வீட்டில் இருக்கும் லாரிகளை அனுப்பிவைப்பான்.
எதற்காகவும் தேவநாதன் கவலைப்பட்டதில்லை. சிறுவயதிலேயே குடும்பத்துடன் அதிகமாக ஒட்டாமல் அந்த வீட்டிலேயே ஏதோ கெஸ்ட் போல வளைய வந்தான். அதிகமாக எவருடனும் பேசாத காரணத்தாலும், தாஸின் நிலையை கண்டும் அதிகமாக பேசாமல் தேவைக்கேற்ப சில வார்த்தைகள் பேசினான். அவன் பேசவில்லை என்றாலும் தானாகவே வேலைகள் நடக்கும், அவனது கண் அசைவு கை அசைவு போதும்.
அவனுடைய தாத்தா வைத்தியநாதன், நாட்டு வைத்தியம் கற்று அதற்காகவே தனக்கென இருந்த நிலங்களில் மூலிகை செடிகளை வளர்த்து இலவசமாக வைத்தியம் செய்து வந்தார். பெரும்பாலும் அவரை காண வருபவர்கள் நோயாளிகளாகவே இருந்தார்கள். அவரது மருந்தால் பல வியாதிகள் குணமடைந்த காரணத்தால் அந்த சுற்றுவட்டாரத்தில் அவரை தெரியாத ஆட்களே இல்லை வெளியூரில் இருந்தும் கூட நோயாளிகள் வருவார்கள். அவரது கைராசி அப்படி.
பெரிதாக தாய் தந்தை என்ற பாசம் அற்று இருந்தாலும் வீட்டையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டான் தேவா. தாத்தாவின் மீது மதிப்பு அதிகம், குரு என்றே சொல்லலாம், ஓய்வு நேரத்தில் தாத்தாவிடம் சென்று சில வைத்திய முறைகளை கற்றுக்கொண்டான்.
அவர் ஊரில் இல்லாத நேரம் வைத்தியம் செய்ய முடியாத தருணங்களில் தேவன் வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கலானான். தாத்தாவையும் பேரனையும் யாரும் தடை சொல்ல மாட்டார்கள், யாரும் கேள்வியும் கேட்கமாட்டார்கள். பாட்டியின் பார்வை என்றும் தேவநாதன் மீது இருக்கும், பாசம் அன்பு என அனைத்தும் அவன் ஒருவனுக்கு மட்டுமே வாரி வழங்கினார்.
தேவநாதனின் தந்தை கைலாசநாதனுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கழித்து தாமதமாக தன் மனைவி சிவகாமி மூலமாக பிறந்தவன்தான் தேவநாதன், பிறந்த போது ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவனை துரதிர்ஷ்டசாலியாகவே பாவித்தார்கள் குடும்பத்தினர். அவனுக்கு அடுத்த வருடத்தில் பிறந்த சூர்யநாதனால் நஷ்டப்பட்ட தொழில் வளர்ச்சி பெறவே தேவனை சிறுவயது முதல் அனைவரும் ஒதுக்க, அதனால் பாட்டி கோசலையும் தாத்தா வைத்தியநாதனும் அவனை தங்களுடன் சேர்த்து நல் முறையில் வளர்த்தார்கள்.