(Reading time: 40 - 80 minutes)

நெட்டையுமில்லாத குட்டையுமில்லாத இடைப்பட்ட உயரம். ஒடிந்துவிழும் கம்புபோல ஒல்லியான தேகம். மாம்பச்சை நிறத்தில் சிவப்பு கரை புடவை. கொஞ்சமாய் பழும்பேறி சாயம்போய் இருந்த புடைவையென்றாலும் அதை கட்டியிருந்த நேர்த்தி மரியாதையை கொடுக்கும்படி இருந்தது. என்றுமில்லாமல் இன்று அதிகமாய் அம்மாவின் இன்மை வருத்த அவர் விரும்பி கட்டிய புடைவையையே தானும் உடுத்தியிருந்தாள். வீரனைக் காணப்போகிறோம் என்ற ஆர்வத்தையும் தாண்டி வேறு ஏதோ ஒன்று அவளை நெருடியது. அம்மாவின் அருகாமையைத் தரும் புடவை தன் நெருடலைத் தீர்க்கும் என நம்பி இதை கட்டியிருந்தாள். இது வீரனுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் வேறு அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. இருபதுகளின் பிடியில் இருந்தது அவள் வயது. ஆனாலும் பதின்வயது குமரியைபோன்றே இருந்தாள். இடைவரை நீண்டிருந்த கருங்கூந்தலில் கனகாம்பரம் சரமாய் குடியேறி அழகு சேர்த்தது. வாசமில்லா மலர் அது அவளோ வசந்தம் தேடும் கன்னி. அவள் தேடும் வசந்தம் அவன்.

கண்களில் காதலையும் கண்ணீரையும் தேக்கிவைத்து கொண்டு நடந்து கொண்டிருந்தவளை பின்தொடர்ந்தன இரு கண்கள். தன் பின்னால் யாரோ வருவதை உணர்ந்தவள் திரும்பிப்பார்க்க அங்கு சந்தேகிக்கும்படி யாரும் இல்லை. எல்லாம் அவள் அறிந்த முகங்கள்தான். பலர் உள்ளே பூசைக்காக கூடியிருக்க சிலர் வெளிவீதியில் சுற்றிக் கொண்டிருந்தனர்.

சற்றுநேரத்தில் மின் இணைப்பு மொத்தமாய் துண்டிக்கப்பட்டு கோவில் வளவு மொத்தமாய் இருளில் ஆட்பட்டது. இருட்டில் எங்கு செல்வது எப்படி வீரனைக் காண்பது என குடிம்பியபடி நின்றவளின் காலை ஏதோ ஒன்று இறுகபற்றியது போன்று உணர்ந்தாள். அதனிடமிருந்து கால்களை விலக்க முயன்றவளுக்கு சில நிமிடங்களில் விடுதலை கிடைத்தது. குனிந்து காலைத் தொட்டுப்பார்க்க அது பாதசரம் என்பது தெளிவாய் புரிந்தது. கருமேகங்கள் விடுதலை செய்துவிட்டிருந்த நிலவு மீண்டும் ஒளிகொடுக்க ஆரம்பிக்க அதனுடன் இணைந்து வீரன் பற்ற வைத்த தீக்குச்சியும் வெளிச்சம் கொடுத்தது. அந்த சின்ன வெளிச்சத்தில் விடைத்தேடி நிமிர்ந்தாள் தமிழ். அவளின் அத்தனை நேர தேடலுக்கும் அவள் கால்களில் அணிவிக்கபட்டிருந்த பாதசரம் எப்படி வந்தது என்பதற்குமான பதில் ஒளியில் தெரிந்தது. ஒளி கொடுத்தவன் வீரன்.

ஸ்ஸ்ஸ்ஸ்…

கையிலிருந்த தீக்குச்சி எரிந்துமுடிந்து கையைச்சுட்டு விடவும் வீரனைவிட அவனுக்கான வலிக்காக தமிழ் துடித்தாள். இத்தனை நேரமும் அவன் மேல் ஆத்திரம் கொண்டிருந்த மனமா இது என்று அவளுக்கே சந்தேகன் வரும்படியாய் இப்போது அவனுக்காக துடித்தது. தீயாய் எரிந்து கொண்டிருந்தவள் கண்களில் அவன்பட்ட்துமே அவள் கோவம் குறைந்துவிட்டது. அவன் முகத்தில் வலியையும் கண்டவளிடம் அதற்குமேல் கோவம் நின்றுபிடிக்காமல் தன்னிடத்தை காலி செய்துகொண்டு கிளம்பியேவிட்டது.

தனக்காக துடிக்கும் தமிழின் முகம் பார்த்தபடி அவளின் அடுத்த கால்பாதத்தை கைகளில் ஏந்தினான். கைகளில் ஏந்தியிருந்த பாதத்தை மெல்ல தன் மடியினில் வைத்து அடுத்த பாதசரத்தையும் அணிவித்தான். அந்த ஒற்றை பாதசரத்தை சரியாக அணிவித்து அதில் திருகாணியை பொருத்தி அவள் பாதத்தை கீழே விடுவதற்குள் அவளின் பாதங்களில் அவன் கைவிரல்கள் தங்கள் வித்தையை காட்டிவிட்டுருந்தன. பாதங்களில் அவன் காட்டிய குறுகுறுப்புக்கு கொஞ்சமும் சளைக்காமல் அவளது முகமும் ரசங்களின் வகைகளை காட்டிக் கொண்டிருந்தது.

பாதத்தை விடுவித்தவன் அவளின் கைகளை சிறைப்பிடித்தான். அவள் புடவைக்கு பொருத்தமாய் கண்ணாடி வளையல்கள். அவளின் கைகளைப்பிடித்து விரல்களை ஒன்று சேர்த்து ஒவ்வொரு வளையலாக அணிவித்துக் கொண்டிருந்தான். அந்த ஆறு வளையல்களையும் போட்டுவிட அறுபது நிமிடங்கள் தேவைப்பட்டது அவனுக்கு. நிமிடங்கள் கரைந்தனவே தவிர வீரனின் பார்வையில் கட்டுண்டுகிடந்த தமிழ் விடுபடவில்லை.

எங்கிருந்தோ பறந்துவந்த பச்சைக்கிளி ஒன்று வீரனின் தோளில் வந்து நின்றது. புன்னைகையுடன் கிளியைத்தடவிக் கொடுத்தவன் அதை தன் கைகளில் எடுத்து தமிழுக்கு பரிசளிக்க நினைத்தான். அவள் கைகளில் இருத்திக் கொள்ளும் முன் அது அவனிடமிருந்து பறந்து சென்று அவளின் தோள்களில் நின்றுகொண்டது.

வீரன் ..வீரன்…

கிளி தன் கீச்சுக்குரலில் அவனின் பெயரை அழகாய் உச்சரித்தது. அடுத்ததாய் தன் கொஞ்சும் தமிழில் தமிழழகியின் பெயரை கொஞ்சிக் கொஞ்சி உச்சரித்தது. பெயரை கேட்டுக் கொண்டிருந்தவள் சந்தோசத்தில் துள்ளி குதித்தாள். சின்ன சின்ன சந்தோசங்களுக்கெல்லாம் அதிகமாய் மகிழும் இவள்தான் அவனை இடிக்கும் மிகப்பேரிய முடிவையும் எடுப்பாள் என அன்று அவளும் அறிந்திருக்கவில்லை அவனும் அறிந்திருக்கவில்லை.. முதலில் தன் பெயரைக் கேட்வே தமிழ் ஆசைப்படுவாள் என்பதால்தான் கிளி முதலில் தன் பெயரையும் அடுத்து தமிழ் பெயரையும் உச்சரிக்க பழக்கியிருந்தான். அவள் ஆசைகளின் வழியேதான் அவன் வாழ்க்கை என்பதில் தீர்மானமாய் இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.