(Reading time: 40 - 79 minutes)

அவர் அன்றைய நாள் முதல் விக்ரமை தேடி அலைய அவனோ அவர் கண்ணிலேயே அகப் படவில்லை. போனும் தொடர்புக்குள் இல்லை அப்போதுதான் அவருக்கு அவன் அடிக்கடி தன்னுடைய இருப்பிடத்தை மாற்றுவது புரிந்தது. எதற்காக இப்படி செய்ய வேண்டும் என்று அவருக்கு புரியாவிட்டாலும் இரண்டொரு நாட்கள் கழித்து அவனை கடந்த முறை சந்தித்திருந்த நட்சத்திர ஹோட்டலில் வந்திருக்கின்றானா என அடிக்கடி கேட்டுப் பார்க்கச் சொல்லி தன் செகரெட்ரியை பணித்திருக்க, அவருக்கு நான்காவது நாள்தான் அவன் அங்கு செக் இன் செய்ததாக தகவல் கிடைத்தது.

போனில் பேசுவது மரியாதை இல்லை என்பதால் , நேரில் சந்தித்து பேசலாம் என்றெண்ணி போன் செய்யாமல் அன்றைக்கு சந்திக்க புறப்பட்டு வந்திருந்தார். மூன்றாம் மாடியில் லிஃப்டில் விரையும் போதே தன்னைக் குறித்து கீழாக, இழிவாக உணர்ந்தார். வலிய வந்து பெண் கேட்டானே…… நான் சரியென்றுச் சொல்லி விட்டு இப்படி மறுப்பது எவ்வளவு ஒரு அவமானச் செயல். எப்படி எடுத்துக் கொள்வானோ? அவன் வீட்டினர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? சொந்தம் விட்டு விடும் போலிருக்கிறதே. என் மகளுக்கு போயும் போயும் இப்படி புத்தி போயிருக்கின்றதே என வருந்தி தன் நிலை எண்ணி கையாலாகாதவராக மனம் கூசிப் போய் நின்றார்.

லிஃப்டிலிருந்து வெளிவந்தது தான் தாமதம் எதிரில் விக்ரம் போனில் பேசியவாறு காரிடாரில் நடந்துச் செல்வது தெரிந்தது, பின்னாலேயே விரைந்துச் சென்றார்.

அவர் அவன் போன் பேசும் வரை சற்று நேரம் அங்கேயே காத்திருக்க நினைக்க உல்லாசமாய் அவன் உரக்க பேசுவது இவர் காதில் விழுந்தது.

எனக்கு கல்யாணமா? ஹா ஹா ஹா……அது சும்மா ஒரு டைம் பாஸ்டா நான் அப்புறமா சொல்றேனே…..

போன் ரீச் ஆகலியா….அதெப்படி ஆகும் நான் தான் அந்த ரிசார்ட்ல ஒரு வாரம் தங்கியிருந்தேனே. அது கொஞ்சம் அவுட்டர்ல இருக்கிற இடம், அங்க எல்லாம் கிடைக்கும், தண்ணி, பொண்ணு ஒன்னுக்கும் பஞ்சமில்ல……. சூப்பர்டா………..

எனவும் முதன் முறை அவன் பேச்சு பேதத்தை உணர்ந்தார், தன்னிடம் பேசிய பாவனை என்ன? அப்படி என்றால் இவன் பேசியது எல்லாம் நடிப்பா? என் மகளை இவனை நம்பி கொடுக்க இருந்தேனே………கல்யாணம் இவனுக்கு டைம் பாஸாமா?

அப்ப நான் சொல்லாம நீ விட மாட்ட……சரி சொல்லி தொலையுறேன், நம்ம கூட ஹாஸ்டல்ல ஒரு மகா மேதை இருந்தானே, எப்ப பாரு மெடல் வாங்கிட்டு………..ம் ம் அதே ரூபன் பையல்தான்.

அவன் படிப்பை கெடுக்கிறதுக்காகத்தான் நாம அவனை அன்னிக்கு தண்ணி அடிக்க வச்சோம். கோபப்படுத்தினா சண்டைக்கு வருவான், நாம கம்ப்ளெயிண்ட் செஞ்சு அவனை ஹாஸ்டல் விட்டு வெளியேத்தலான்னு பிளான் பண்ணோம் இல்லியா………………………நாம நினைச்ச மாதிரி தான் ஆச்சு, ஆனா நடந்தது என்ன அவன் அம்மாவை நான் கெட்ட வார்த்தை பேசப் போக என் பல்லு தான் நாலு போச்சு.

எனக்கு என் முன் பல்லு போயி பொய் பல்லு ஃபிக்ஸ் பண்ண எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமாடா? வீட்டில அண்ணன் தம்பிங்க என்னை பண்ணின கலாட்டா……பற்களை நற நறத்தான்.

இப்ப கூட கொஞ்சம் க்ளோஸா பழகுனதுக்கு அப்புறம் இந்த பொண்ணுங்க எல்லாம் பேச்சு பேச்சா வித்தியாசம் தெரிஞ்சு என் பல்லு ஏன் இப்படி இருக்குன்னு விஷயம் கேட்கிறப்போ அப்படியே எனக்கு வெறி கிளம்பி வரும். அன்னிக்கு ஒன்னு அவனை நான் கொன்னுருக்கணும் இல்லைன்னா நான் செத்துருக்கணும்னு வெறியே வரும். அவ்வளவு அவமானமா இருக்கும்.

ஆனா எப்பவுமே மனசில நினைச்சுப்பேன் அவனை தான் நாம விரட்டிட்டோமே, இண்டர்னேஷனல் லெவல் காலேஜிலிருந்து வெளியேறியவன் அதுவும் சும்மாவா அவமானப் படுத்தி விரட்டப் பட்டவன் உருப்பட்டுருக்கவா போறான்னு நினைச்சு சந்தோஷமா இருந்தேண்டா…..அந்த சந்தோஷமும் எனக்கு கிடைக்கலை. ஒரு மீட்ல தான் அவனை சந்திச்சேன். ரொம்ப கம்பீரமா, அழகா, தன்னம்பிக்கையா, ஃபேக்டரி ஓனரா அங்க வந்து உட்கார்ந்திருந்தான்.

என் ரத்தமெல்லாம் கொதிச்சது, நான் ஆசைப்பட்ட வெளி நாட்டுக் கார் அவன்கிட்ட இருந்தது. பக்கத்திலேயே ஒரு பொண்ணு, அவளை பார்க்கிறான் பார்க்கிறான் அப்படி ஒரு பார்வை ஒரு வேளை கல்யாணம் முடிஞ்சிடுச்சோன்னு எனக்கு கூட பொறாமையா இருந்தது.

அவனை கொஞ்ச நாளா தொடர்ந்தேன், விபரம் தெரிஞ்சுகிட்டேன். அவனால எப்படி இவ்வளவு முன்னேற முடிஞ்சதுன்னு எனக்கு சுத்தமா புரியலை…….நல்ல பணக்கார பின்புலம் இல்லை, குடும்பத்தில யாரும் முன்னே பின்னே பிஸினஸ் செஞ்சி அவனுக்கு கைட் செய்யவும் வழியில்லை………..எப்படி எப்படின்னு என்னை நானே கேட்டப்போ தான் எனக்கு தோணுச்சி……..அது எப்படியும் இருந்துட்டு போகட்டும்.

ஆனா…….என்னை அவமானப்படுத்தினவனை பைத்தியக்காரனா, ஒன்னுமில்லாதவனா, ரோடு ரோடா அலைய விடணும், கதறடிக்கணும். சின்ன வயசில இந்த மிடில் க்ளாஸ் பையனை என் கூட அதும் விக்ரமாதித்யன், ஆதித்யன் க்ரூப் ஆஃப் கம்பனீஸோட வாரிசோட எங்க அம்மா அப்பா இணை கூட்டினாங்க, அப்பவே எனக்கு அவன் மேல வந்த வன்மம் இது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.