“அவ்வாறு அடுத்தவரை அனுப்பாமல் நானே வந்திருக்கிறேன் என்றாலே இது கொட்டிலில் அடைக்கும் விவகாரம் இலையென்றாகிறதே ருயமரே” என அதை தொடர்ந்த அவன் வார்த்தைகளில் இவள் குளிரமட்டுமா செய்தாள்.?

அதை கேட்ட மாத்திரம், அழகிய தென்றல் ஒன்று அவள் மனதில் சிறியதாய் ஒரு நர்த்தன அரங்கேற்றம் செய்கின்றது எனில்……அர்த்தமற்ற ஆவல் ஒன்று உரிமையாய் போட்டி நாட்டியம் புரிகின்றது……

எதை ஏதிர்பார்க்கிறோம் என புரியாதே எதிர்பார்த்தாள் அவள்.

“எனக்கு விவாஹம் என்பது முக்கிய உறவு….” ஏமாற்றம் தரவில்லை அவனும்.

விழி விரிய பார்த்து நின்றாள்.

பாறையில் பாய்ந்து பிராவகிக்கும் நீர்வீழ்ச்சி போல் நிதானமின்றி இறங்குகிறது பாவையின் நெஞ்சினுள் அப்பதம்….

புனலாடியது இவள் பெண்மை. நிறைந்தாள்.

இவ்விடையைத்தான் விரும்பி எதிர்பார்த்தாளா? ஆனால் ஏன்?

“ருயமரே பாண்டியர்கள் மட்டுமல்ல தமிழகத்தை ஆண்ட அனைத்து வேந்தர்களும் வரலாறு அறிந்த காலம் வரை உமது தேசத்தைப் போலவே பலதார மணம் கொண்டவர்கள்…..அதில் ராஜிய விவாஹங்களும் அடங்கும்…..” அடுத்த அவனது விளக்கத்திலேயே  விலகிப் போனது அந்நீர்வீழ்ச்சி சிலிர்ப்பு….

எத்தனைதான் யதார்த்தம் என்றாலும் எப்போதுமே இவளுக்கு எண்ணக் கசக்கும் தகவல் இது. இன்று அதை இவன் சொல்ல மனம் இன்னுமாய் அலைப்புறுகிறது. அவன் மீதிருந்த பார்வையை அலையற்ற கடல் புறமாய் திருப்பிக் கொண்டாள்.

 “ஆனால் அவர்கள் யாருடைய ராஜ்யமும் முடிவின்றி  தொடரவில்லை….” அவனது அடுத்த அஸ்திரத்தில் சரேலென திரும்பிப் பார்த்தாள் அவனை.

என்ன சொல்ல வருகிறார் இவர்?

“பலதார மணம் ஒருவனை ஸ்திரமிழக்க செய்யும் என்பது என் நம்பிக்கை….” அவனது வார்த்தைகளை அர்த்தம் விளங்கா பதம் போல் பார்த்தாள் ருயம்மா….

ஆழ ஆழ ஒரு ஆனந்த ஊற்றுக்குள் ஏன் புதைந்து போகிறாளாம் இவள்??

இவள் தன் பார்வையை கடல் புறமாய் திருப்பிக் கொண்ட போது அதே திக்காய் தன் பார்வையையும் திருப்பி இருந்த பாண்டிய பராக்கிரமன் இன்னும் இவள் புறம் திரும்பாமல்  அமைதியாய் அசைவாடிக் கொண்டிருக்கும் கடல் பரப்பையே பார்த்தபடி தொடர்ந்தான்.

 “மன்னனுக்கு பல மனைவியர் எனும் போது, அவர்களுக்குள் எப்போதும் ஒரு கசப்புணர்வும்,  ஒருவரோடு ஒருவர் கடும் போட்டியும் பொறாமையும் நிலவும்…..

அப்படி ஒரு பொறமையும் கசப்புமான சூழலில் வசிக்கும் அம்மன்னனின் மனம் எவ்வாறு அமைதியும் நிதானமுமாய் இருக்க இயலும்? எங்ஙனம் ஸ்திரமாய் சிந்திக்க இயலும்…. எவ்வாறு கிரமமாய் ராஜிய பரிபாலனை செய்யக் கூடும்? அவனது ஸ்திரத்தன்மை நிச்சயமாய் பாதிக்கப்படும்…..

முன்பு மதுரையை தலைநகராய் கொண்டு வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை ஆண்ட எம் முன்னோர் தம் தேசம் இழந்து, நாங்கள் இன்று தென்காசிக்கும் குலசேகரபட்டிணத்திற்குமாய் குறுகிப் போக காரணம் இப்பலதார மணம்தான்….

எனது மூதாதையரான அரசர் குலசேகர பாண்டியனின் இரு வேறு மனைவிகளின் புதல்வர்கள் சுந்தர பாண்டியனும் வீர பாண்டியனும் மதுரை அரியணைக்காய் போரிட்டதில் வந்ததுதான் இந்த அழிவு….

மன்னர் குலசேகர பாண்டியரே தன் ஒரு புதல்வனை ஆதரித்து மற்றவரை விலக்கினார் என்பதுதான் இதில் துரதர்ஷ்டத்தின் உச்சம்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.